சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்திகள் சிலருடைய வாழ்க்கையையே அடியோடு புரட்டிப்போட்டுவிடுகிறது. ஒரு பிரச்சினையில் நமக்கு என்ன நடக்கிறது என்று தெரியும் முன்பே உலகெங்கும் அது பரவி பல்லாயிரக்கணக்கானோர் அதை பேசி முடித்து விடுகின்றனர். அதன் விளைவாக எத்தனையோ பேருடைய வாழ்க்கை சூறையாடப்பட்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் திருட்டுத்தனமாகவோ பழிவாங்கும் நோக்கத்துடனோ பதிவேற்றப்படும் அந்தரங்க வீடியோக்களால் எத்தனையோ பெண்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள், மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உறவுகள் சிதைந்து போயிருக்கின்றன.

      அந்தரங்க வீடியோக்களால்தான் ஆபத்து வரவேண்டும் என்பதில்லை. உங்கள் கெளரவத்தை குலைக்கும் எந்த ஒரு சிறு சம்பவமும் சிலமணி நேரத்தில் வைரல் ஆகி உங்கள் எதிர்காலமே இருண்டு விடலாம். அப்படி ஒரு சம்பவம் கேரளாவில் அனந்தபத்மநாபன் என்ற 21 வயது இளைஞருக்கு 7 மாதங்களுக்கு முன்பு நடந்தது. ஏழு மாதங்கள் கடந்த நிலையிலும் கூட அதன் விளைவுகள் அவரை துரத்திக்கொண்டிருக்கின்றன.

      கடந்த மார்ச் 26ம் தேதி அந்த இளைஞர் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி  வெளியே வந்ததாக காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு அவரது காரில் இருந்து வெளியே தள்ளப்பட்டார். அந்த இளைஞர் தான் கொஞ்சம் மருந்துகளும் பழங்களும் வாங்குவதற்காகவே வெளியே வந்ததாக எவ்வளவோ மன்றாடியும்கூட அவர்கள் கேட்காமல் காவல்துறை வாகனத்தில் அவரை ஏற்றி வழக்குப்பதிவு செய்தனர். இரவு ஏழு மணிக்கு அவர் கைது செய்யப்பட்டு ஒன்பது மணிநேரம்கூட ஆகாத நிலையில் வெளிநாட்டில் இருக்கும் அவரது நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நீ போலீஸிடம் சிக்கிக்கொண்டாயா? என கேட்டு அந்த நண்பர் அதிர்ச்சியுடன் அழைத்திருந்தார். அவர் நண்பர் ஒருவர் அனுப்பிய வீடியோவில் அனந்தபத்மநாபன் கைது செய்யப்பட்ட காட்சி இருந்தது. கொல்லத்தை சேர்ந்த ஒரு யூடியூப் சேனல் அவர் கைது செய்யப்பட்ட காட்சியை பதிவுசெய்து வெளியிட்டிருந்தது.

      வேறு பல யூடியூப் சேனல்களும் அதை பகிர்ந்த சில மணி நேரங்களில் அந்த வீடியோ வைரல் ஆனது. ஆனால் அதன் விளைவாக அனந்தபத்மநாபனுக்கு என்ன நடந்தது. அவர் அபராதம் கட்டி அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டபிறகும்கூட அதன் விளைவுகள் முடியவில்லை. திருவனந்தபுரத்தில் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த அவரை இந்த வீடியோ மூலம் எல்ல இடங்களிலும் சுலபமாக அனைவரும் அடையாளம் கண்டுகொண்டார்கள். அவரால் அந்த வேலையில் தொடரமுடியவில்லை. வேலையை ராஜினாமா செய்த அவர், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். தன் வாழ்க்கையில் எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது என்ற மனநிலையில் காவல்நிலைய கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்து தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறினார். உடனே அவர்கள் அவரை தொடர்புகொண்டு தற்கொலையிலிருந்து தடுத்து நிறுத்தினார்கள்.

      அந்த சம்பவம் நடந்தபோது அதை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் காவல்துறையின் அத்துமீறிய செயலை பாராட்டியதுடன் அனந்தபத்மநாபன் காவல்துறையினரிடம் கெஞ்சுவதை கேலிக்குள்ளாக்கினர். பி.ஜே.பி யின் மாநிலங்களவை உறுப்பினர் நடிகர் கோபி காவல் துறையின் செயலைப் பாராட்டினார், “காவல்துறையின் செயலை விமர்சிப்பவர்கள் கண்ணத்தில் அறையப்படவேண்டும், மக்கள் காவல்துறைக்கு கட்டுப்படாவிட்டால் ராணுவம் அழைக்கப்படவேண்டியிருக்கும். ராணுவம் மலையாளிகள் என்றோ மற்றவர்கள் என்றோ பார்க்காது” என்றார்.

      அனந்தபத்மநாபனை தடுத்த காவல்துறை அதிகாரி “நான் எல்லோருக்கும் என் தொலைபேசி எண்ணை கொடுத்திருக்கிறேன், எனக்கு போன் செய்திருந்தால் மருந்துகளையும் பழங்களையும் நானே வாங்கி கொடுத்திருப்பேன்” என்று ஊடகங்களில் பேட்டியளித்தார். பொதுவாக லாக்டவுன் காலத்தில் கேரள காவல்துறையினருடைய இத்தகைய செயல்பாடுகள் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. பிறகு அனந்தபத்மநாபன் வீட்டிற்கு வந்த அந்த காவல்துறை அதிகாரி அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். ஆனால், அதற்குள் அந்த வீடியோ எல்லா இடங்களுக்கும் பெருமளவு பரவிவிட்டது. எங்கு போனாலும் அனந்தபத்மநாபன் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டார். “என்னுடைய அண்டைவீட்டார்கள்கூட என்னை ஒரு குற்றவாளியைப்போல பார்த்தனர். ஒரு முறை நான் என் லேப்டாப்பை சரி செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடைக்கு செல்லும்போது அங்கிருந்த ஒருவர் என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னைப்பற்றி தன்னுடன் இருந்தவரிடம் கேலியாக ஏதோ கூறினார். பிறகு இருவரும் என்னைப்பற்றி வாழைப்பழம் வாங்க வெளியே வந்தவன் என்று சொல்லி சிரித்தார்கள். நான் அந்த வீடியோக்கள் முழுமையாக நீக்கப்படுவதற்காக நீதிமன்றத்திற்கு போகவும் தயார். நான் கொல்லம் காவல்துறை ஆணையருக்கு பல புகார்கள் அனுப்பினேன் ஆனால் இதுவரை நடவடிக்கையில்லை” என்கிறார். ஆனால் கொல்லம் காவல்துறை ஆணையர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரல் ஆகிவிட்டால், அதை முழுமையாக நீக்குவது இயலாத காரியம். அந்த வகையில் அனந்தபத்மநாபனுக்கு நிகழ்ந்த சோகம் எவருக்குவேண்டுமானாலும் நடக்கலாம். எவருடைய தனிப்பட்ட விவகாரமும் பொது விவகாரமாகி அவரது வாழ்வை சீர்குலைக்கக்கூடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

நன்றி : TELEGRAPH