டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலகப்புகழ் பெற்ற மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பேர் க்ரில்ஸ்-உடன் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியின் டிரெய்லரை பேர் க்ரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உலகப் பிரசித்திபெற்ற நிகழ்ச்சி “மேன் vs வைல்ட்”. இந்நிகழ்ச்சி டிஸ்கவரி தமிழிலும் ஒளிபரப்பப்படுகிறது. அடர்ந்த காடுகள் மற்றும் பாலைவனங்களில் மாட்டிக்கொண்டால் எப்படித் தப்பிப்பது என்பதை மையக்கருவாக வைத்து பேர் க்ரில்ஸ் என்ற முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர் மற்றும் அவரது குழுவினர் வழங்கும் நிகழ்ச்சி.

உலகெங்கும் உள்ள மக்கள் இந்நிகழ்ச்சியை பெரிதும் இரசித்துவருகின்றனர். இந்நிகழ்ச்சியில் பேர் க்ரில்ஸ்-ற்கு தமிழில் குரல் கொடுப்பவர் விஜய் டிவி புகழ் வாய்ஸ் ஓவர் கலைஞர் “கோபி”. இவரது குரலுக்காகவே தமிழ் மக்கள் பலரும் இந்நிகழ்ச்சியை இரசிக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் இதற்கு முன்னர் ஹாலிவுட் பிரபலங்களான ‘கேட் ஹுட்சன்’, ‘கேட் வின்ஸ்லெட்’, ‘நிக் ஜோனாஸ்’ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் கலந்துகொண்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பை மேலும் உயர்த்தியது. தற்போது அந்த பிரபலங்களின் வரிசையில் இந்திய பிரதமர் மோடியும் இணைந்துள்ளார்!

ஆகஸ்டு 12 அன்று இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது இந்நிகழ்ச்சி. ‘உலகெங்கும் 180 நாடுகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் விலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மோடி பங்கேற்றுள்ளார்’ என்று பேர் க்ரில்ஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி இந்திய வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புலிகள் தினமான இன்று இந்திய புலிகள் கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளையில் பேர் க்ரில்ஸ் Man vs Wild நிகழ்ச்சி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.