உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் செல்போனில் பார்க்கும்படி ஒரு திகில் டி‌வி தொடரை எழுதுகிறார். இதில் என்ன சிறப்பு என்றால் இந்த தொடரை இரவில் மட்டுமே பார்க்க முடியும். இத்தொடரின் பெயர் ஆஃப்டர் டார்க் (After Dark) இது 10 இல் இருந்து 12 அத்தியாயங்கள் கொண்டது. இதை கியூபி (Quibi) எனப்படும் செல்போன் செயலியில் (App)  மட்டுமே பார்க்கமுடியும். இந்த செயலியை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

குயிக் பைட்ஸ் (quick bites ) என்பதன் சுருக்கமே கியூபி (Quibi). இந்த செயலியில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் விருப்பப்படி நிகழ்ச்சிகளை பார்க்கலாம். இதை டிஸ்னியின் (Disney) முன்னாள் தலைவர் ஜெப்ரியும் எச்‌பி (HP) இன் தலைவர் மெக் வொயிட்மேனும் தொடங்கி இருக்கிறார்கள்.

ஸ்பீல்பெர்க் தனது ஆஃப்டர் டார்க் தொடரை இரவில் மட்டுமே ஒளிபரப்பும்படி கேட்டுக்கொண்டதை அடுத்து கியூபி (Quibi) இன் மென்பொருள் வல்லுநர்கள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் இந்த செயலியை பயன்படுத்துபவர்களின் செல்போனிலிருக்கும் கடிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்திருக்கிறார்கள்.

அதன்படி மக்கள் உலகின் எந்தப் பகுதியிலிருந்தாலும் மாலை நேரம் முடிந்து இரவு ஆரம்பிக்கும்போது மட்டுமே இந்த தொடரை அவர்களால் பார்க்க இயலும். மீண்டும் சூரியன் உதிக்கும் நேரம் இந்த தொடர் மறைந்துவிடும்.

“ஸ்பீல்பெர்க் எங்களிடம் வந்து தன்னிடம் “ஒரு அட்டகாசமான திகில் கதை இருப்பதாகவும் தானே அதை எழுதப் போவதாகவும் சொன்னபோது நாங்கள் உற்சாகமடைந்தோம். ஏனெனில் அவர் எழுதி நீண்ட காலம் ஆயிற்று. உடனேயே இதற்கு ஒப்புக்கொண்டோம்” என ஜெப்ரி கூறினார்.

ஸ்பீல்பெர்க் ஏற்கனவே ‘ஆஃப்டர் டார்க்’ தொடரில் ஆறு அத்தியாயங்களை எழுதிவிட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.

பரபரப்புக்கும் வித்தியாசமான கதை சொல்லலுக்கும் பெயர்பெற்ற ஆஸ்கார் விருது வாங்கிய ஸ்பீல்பெர்க் பல காலம் கழித்து ஆஃப்டர் டார்க் தொடரை எழுதுவதும், அந்த தொடரின் தன்மை கருதி அதை இரவில் மட்டுமே வெளியிடுவதும் உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.