மனவெளி திறந்து-14 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்

கேள்வி: வணக்கம் டாக்டர் சிவபாலன், உயிர்மையில் உங்கள் கேள்வி பதில்களை நான் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன்.மிகுந்த பயனுள்ளதாக இருக்கின்றன. எனது கேள்வி, நான் இப்போதெல்லாம் நிறைய கோபப்படுவதாக என் வீட்டில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். ஆம் எனக்கும் தெரிகிறது நிறைய கோபப்படுகிறேன். அப்படி கோபம் வரும்போது மிக மோசமாக நடந்து கொள்கிறேன் கடுமையான வார்த்தைகளால் திட்டி விடுகிறேன் கையில் இருக்கும் பொருட்களைத் தூக்கிப்போட்டு உடைக்கிறேன். அந்த கோபத்தில் இருந்து நான் எப்படி வெளிவர வேண்டும் கோபப்படாமல் நான் எப்படி இருப்பது?

மணிகண்டன், ஆரணி

நன்றி மணிகண்டன். கோபம் என்பது ஒரு உணர்வு. சந்தோஷம், வருத்தம், பயம் போன்ற உணர்வுகளைப் போல கோபமும் ஒரு உணர்வு. உணர்வுகளை பொறுத்தவரையில், எதிர்மறையான உணர்வு என்று எதுவுமில்லை. உணர்வுகள் என்பது நமது விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவை. தன்னிச்சையாக, இயல்பாக ஒரு சூழல் சார்ந்து நமது மனதில் வருபவை. எந்த உணர்வையும் நல்லது, கெட்டது என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது. குறிப்பிட்ட சூழ்நிலையில், அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நமது உணர்வுகள் வெளிப்படுவதுதான் இயல்பானது. சில விஷயங்களுக்கு நாம் கோபப்பட்டுதான் ஆக வேண்டும், கோபப்படாத நிலையே ஒரு ஆரோக்கியமான நிலை என்று சொல்ல முடியாது. “இதுக்குகூட உனக்கு கோபம் வராதா?” என்று நிறைய முறை நாமும் கேட்டிருக்கிறோம், நம்மை பார்த்தும்கூட கேட்டிருப்பார்கள்; உணர்வுகள் என்பதே அப்படியானதுதான். புறச்சூழலை பொறுத்து அது மாறுபடக்கூடியது, நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்களை அல்லது பிரச்சனைகளைத் தீர்த்து ஒரு சமநிலையை ஏற்படுத்துவதுதான் உணர்வுகளின் நோக்கம். நம்மை ஒருவர் ஏமாற்றும்போது அவர்மீது கோபம் வந்தால்தான் அவர் திரும்ப அதை செய்ய தயங்குவார்கள்.

இந்த இயல்பான உணர்வுகள் எப்போது பிரச்சனைக்குரிய ஒன்றாக மாறுகின்றன என்றால், ஒரு பிரச்சனையைச் சரிசெய்து சமநிலையை உறுதிசெய்யும் பிரதான நோக்கத்தில் இருந்து ஒரு உணர்வு விலகி, அந்த உணர்வே ஒரு பிரச்சினையை ஏற்படுத்தினால், அதுவே ஒரு சமநிலையின்மையை ஏற்படுத்தினால், அதன் வழியாக அந்த உணர்வு நம்மையும், மற்றவர்களையும் காயப்படுத்தினால் அந்த உணர்வு சரி செய்யக்கூடிய ஒன்றாக மாறுகிறது.

உங்கள் கேள்வியின் படி, உங்களுக்கானப் பிரச்சினை உங்களுக்கு வரும் கோபத்தினால் அல்ல மாறாக கோபத்தின்போது நீங்கள் வெளிப்படுத்தும் உங்களது நடவடிக்கைகளினால் வருவன. அதுவே மற்றவர்களைக் காயப்படுத்துகிறது, கோபம் என்பது புதிதாக உங்களுக்கு வருவது கிடையாது, ஆனால் கோபத்தில் நீங்கள் நடந்து கொள்ளும்முறை இப்போது புதியதாக மற்றவர்களுக்குத் தெரிகிறது. அதனால் நீங்கள் மாற்ற வேண்டியது உங்களது நடவடிக்கைகளைத்தானே தவிர கோபத்தை அல்ல; கோபம் தவிர்க்க முடியாதது, சில சந்தர்ப்பச் சூழல்கள் சார்ந்தது அது தன்னிச்சையாக உருவாகுவது, ஆனால் கோபத்தில் நீங்கள் வெளிப்படுத்தும் உங்களது நடவடிக்கைகளை உங்களால் தவிர்க்க முடியும். அதற்கு முக்கியமான தேவை அதை நீங்கள் முன்பே உணர வேண்டும். ‘கோபத்தில் நான் இப்படி செய்ய வாய்ப்பிருக்கிறது முடிந்தவரை கோபத்தை எனக்குள்ளே வைத்துக்கொள்ள வேண்டும், பிறரிடம் வெளிப்படுத்தினால்கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்என்று முன்கூட்டியே நீங்கள் உணரும் பொழுதும், கோபம் வரும் சந்தர்ப்பங்களைத் தெளிவாக முன்கூட்டிய அடையாளம் காணுவதின் வழியாகவும்  நீங்கள் வெளிப்படுத்தும் இந்த மோசமான நடவடிக்கைகளின் முறைப்படுத்திக்கொள்ள முடியும். இந்த முறைப்படுத்துதல் ஒரே நாளில் உங்களுக்கு வந்துவிடாது, கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் அணுகுமுறையை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். கோபப்படுவதற்கு எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கிறது, அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதில்தான் உங்களது முதிர்ச்சியும், பக்குவமும் இருக்கிறது. அதேபோல கோபத்தில் நான் பேசும் சொற்கள் ஒரு நீங்காத வடுவாக போய்விடும் ஆபத்து இருக்கிறது. அதை நாமேகூட நிறைய முறை அனுபவப்பட்ட இருக்கிறோம். இதையெல்லாம் நாம் தெளிவாக உணர்வதில் வழியாக நம் கோபத்தை வெளிப்படுத்தும் முறைமைகளை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும்.

முந்தையை கேள்வி -பதில்:https://bit.ly/2WZ0xo4

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com


Tags:
கோபம், டாக்டர். சிவபாலன் இளங்கோவன், ஆத்திரம், சண்டை சச்சரவு