இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றத்தை பின்னுக்குத் தள்ளி உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது #Pray_for_nesamani . “பிரண்ட்ஸ்” திரைப்படத்தில் வைகைப் புயல் வடிவேலுவின் பெயர் நேசமணி. அந்த திரைப்படத்தில் வரும் நகைச்சுவையை வைத்து ஒருவர் சமூகவலைத்தளத்தில் ஒரு கமெண்ட் போட அது திடீரென்று அது ஒரே நாளில் அது உலக அளவில் வைரல் ஆனது.

அதனைத் தொடர்ந்து வடிவேலு அவர்கள் youtube channel ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அந்தப்பேட்டியில் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தில், தான் பல மாற்றங்களைச் செய்துதான் படம் வெற்றிபெற்றது என்றும் அர்த்தத்தில் பேசியதோடு சிம்புதேவன் குறித்துப் பேசுகையில் ‘அந்தப் பையன், அவன்’ என்றும் குறிப்பிட்டார்.

23ஆம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 24ஆம் புலிகேசி பல பிரச்சனைகளால் ரத்தானது. இதன் காரணமாக வடிவேலு மற்ற படங்களில் நடிக்கத் தடைவிதித்துள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதற்கு இயக்குநர் சிம்புதேவனும் தயாரிப்பாளர் சங்கரும்தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்தார் வடிவேலு.

இந்தப் பேட்டி வெளியானதிலிருந்து பலரும் வடிவேலுவுக்குக் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர். சிம்புதேவனின் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் ‘மூடர் கூடம்’ திரைப்படத்தை இயக்கிய நவீன், வடிவேலுவைக் கண்டித்து ட்வீட் செய்திருந்தார். இதனை அடுத்து நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி தனது டிவிட்டர் பக்கத்தில் “அண்ணன் வடிவேலு பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் சங்கர், சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசியிருப்பது, பெரும் வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரியது. சிம்பின் க்ரியேட்டிவ், ‘புலிகேசி’ தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கோலி சோடா திரைப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் “தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்துக்கூட சித்தம் கலங்கும்போல! உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி அவர்களே… ஏணிகளை எட்டி மிதித்து அதைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தத் தொடர் கண்டனங்கள் நகைசுவை நடிகர் வடிவேலுவின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.