படத்திற்குப் படம் தன்னுடைய கிராஃபை உயர்த்திக்கொண்டே சென்ற செல்வராகவனுக்கும் தமிழ்ச் சினிமா தன்னுடைய வழக்கமான கம்ர்சியல் தந்திரத்தை அளித்து முடக்கிவைத்திருக்கிறது என்றுதான் இக்கட்டுரையை ஆரம்பிக்கவேண்டி இருக்கிறது.
யார் இந்த செல்வராகவன் என்று கேட்டால், சினிமா தெரிந்த, சினிமாவை நேசிக்கிறவர்கள், “தமிழ்ச் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய இயக்குநர்களின் பட்டியலில் ஒருவர்” என்பதைப் பதிலாகக் கூறுவார்கள்.
தன்மீதான கழிவிரக்கச் சிந்தனைகள், பிறர்மீதான தப்பபிப்ராயங்கள், எதையோ தொலைத்த சோகம், சமூக கொடுமைகளால் அடையும் விரக்திகள், ஏமாற்றங்கள், நயவஞ்சங்கள், காதல், நிறைவேறாத காம இச்சைகள், அன்பை தேடி அலையும் ஆத்மாக்கள் என தன் கதாபாத்திரங்கள் மூலம் ஒட்டுமொத்தமாக நாம் பார்த்தவை, ரசித்தவை அனைத்தும் செல்வராகவனின் தனிப்பட்ட உலகமே. ஆரம்பத்தில் 3 நான்கு படங்களில் நாம் ரசித்த விஷயங்களே திரும்ப திரும்ப வேறு களத்தில் அவர் சொல்ல முற்பட்டதை அவரது ரசிகர்கள் எளிதில் கண்டுபிடித்துவிட்டார்கள். இருந்தும் அதில் அவர் தனக்கென ஒரு திரைமொழியை உருவாக்கத் தொடங்கி அதில் தன்னுடைய கதாபாத்திரங்களை வைத்து காதல், காமம், நட்பு, இவற்றிக்கிடையில் மீண்டும் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அக்காலகட்ட தமிழ்நாட்டு இளைஞர்களின் உளவியலும் அப்படித்தான் இருந்தது. நிறைவேறாத ஒருதலை காதலிலிருந்து, நிறைவேரிய காம இச்சைகள் என இரண்டு பரிமாணங்களை அப்பட்டமாகக் காட்டத் தொடங்கினார் செல்வராகவன்.
2002 ஆம் ஆண்டு ‘துள்ளுவதோ இளமை’ கதை எழுதி அவரது அப்பா கஸ்தூரி ராஜா இயக்குகிறார். செல்வா, கதை ஆசிரியராக இருந்தாலும் முழுக்க முழுக்க அக்மார்க் செல்வராகவன் படமாகவே துள்ளுவதோ இளமை இருந்தது என்பதை அவர் அதற்கடுத்து இயக்கிய படங்களில் சாயலே சாட்சி. ‘வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே… இலவசமாய் தருவேன் எந்தன் இதயம்தானே…’ என்ற எழுத்துக்கும் சொந்தக்காரர், ஆரம்பம் முதலே எழுத்து, இயக்கம், படிப்பு என திரைமொழிக்கு அடித்தளமாகப் பார்க்கப்பட்ட அனைத்திலும் முதிர்ச்சியுடன் காணப்பட்டவராக செல்வா தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.
பால்யகாலத்தில் இளைஞன் இளைஞிக்கும் இடையே ஏற்படும் நட்பு கலந்த காதல் அல்லது காதல் கலந்த நட்பு இடையில் வயதிற்கே உண்டான எதிர்பாலினத்தின்மீதான ஈர்ப்புகள் என தமிழ் சினிமா ‘பி’கிரேடு வகை திரைப்படங்களில் சொல்லிவந்த கதைக்கருவை, பள்ளி மாணவர்களை வைத்து இந்த முரண்பட்ட ஆசைகளை ஒரு பொது தளத்தில் வைத்து ஆராயவேண்டிய பிரச்சினையாக செல்வா துள்ளுவதோ இளைமையை உருவாக்கியிருப்பார்.
இதற்கு முன்பு தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் ஸ்ரீதர், கே.பாலசந்தர் போன்றவர்களால் பேசப்பட்ட முக்கோண காதல் கதை, முரணான காதல் கதை, தவறான உறவுமுறையில் ஏற்படும் காதல்கள் என்ற வரிசையில் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின்மூலமாக மெல்லிய நூலிழையில் நுழைந்தார் செல்வராகவன்.
அடுத்து காதல் கொண்டேன் 2003. பெண் பித்து பிடித்த நாயகன், அவளுக்காக எதையும் செய்ய துணிபவன். ஓரளவிற்கு கமல் நடித்த குணா படத்தின் அடிநாதம்தான் என்றாலும் கால இடைவெளியில் ஆண் பெண் உறவுமுறைகளுக்கு இடையே மலரும் காதல்-நட்பு குறித்த பார்வைக்கு விடையளித்தது காதல் கொண்டேன்.
