பஞ்சு அருணாச்சலத்தின் பி.ஏ.ஆர்ட் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 1990ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம், ‘மைக்கேல் மதன காமராஜன்’. உலகெல்லாம் காணக் கிடைக்கிற தந்தையும் மகனும் சாயல் ஒற்றுமை, இரட்டைப் பிறவிகள் போன்ற நூலாம்படை லாஜிக்குகளை வைத்துக்கொண்டு எண்ணற்ற இரட்டைவேட படங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஒருவகையில் மது அருந்துபவர்களுக்குத் தன்னை மறக்கத் தேவையான கூடுதல் போதைபோலவே ஒரே நாயகனின் இரட்டை வேடமேற்றல் ரசிகனுக்கு உளத் திருப்தியைத் தந்திருக்கக்கூடும். அப்பாவும் இரு மகன்களும் என்று அதுவே மூன்றுவேடப் படங்களானது. ஒருவருக்கொருவர் சம்பந்தம் இல்லை என்கிறரீதியிலும் படங்கள் வந்தன.
கிரேஸி மோகனின் எழுத்தோடு, இளையராஜா இசையில், சிங்கிதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ நான்கு எனும் எண்ணைக்கொண்டு நாயகத்துவத்தை வகுத்தது. கமல்ஹாசனின் திரைவாழ்விலும் மெச்சத்தக்க பெயரைப் பெற்றுத்தந்தது. குரல், உடல் மொழி, நடை, என பாத்திரங்களுக்கு இடையில் அவர் காண்பித்த நுட்பமான வேறுபாடு ரசிக்க வைத்தது. பாலக்காட்டு பிராமணத் தமிழும், லேசான சென்னைத் தமிழும், வெளிநாட்டிலிருந்து பிறந்தகம் திரும்புகிறவனின் தமிழும், குறைவாகவே எப்போதும் பேசுகிற மைக்கேலின் தமிழுமாக வசன உச்சரிப்பிலும் வித்தியாசம் காட்டினார் கமல்.
இதன் மைய இழை உறவினர் சதியால் பிரிந்தவர் கூடினால் எனும் ஒற்றை இழை. நாசர், நாகேஷ், எஸ்.என்.லட்சுமி, டெல்லி கணேஷ், ‘பீம்’ பிரவீண் குமார், வெண்ணிற ஆடை மூர்த்தி, அனந்து, சந்தானபாரதி, ஆர்.எஸ்.சிவாஜி என எல்லோருடைய வாழ்விலும் பெருமைக்குரிய ஞாபகவில்லையாகவே இந்தப் படம் மாறியது. கதையின் மையக்கரு ஆள் மாறாட்டக் குழப்பம் என்றாலும்கூடக் குழப்பமற்ற திரைக்கதையும் எடுத்த விதமும் படத்தை நிமிர்த்தித் தந்தன. ஊர்வசி இந்தப் படத்தின்மூலமாகத் தன்னை உபாசிக்கிறவர்களின் எண்ணிக்கையைப் பலமடங்கு பெருக்கினார். திருவிழாக் காலத்துக் கொண்டாட்ட மனோநிலையாகவே இந்தப் படத்தின் பாடல்களை உண்டாக்கினார் ராஜா. ‘சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்’ கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு வழியாகக் கேரளாவுக்குச் செல்லும் தென்னங்காற்று கலந்த இந்தப் பாடல் பலகாலம் தமிழர் கீதமாக ஒலித்தது. நாகேஷுக்கும் கமலுக்குமிடையே நடிப்பின் வழி யுத்தமே நடந்தது எனலாம்.
மைக்கேல் மதன காமராஜனின் மாபெரிய பலங்களில் ஒன்று, எளிய திரைக்கதை போலத் தோன்றினாலும் யூகிக்க முடியாத அதன் திருப்பங்கள்தான். இரட்டை வேடப் படம் என்றால் ஆள் மாறாட்டம், அதனால் ஏற்படும் குழப்பம் என்று வழக்கமான செலுத்துதல் இருக்கும். இங்கேயோ வேடங்கள் நான்கு.
‘மாண்புமிகு குத்துவிளக்கை அமைச்சர் ஏற்றுவார்’ எனக் கிடைத்த இடத்திலெல்லாம் சிரிக்க வைத்துச் சிதறடித்தார் கிரேஸி.
