தமிழ்த் திரையுலகத்தின் புத்தம் புதிய முயல்வுகளுக்கென்று தனித்த வரிசை எப்போதும் உண்டு. வெளியாகிற காலத்தைத் தாண்டி வேறொரு ஓட்டகாலத்தைத் தங்களுக்கென்று தேர்வெடுத்துக்கொள்ளும் இப்படியான படங்கள் மக்களுடைய விருப்பநதி செல்லவேண்டிய அடுத்த வளைதல்களைத் தீர்மானித்துத் தருபவையும் கூட. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்.பி.பி.சரண் தயாரித்து வழங்கிய ‘ஆரண்ய காண்டம்’ அப்படியான நதி நகர்தல்களில் ஒன்று.
இன்று என்பது ஒரு தினமா அல்லது எப்போதும் எஞ்சிக்கொண்டே இருக்கக்கூடிய ஒற்றையா என்பதை எடுத்துப் பேசுகிற கலைப்படைப்புகள் எல்லா நிலங்களிலும் எல்லாக் காலங்களிலும் தொடர்ந்து இருந்துவருபவை. தத்துவார்த்தமாகவும் சித்தாந்தமாகவும் அதீதங்களுக்குள்ளேயும் தேடிப் பார்த்து விடையறியும் எத்தனங்கள் ஒருபுறம் இருக்க தேடலே விடை என்றாற்போல் கலை அதே விடயத்தைக் கையாளும். இந்தப் படத்தின் திரைக்கதை அதன் மைய இழை இன்று எனப்படுகிற ஒரே ஒரு தினத்தோடு பலரது வாழ்வுகளைத் தொகுக்கத் தொடங்கி அந்த தினத்தின் முடிவோடு அடங்கிவிடுகிறது.
மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கான சாட்சியமாகவும் கதை எனும் கலைவடிவம் எஞ்சக் கூடும். எப்படிப்பட்டவர்கள் அல்ல என்று வாதிட்டுக் கொண்டிருக்க தேவை இல்லை. பொது எனும் சொல்லுக்கு அருகாமையில் எப்போதும் வரப்போவதில்லை என்கிற நுட்பமான வித்யாசத்துக்கு அப்பாலான சில குறிப்பிட்ட மனிதர்களின் உயிராட்டமே ஆரண்ய காண்டம். நோக்கமும் சூழலுமே மனிதனை செலுத்துவதும் இயக்குவதும் ஆகிறது என்பது பலமுறை பேசப்பட்ட பொருள்தான். இங்கே பேசியவிதம் குறிப்பிடத் தக்கதாகிறது.
பசுபதி உதிர்த்த ஒரு கூடுதல் சொல் அவனை அந்தத் தினம் முழுவதும் ஓடச் செய்கிறது. கஜபதிக்கும் கஜேந்திரனுக்கும் அவர்களுக்கு உரித்தான பொட்டலம் ஒன்று கைக்குக் கிடைக்காத வெறி அந்த தினத்தின் எல்லா பொத்தான்களையும் திறந்து பார்க்கச் செய்கிறது. சிங்கபெருமாளுக்குத் தன்னோடே இருப்பவன் தன்னை நோக்கி உதிர்க்கும் ஒரு சொல்லைத் தன் ஆழ்மன உலகத்தின் வேறொரு வீழ்ச்சியோடு பொருத்திப் பார்த்ததன் விளைவு அந்த தினத்தின் விசத்தை அவர் மனதில் பூசிவிடுகிறது. சுப்புவுக்கு இதுவரைக்கும் தான், மேற்கொண்ட தவகாலத்திற்கான வெளிச்சவரம் அந்த தினத்துக்குப் பிறகு இன்னொருமுறை கிடைக்குமா என்று தெரியாத நிலையில் தன் கதையைத் தானே எழுதிக் கொள்ளக்கூடிய தங்கவாய்ப்பு ஒன்றாக அந்த தினம் மலர்கிறது. சப்பை என்று எல்லோராலும் நிராகரிக்கப்படுகிற கோமாளிக்கு அன்றொரு தினம் ராஜாவாகும் வாய்ப்பினை வழங்குகிறாள் சுப்பு. சந்தோஷமாக ஆடு கொலைக்களன் நோக்கி ஆடியபடி நகர்கிறது. தன் தகப்பன் காளையனின் கடனை அடைப்பதற்காக சேவல் சூது ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக சேவலை ஒரு கரத்தில் ஏந்தியபடி நகரத்தின் உள்ளே வந்திருக்கிறான் கொடுக்காப்புளி. அந்த நாள் தன் சாயங்காலத்தை நோக்கி விரைந்தோடுகிற மாயரயில். அவரவர் நிறுத்தம் வரும்போது முடிந்தேறுகிறது அவரவர் கதை.
