ந்யூட்டனுக்குப்பின் உலகையும் ஐன்ஸ்டினுக்குப் பின் பிரபஞ்சத்தையும் சிக்மண்ட் ஃப்ராய்டுக்குப்பின் உளவியலையும் எல்லோரும் பார்த்த பார்வை மாறிப் போனது. அவர்களுக்குப் பின் வந்தவர்களுக்கு அந்தப் பாதையில் போவது எளிதாக இருந்தாலும் அவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
இளையராஜவின் மேதமை என்பது இந்த எல்லைகளை எல்லாம் கலைத்துப் போட்டதுதான். கர்னாடக இசையின் ராகத்தில் சிம்பனி போன்ற ஒரு இசையமைப்பைச் செய்வார். அல்லது நாட்டுபுற வடிவில் இசையமைப்பார்.
கோபுர வாசலிலே(1991) திரைப்படத்தில் வரும் காதல் கவிதைகள் படித்திடும் நேரம் என்னும் பாடல்தான் அது. “யெஸ் ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியட்!” என்று நாயகி கத்தும் அதே கணத்தில் அதே தொனியில் ஏராளமான வயலின்கள் உச்சஸ்தாயியில் இசை பொழியத் தொடங்குகின்றன. இதுவரை தடையாக இருந்தவற்றையெல்லாம் அடித்து நொறுக்கித் தள்ளி அணையுடைத்து வரும் வெள்ளம் போல் இசை பொங்குகிறது. தடைகளை மீறிக் காதல் பிறக்கும் கணத்தை நிலத்தைப் பிளந்து பீய்ச்சி அடிக்கும் நீரூற்று போல் இந்த இசை காட்டுகிறது.
இந்தப் பாடலின் தொடக்ககட்ட வயலின் தமிழ்திரைப்பாடல்களிலேயே ஆகச்சிறந்த இசைத் துணுக்குகளுள் ஒன்று . அச்சு அசலான மாயா மாளவ ராகம்தான் வயலினில் இசைக்கப்படுகிறது . மேற்கத்திய சிம்பொனி இசை போல். தொடர்ந்து புல்லாங்குழல், கீ போர்டின் கிண்கிணி ஒலி என அஸ்திவாரம் போட்டுத்தர எஸ்.பி.பாலசுப்பிரமணியம் , சித்ரா குரல்களில் பாடல் தொடங்குகிறது . மேல்ஸ்தாயி ஷட்ஜமம் என்று சொல்லப்படும் ஸ என்னும் ஸ்வரத்தில் ஆரம்பித்து உச்சஸ்தாயியில் பாடும் வரிகளைக் கத்தாமல் இனிமையாகப் பாடியிருப்பார்கள் இருவரும். காதல் என்னும் இடத்தில் மாலை மங்கி மெதுவாக இரவு வருவது போல் ஒரு பாடகர் மெதுவாக அமைதியாகி அடுத்தவர் பாடத் தொடங்குவது ஒரு அழகு.
இப்பாடலின் இண்டர்லூட்கள் எனப்படும் சரணங்களுக்கு இடையேயான இசைக்கோர்வைகளைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். முதல் இண்டர்லூடில் விட்டுவிடுதலையாகிப் பறக்கும் பறவைகளைப் போல் இருவரும் தளைகளையெல்லாம் மீறிப் பின் சேர்வதைப் போல் புல்லாங்குழல், வயலின் ,கீபோர்டு உதவியுடன் இசைவடிவம் தந்திருப்பார். இரண்டாவது இண்டர்ல்யூடில் காற்றின் வேகத்தால் அடித்துச் செல்லப்படும் குடை கடல் அலைகளில் அலைபாய்கிறது. இந்தத் தவிப்பை ட்ரம்ஸ் மற்றும் புல்லாங்குழலில் கொண்டு வந்திருப்பார். பின்னர் அந்தி கவிழ காதலர்களைப்போல் மேகங்கள் சேர்கின்றன. இந்த மேகக் கலவிக்கு வயலினில் அபாரமாக இசை அமைத்திருப்பார் இசை ஞானி. இந்தப் பாடலில் ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். புறாக்கள் சிறகடிப்பது, குடை கடலலைகளில் தத்தளிப்பது, மேகங்கள் கலப்பது என ஒவ்வொன்றையும் ஓவியம்போல் ஒளிப்பதிவு செய்திருப்பார்.
மொத்தத்தில் இப்பாடல் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தும். கேட்டுப் பாருங்கள்.
இதே ராகத்தில்தான் நிழல்கள் (1980) படத்தின் பூங்கதவே தாழ்திறவாய் பாடலும் அமைந்திருக்கும். அப்பாடலைப்பற்றி விளக்க ஆரம்பித்தால் ஊரடங்கு காலம் முடிந்துவிடும். தகவலை மட்டும் சொல்கிறேன்.
மதுர மரிக்கொழுந்து வாசம் பாடலும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம் பாடலும் பூங்கதவே தாழ்திறவாய் பாடலும்
ஒரே ராகம் தான் .
மாயாமாளவகௌளை!!
என்னமாய் வித்தியாசப் படுத்தியிருக்கிறார் இசைஞானி!!
ஒன்று நாட்டார்வழக்கிசை, இன்னொன்று மேற்கத்திய பாணி, இன்னொன்று லேசாக கர்னாடக பாணியில் அமைந்த மெல்லிசை. இது சாம்பிள்தான். இதே ராகத்தில் குறைந்தது ஐம்பது பாடல்களுக்காவது இசையத்திருப்பார்.
அதுதான் அவரது மேதமைக்குச் சாட்சி.