வரலாறு திரும்புகிறதா என்று அடிக்கடி அரசியலில் கேட்பது வழக்கம். இந்தியா சினிமா என்னவோ வரலாற்றை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது.
பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து இந்தியா முழுக்க பல இயக்குநர்கள் சரித்திர புராண படங்களை உருவாக்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். கோலிவுட் மற்றும் மல்லுவுட்டும் அவ்வப்போது சரித்திர பட முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இயக்குநர் மணிரத்னம் தன்னுடைய கனவுத்திரைப்படமாக உருவாக்கவிருக்கும், மாபெரும் காவியமான பொன்னியின் செல்வனை திரையில் காட்சிப்படுத்தும் பணிகளைத் தொடங்கிவிட்டார். பல மொழிகளில் இதன் உருவாக்கப்பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மலையாள சினிமாவில் வரிசையாக சரித்திரப்படங்கள் உருவாகவிருக்கின்றன. இதில் முன்னணி நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோர் சரித்திர படங்களில் நடிக்க உள்ளனர்.
பிரித்விராஜ் கர்ணன் புராண படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதுபோல் மோகன்லால் மகாபாரதம் கதையில் பீமன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது.
இதுமட்டுமின்றி மம்முட்டி மலபாரை சேர்ந்த போர் வீரனை பற்றிய கதையான ‘மாமாங்கம்’ என்ற சரித்திர படத்தில் நடிக்கிறார். கேரளாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற மாமாங்கம் திருவிழாவை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. இதில் பிராச்சி தேசாய், உன்னி முகுந்தன், மாளவிகா மேனன், பிராச்சி தேஹ்லன் ஆகியோரும் நடிக்கின்றனர். சஜீவ் பிள்ளை இயக்குவதாக இருந்தது. பிறகு அவரை மாற்றிவிட்டு பத்மகுமாரை டைரக்டராக ஒப்பந்தம் செய்தனர்.
தற்போது மாமாங்கம் படத்தில் மம்முட்டியின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். மற்ற மாநிலங்களிலும் மம்முட்டிக்கு மார்க்கெட் உள்ளதால் இந்தப் படத்தை மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் உருவாக்கி வருகிறார்கள். ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
ரசிகர்களின் மனநிலையும் ரசனை மாற்றத்தையும் கொண்டு காலத்திற்கேற்ப இந்திய சினிமா தன்பங்குக்கு விருந்து வைத்துக்கொண்டிருக்கிறது. இச்சரித்திர படங்கள் ரசிகர்களை திருப்திபடுத்துவது மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களை இந்தியா சினிமா பக்கம் திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறதா என்றால் அதற்கு பதில் , இல்லை என்பதே நிதர்சனம். பிரமாண்டமான புனைவுகளுகளுக்கும் கற்பனாவாதத்திற்கும் கடந்தகாலம் ஒரு சாத்தியத்தை வழங்குவது உண்மைதான். ஆனால் இந்தியாவில் அரசியல்ரீதியாக பழமைவாதம் மேலோங்கி வரும் ஒரு காலத்தில் வரலாற்று கற்பானாவாத படங்கள் நம்மை கலாச்சார ரீதியாக பின்னோக்கி இழுக்கக் கூடியவை. சரித்திரத்தையும் புராணங்களையும் நவீன விமர்சன நோக்கில் யாராவது படம் எடுத்தால் அந்தப்படங்களை திரையிடும் தியேட்டர்களை எரிப்பார்கள் என்பதுதான் உண்மை.