நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவுப்படமான  ’99 சாங்ஸ்’ படத்தின்  வெளியீட்டுத் தேதியை தனது  டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான படம் ‘99 சாங்ஸ்’. இப்படத்தின் கதாசிரியரும் தயாரிப்பாளரும் ரஹ்மான் என்பதால் இப்படம் ரஹ்மானின் சுயசரிதை என்று வதந்திகள் பரவிவருகிறது. ஒரு பாடகர் பெரும் போராட்டத்துக்குப்பின் புகழ்பெற்ற  இசையமைப்பாளர் ஆவதுதான் கதையின் கரு என்று தகவல் பரவியதையடுத்து அச்செய்தியை ரஹ்மான் மறுத்தார்.

2015ல் அறிவிக்கப்பட்டு, இரு வருடங்களுக்கும் மேலாகத் தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தில் எடி.ல்.ஸி, எகான்,லிசா ரே, மனீஷா கொய்ராலா, இசையமைப்பாளரும் டிரம்மருமான ரஞ்சித் பரோத் ஆகியோர் முக்கியப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில்  ”நான் தயாரித்து, எழுதியிருக்கும் முதல் படமான ’99 சாங்ஸ்’ என்கிற இசையை மையமாகக்கொண்ட உணர்வுப்பூர்வமான காதல் படத்தின் வெளியீடு குறித்து அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ’99 சாங்ஸ்’ திரைப்படம் சர்வதேச அளவில், இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும். என் மீது நீங்கள் காட்டும் அன்பு, ஆதரவு மற்றும் உற்சாகத்துக்கு நன்றி” என்று ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.