ன்றைக்கும் இதன் கார்த்திக் ரேவதி எபிஸோடை முன்வைத்து தங்கள் கதையின் முதற்பாதியைத் துவங்க நினைத்துக் கதை பண்ணுகிற பலரும் கோடம்பாக்கத்தைத் தாண்டி அருகாமை ஆந்திர கேரளங்களிலும் உண்டு.பழைய காதலனாக மனோகர் எனும் சிறு பாத்திரத்தில் வந்தது தெரிவதற்குள் கொல்லப்படுகிற பட்டாம்பூச்சிக் காதல்யுவனாக கார்த்திக் தோன்றியது அந்தக் காலகட்டத்தின் இளம்புதுக் காதல்ராஜாவாக அவரை ஆக்கித் தந்தது.

மறக்க விரும்பாத  பழைய காதல் மீதான பரிவேக்கத்தை ரேவதி அழகாக முன்வைத்தார்.தகப்பனிடம் திருமணம் வேண்டாம் என்று தவிர்க்க முடியாத ரேவதி தன்னை மிகவும் விரும்பி மணமுடிக்கும் மோகனோடு டெல்லி செல்கிறார்.புதிய வாழ்வின் ஜிகினாஜீரா எல்லாம் அற்றுப் போய் தன்னிடம் முதல் பரிசாக மனைவி கேட்கும் விவாகரத்தை அவள் விருப்பப் படியே அவளுக்கு வழங்க முற்படுகிறான் கணவன்.நீதிமன்றம் ஒரே வீட்டில் சில காலம் வாழ அறிவுறுத்துகிறது.அதன் முடிவில் மலரினும் மெல்லிய கணவனின் மென்மனதின் முன் பிடிவாதங்கள் அற்றுப் போய் விவாகரத்தை ரத்து செய்துவிட்டு வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள் தம்பதிகள்.கொஞ்சம் மிஞ்சியிருந்தால் மோகன் பாத்திரம் செயற்கைவீதிகளுக்குள் கால்பதித்திருக்கும்.

இளையராஜா இன்னொரு இயக்குனராகவே செயல்பட்டார்.இதன் தீம் ம்யூசிக் இழைகளை மனனம் செய்திருக்கும் பெருங்கூட்டத்தில் நானும் ஒருவன்.மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ பாடல் இன்றும் சோகதேசத்து ஆன்ம கீதமாய் வாதையின் பெரும்பாடலாய் நிரந்தரித்திருக்கிறது.சின்னச்சின்ன வண்ணக்குயில் பாடல் ஏகாந்தத்தைப் படமாக்கிய தமிழ்ப் பாடல்களில் இன்னொரு நல்வைரம்.பனி விழும் இரவு சொல்ல முடியாத காதலின் வதங்கலை அழுத்தமாய்ப் பதிந்தது.நிலாவே வா பாடல் ரேடியோ ஹிட்களில் முதலிடத்தைப் பல காலம் தன்னகத்தே வைத்திருந்தது.

ஒரு முறை மாத்திரம் நிகழும் அற்புதமாகவே இந்தப் படத்தைத் தன் ஒளிப்பதிவால் ஸ்ரீராமும் இசையால் இளையராஜாவும் குரலால் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் சித்ராவும் வரிகளால் வாலியும் இயக்கத்தால் மணிரத்னமும் வார்த்திருந்தார்கள்.இதே படத்தின் திரைக்கதையை  சுட்டுப் பொறித்து பாதிக் கொதியலாக பின் நாட்களில் ராஜாராணி என்றொரு படம் வந்தது.நிஜத்துக்கு அருகாமையிலிருந்தாலும் நிழல் நெளிந்து தரையில் வீழ்ந்தாகவேண்டும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஓங்கி ஒலித்த ராகமாலிகையாக இந்தப் படம் இன்றும் எல்லோரின் பெருவிருப்பமாய்த் தனிக்கிறது.