இந்த தன்னொதுக்க (LOCK DOWN & SOCIAL DISTANACE) நாட்களில் நம்மில் அநேகர் திரைப்படங்கள் பக்கம் ஒதுங்கினார்கள். நானும் அப்படி ஒதுங்கியவர்களில் ஒருவன். பலர் மலையாளத் திரைப்படங்களை ரசித்து மகிழ்தனர். என் பாதையோ வேறு விதமாக அமைந்தது.

ஏ வி எம் மின் “குழந்தையும் தெய்வமும் “ பார்த்தேன்  . இது எனக்கு எத்தனாவது தடவை என்று ஞாபகம் இல்லை . இதில் ஜெயசங்கர் , ஜமுனா , மேஜர் சுந்தர் ராஜன், வரலட்சுமி , நாகேக்ஷ் தோன்றியிருந்தாலும் குட்டி பத்மினியின் நடிப்பு நம் மனதை விட்டு  சுலபத்தில் அகலாது . அவருக்கு அமைந்த பாத்திர அமைப்பு அப்படி . போதாதற்கு குட்டி பத்மினிக்கு இரட்டை வேடங்கள் . இந்தப் படத்தை வெளி வந்த காலத்திலேயே பார்த்திருக்கிறேன் . அது முதலே குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரை ஓவியங்கள் என் விருப்பத்திற்கு உரியன .

முக்தா பிலிம்ஸின் “ கோடை மழை “, முத்துராமன் கே ஆர் விஜயா நடித்த “ கண்ணே பாப்பா “ ஏ பி நாகராஜனின் “ வா ராஜா வா ,” மோகன் சுமித்ரா நடித்த மழலை பட்டாளம் “ “ கைதி கண்ணாயிரம் “. மேலும் சமீபத்திய “ பசங்க “,மணிகண்டனின் “ காக்கா முட்டை “  “ வாகை சூட வா “.

மொழி பெயர்ப்பு படங்களாக “லிசா “  “ மைடியர் குட்டி சாத்தான் “ போன்றவைகள்

இது தவிர ஆனந்த விகடனில் அப்போது வெளியாயிருந்த “ ஆலமரம் “ ( ? ) என்ற கதையும் படமாக்கப் பட்டது .

எம் ஜி ஆரின் மிகப் பழைய படங்களிலும் சரி கடைசி வரைக்குமான படங்களிலும் குழந்தைகள்  ( திருடாதே , அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன் ,  இத்தியாதிகள் )  மிக   இயல்பாகவே வந்து போனார்கள் . ஜாவர் சீத்தாராமனின் “ ஜீபூம்மா “ பாத்திரம் குழந்தைகளை மகிழ்விக்கவே .

பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரத்தின் பல பாடல்கள் குழந்தைகளின் பண்பு சிறப்பாக அமைய வேண்டுமென்ற நோக்கத்தில்  எழுதப்பட்டவைகள் .

குழந்தைகள் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெருவதிலும் நிச்சயம் இல்லை . இதனால் இவ்வகை படங்களை தயாரிப்பதில் போட்டா போட்டி இல்லை .

பொதுவாக இந்த திரைப்படங்களில் குழந்தைகள் பாத்திரங்கள் நம் மனதில் பதியும் விதமாக காட்சிப் படுத்தப் பட்டிருந்தாலும் குழந்தையின் குழந்தமையை நாம் நெருங்கும் விதமாக அமையவில்லை என்பதும்  உண்மை.

இவைகளெல்லாம் எனக்குப் போதவில்லை என்பதையும்  உணர்வில் துல்லியமாக உணர்ந்தேன் .

இதன் பொருட்டு நான் குழந்தைகளுக்கென்றெ எடுக்கப்பட்ட  திரைப் படங்கள் பக்கம் நகர்ந்தேன் .  சர்வ தேச , மற்றும் இந்திய “ சிறுவர்களுக்கான அமைப்புகள் “ நடத்தும் விழாக்களில் பங்கு பெறும் திரை ஓவியங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன் .

இவைகளெல்லாம்  பெரு வனத்தின் சின்னச் சின்ன ஓடைகளே . இவ்வோடைகளில்  கண்களுக்கும் கருத்துக்கும்  இனிய அழகிய மீன்களை காணலானேன் .

1954 ல் ஜவஹர்லால் நேரு சிறுவர்களுக்கான  திரைப் பட இயக்கம் ஒன்றை துவங்கினார் . அதன் தலைமை அலுவலகம் மும்பையில் ( அப்போதைய பம்பாய் ) அமைந்தது . இது மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் வந்தது . பின்பு ஹைதராபாத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை CHILDREN FILM FESTIVEL OF INDIA (CFSI) சார்பாக சர்வ தேச திரைப்பட விழாவும் உண்டு . இரண்டிலும் விருதுகளும் அங்கீகாரமும் உண்டு. சத்தியஜித் ரேயின் படம் ஒன்று விருது பெற்றது  மலையாளத்திலிருந்து “ மை டியர் குட்டிச் சாத்தான்” னும் விருது பெற்றது

இத்தனை ஆண்டுகளில் தமிழில் இருந்து விருது பெற்ற திரைப்படம் ஒன்றே ஒன்று என்றால் அது மணிகண்டனின் “காக்கா முட்டை“.

“காக்கா முட்டை“யின் களம் புதிது . குழந்தைகள் குழந்தைகளாக சித்தரிக்கப் பட்டார்கள். குழந்தைகள் மட்டுமல்லாமல் ஒவ்வோரு பாத்திரங்களும் இயல்பாக அமைந்திருந்தது.

இனி இவ்வகை (சர்வதேச மற்றும் இந்திய கவனம் பெற்ற) திரைப்படங்களை தனித்தனியாக பார்க்கலாம்.

தொடரும்