“நீ எனக்கு பிரண்ட், அவன் எனக்கு லவ்வர், இந்நேரம் அவன் இருந்துர்ந்தா எப்படி இருக்கும் தெரியுமா?” என சோனியா அகர்வால் தனுஷிடம் சொல்லும் காட்சியில் தனுஷ் நிலை என்ன? ஏன் அவள் நாம் எதிர்பார்ப்பதை நம்மிடம் கொடுக்காமல் இன்னொருவனிடம் தேடுகிறாள் என்பதில் குழப்பம். உன்னை, அன்பின் எந்த எல்லைகளுக்கும் என்னால் கொண்டு செல்ல முடியும். ஆனால் காமம் மட்டும் இன்னொருவனுடன் என சித்திரிக்கப்பட்டிருக்கும் சோனிய அகர்வாலின் மனநிலை என்ன? தற்காலத்தில் உளவிக்கொண்டிருக்கும் பெஸ்டி தொடர்பான பிரச்சினைகளுக்கு ஓரளவிற்கு காதல் கொண்டேன் படம் மூலம் அப்போதே செல்வா விடையளிக்க முயற்சித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
காதல் கொண்டேன் படத்தில் பேசப்பட்ட காட்சிகள், பொதுவாக பெண்களின் உளவியல் சிக்கல்களுக்கும் ஆண்களின் புரிதலுக்கும் இடையே ஏன் இத்தனை வேறுபாடுகள் இருக்கிறது என கண்டறிய முற்பட்ட படமாகப் பார்க்க தோன்றுகிறது. சொல்லமுடியாத உணர்வுநிலைகளும், புரிந்துகொள்ளமுடியாத ஆசைகளையும் அடுத்தடுத்து படமாக்கத் தொடங்கினார் செல்வா.
7ஜி ரெய்ன்போ காலனி (2004). இரண்டு படங்களில் காதல் முதிர்ச்சியடைந்த செல்வராகவனின் அடுத்த படைப்புதான் 7ஜி ரெய்ன்போ காலனி. காதலின் உச்சநிலை காமம் அல்லது காமத்தின் மென்வடிவம் காதல் என இரண்டு மெல்லிய கோட்டிற்கிடையில் பயணித்த காதல் படங்களில் 7ஜி ரெய்ன்போ காலனிக்குத்தான் எப்போதுமே முக்கிய இடம். ஊரைச்சுற்றிவிட்டு வெட்டியாக பொழுதைப்போக்கும் நாயகன், தமிழ்ச் சினிமாக்களில் 80% இளைஞர்களின் நிலை இதுதான் என்றாலும் செல்வராகவனின் இளைஞன் சற்றே வித்தியாசமானவன். அவனுக்குத் தெரியும். நான் உருப்படாதவன், கேப்மாரி, மொள்ளமாரி என்று அதை எந்தவிதத்தில் யாருக்காகவும் எளிதில் மாற்றிக்கொள்ள தெரியாதவன் அவன். ஆனாலும் அவனுக்குள் நுழையும் காதல் அதை எந்தவிதத்தில் பக்குவப்படுத்துகிறது என்பதுதான் செல்வாவின் டச் இருக்கிறது.
அக்கக்காக பிரித்துப்போட்ட மோட்டார் பாகங்களுக்கு மத்தியில் என்ன செய்வதென்று தெரியாமல் நாயகன் அமர்ந்திருக்கிறார். இவனையா நம்பி இந்த வேலையை செய்ய சொன்னோம் என்ற அதிர்ச்சி காதலிக்கு. இங்கு செல்வராகவன் காதல் என்ன செய்யும் என்று பார்வையாளர்களுக்கு உணர்த்த முற்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். “கதிர் நான் உன்ன காதலிக்கிறேன்…” என்று எந்த இடத்தில் எந்த நேரத்தில் தெரிவிக்கபட்டதோ அந்த இடத்தில் கதிர் அதாவது அந்தக் கதாபாத்திரத்தின்மீதுள்ள அனைத்தும் உருமாற்றமடைந்து சாதாரணன் ஆகிறார். பிரித்துப்போட்ட பாகங்களை ஒவ்வொன்றாக சரிசெய்கிறான் வேலை கிடைக்கிறது. இது ஒருபுறம் என்றால் அதுவரை திட்டிக்கொண்டே இருந்தே அப்பாவிற்கு இவனது வேலை எந்தமாதிரியான உறக்கத்தை அந்நாளில் அளிக்கிறது என்பதோடு அந்தக் காட்சி நிறைவுறும்.
இப்படியாக தனது கணம்பொருந்திய கதாபாத்திரங்கள் மூலம் படத்திற்குப்படம் தனக்கென திரைமொழியை கைவசப்படுத்தினார் செல்வராகவன். அவர் அடுத்து இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், மயக்கம் என்ன என்ற அத்தனை படங்களுமே எழுதுவதற்கும் நிறைய இருந்தாலும் மூன்று படத்தோடு இந்த வருடம் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன்.
ஹேப்பி பர்த் டே செல்வராகவன்!