மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் கரகாட்டக்காரர்கள் ராமராஜன் – கனகாவை மீண்டும் உயிர்ப்பிக்க திட்டமிட்டுள்ளார் கங்கை அமரன். 1989ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் இளையராஜவின் இசையில் வெளியான திரைப்படம் கரகாட்டக்காரன். ராமராஜன், கனகா, செந்தில், கவுண்டமணி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்று சாதனை படைத்தது.
கிட்டத்தட்ட ஒருவருடங்களுக்குமேல் திரையரங்குகளை ஆக்கிரமித்த இந்தப் படத்தின் செந்தில் – கவுண்டமணி காமெடிக் காட்சிகள் அனைத்தும் இன்று வரை பேசப்படுகிறது. இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகயிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கங்கை அமரன் கூறுகையில், கரகாட்டக்காரன் படத்தில் இரண்டாம் பாகம் குறித்து படத்தில் நடித்த அனைவரிடமும் பேசி வருவதாகவும், அனைத்தும் நல்லவிதமாக போய்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
கரகாட்டகாரன் படத்தில் நடித்த அனைவருக்கும் குழந்தை பிறந்து இரண்டு தலைமுறையினரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்பதுபோன்று கதை உருவாக்க திட்டமிட்டுள்ளனராம். மேலும் படத்தில் செந்தில் கவுண்டமணி இடம்பெறுவார்களா என்ற கேள்விக்கு, “அவர்கள் இல்லாமல் எப்படி சாத்தியம்?” எனக் கூறினார்.
கங்கை அமரனின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரகாட்டக்காரன் 2 படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.