அவினாசி நாகேஷைப் பொறுத்தவரையில் எதிரே இருப்பது மதன். உண்மையில் அங்கு மாறியிருப்பது ராஜு. பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டால் திருப்பித் தந்துவிடுவதாக மதன் சொன்னபோதெல்லாம் அதைக் கேட்காமல், மதன் கெட்டு ராஜு வந்தபிறகு ராஜ நம்ஸ்காரம் செய்து, பயனற்றுப் போகும். தன் இருபத்து ஐந்தாயிரம் கடன் குறித்து நினைத்த மாத்திரத்தில் மதன் பாடத் தொடங்க, ‘என்ன சார், என் கஷ்டத்த சொல்லிட்டிருக்கேன், இவ்வளவு அசிங்கமா பாட்றிங்க?’ என்பார் நாகேஷ். ‘அசிங்கம்னா ஓரளவுக்கு சுமாரா பரவால்லாம நல்லாவே பாடறிங்க’ என்று சமாளிப்பார். ஆனாலும் அது பலனளிக்காது.
கெஞ்சிக்கொண்டே ‘ஏழப் பாட்டி எதோ தெரியாத்தனமா திருடிட்டேன்’ என்று காமேஸ்வரனை நடுக்கூடத்துக்கு நகர்த்தி வருவார் பாட்டி. வழியிலேயே மடியில் கட்டிய பொருட்களை சேஃபாக உதிர்த்திருப்பார். கூட்டத்தைக் கூட்டி, தன் பேத்தி கையைப் பிடித்து காமேஸ்வரன் இழுத்துவிட்டதாகப் புதுக் கதையைத் தொடங்குவார். பாட்டியைக் காட்டிக்கொடுக்காமல் அமைதிகாக்கும் திரிபுரசுந்தரியின் பரிதவிப்பு அபாரம். இந்த ஐந்து நிமிட அதே கான்ஸெப்ட் பிற்பாடு வடிவேலுவின் ஆகப் புகழ்பெற்ற கையப் பிடிச்சு இழுத்தியா என்று வேறொரு வலம் வந்தது.
மதனின் ஆங்கிலப் புலமையை வியந்தபடி கேச் மை பாயிண்ட் என்று சொல்லிப் பார்த்து ‘இதெல்லாம் அப்டியே வர்ரதுதான் இல்ல’ என்பார் கமல். அரிசியில் ஓவியம் வரையப்பட்டிருப்பதைப் புகழ்ந்து ‘கலையரிசி’ என்பார் குஷ்புவிடம். என்னதான் காமெடி படம் என்றெல்லாம் வகைமைப்படுத்திவிட்டாலும் தன்னையறியாமல் அபாரமான ஒரு உணர்தலை நிகழ்த்தும் காட்சியும் உள்ளிருந்தே தீரும். தான் தந்தை அல்ல என்று தெரிய நேரும்போது, ‘என்னை விட்றமாட்டல்லப்பா’ என்று மைக்கேலைப் பார்த்து சந்தானபாரதி கேட்கும் காட்சி ஒரு கணத்தின் பாதி உறையச் செய்யும்.
தன்னை வெளியே எறியச் சொன்னதற்காகத் தூக்கிக்கொண்டுபோகும் பீமனைப் பார்த்து, ‘பீம் கண்ணா நா ரொம்ப கனக்கறேனா?’ என்பார் நாகேஷ். ‘உங்களுக்கு ஒரு வாரம் டயம் தரேன்’ என்று சொல்லும் முதலாளி மதனிடம், அவசரமாக இடைமறித்து, ‘ஒரு வருஷம் டயம் குடுத்தாலும் என்னால மாடியிலேருந்து கீழ குதிக்க முடியாது சார்’ என்பார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பழைய கலையின் கைவிடப்பட்ட மனிதர்களில் ஒருவராக, மனோரமா இந்தப் படத்தில் சில காட்சிகளே என்றாலும் பிரமாதப் படுத்தியிருப்பார். சிவராத்திரி பாடலுக்குச் சற்று முன்னால் மகளிடம் பேசுகையில் குரலாலும் முகமொழியாலும் பல உணர்வுகளை ஒருங்கே பிரதிபலிக்கும் பார்வையாலும் கோலோச்சியிருப்பார் மனோரமா.
தமிழர் திரை ரசனையில் சகலகால விருப்பமாகக் கலாச்சார மலர்தலாக நிகழ்ந்த மைகேல் மதன காமராஜன் படம் எப்போதும் சலிக்காத ரசனை ஊற்று.