அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், தரநிலையில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஐந்தாவது இடம் வகிக்கும் ரஷ்யாவின் டேனில் மேத்வதேவ்வுடன் மோதினார்.

கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த இப்போட்டியில், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் 19ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் கைப்பற்றியிருக்கிறார்.

இதற்கு முன்னதாக 2010, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்கக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள நடால் தற்போது தனது நான்காவது அமெரிக்க ஓபன் கோப்பையினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற நடலுக்குக் கோப்பையுடன் 27 கோடியே 58 லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

33 வயதான ஸ்பானிஷ் இடது கை வீரர், ரோஜர் பெடரரின் அனைத்து நேர ஆண்களின் சாதனையான 20 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளினை தற்போது நெருங்கியுள்ளார். நடால் இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றால் ரோஜர் பெடரரின் சாதனையைச் சமன் செய்வார்.ஜோகோவிச் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் அடுத்த நிலையில் இருக்கிறார்.