யுத்தத்தின் கடைசி நாள் அல்லது ஊழிக்காலத்தின் முடிவுநாள் என்பதை குறியீடாகக் கொண்ட படங்கள் தென் இந்தியாவில் குறைவே. ராம்கோபால் வர்மா எடுத்துரைத்த குற்றவுலகத்திற்கு அப்பால் தியாகராஜன் குமாரராஜா இந்தப் படத்தில் நமக்கெல்லாம் காணச் செய்த குற்றவுலகம் அலாதியான துல்லியத்தைத் தனதே கொண்டது.
கதையின் வழமை நகர்தல்களை ரத்து செய்தது ஆரண்ய காண்டம் படம். என்ன என்பதை சொல்லிவிட்டு அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான அத்தனை சாத்தியங்களையும் மெல்லத் திறந்து வைத்தபடி கதையை மொத்தமாக உடைத்துச் சிதறடிப்பதன்மூலமாக யூகங்களுக்கு அப்பால் தனித்த இருளீர முகடொன்றில் காண்பவர் மனங்களைச் செருகி வைத்தார். அனாயாசமாக படத்தின் முடிவுவரை ஒரே கயிறற்ற கயிற்றில் கட்டுண்டு கிடந்தது பார்வையாள மனம்.
பி.எஸ்.விநோதின் ஒளிப்பதிவு ஒற்றி எடுத்த ரகசியத்தின் வரைபடம்போல முன்னர் அறியாத அனுபவமாகவே நேர்ந்தது. ரியல் சவுண்ட் மற்றும் ரியல் லைட் என்பதை பரீட்சார்த்தமாக ஆங்காங்கே முயன்ற படங்களுக்கு மத்தியில் யுவனின் இசை மாத்திரமே பல பக்கங்கள் பேசுவதற்குரிய இடுபொருளானது. யுவன் இந்தப் படத்திற்கென பின்னணி இசையை உருவாக்க மிகவும் மெனக்கெட்டிருந்தார். அது கைகொடுத்தது. செஃபியா வண்ணத்தையும் மெக்ஸிகன் நிலத்தையும் போர்த் தனிமையையும் தந்திரங்களின் விடுபடுதலையும் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ம்யூசியத்தின் காலகால தூசிப்படர்தலையும் பாதியில் உறைந்த மழைக்காலத்தின் கடைசி மழையையும் இசையில் கொணர்ந்தது யுவனின் வித்தகம்.
ஜாக்கி ஷெராஃப், யாஸ்மின், பொன்னப்பா, குரு சோமசுந்தரம், ரவிகிருஷ்ணா, சம்பத்ராஜ், மாஸ்டர் வஸந்த் பாக்ஸர், ஆறுமுகம், பாக்ஸர் தீனா மற்றும் 5ஸ்டார் கிருஷ்ணா என படத்தில் பங்கேற்ற அத்தனை நடிகர்களும் தங்கள் நிஜம் அழித்து நிழலாய்ப் பெருகினர்.
படத்தில் ஆங்காங்கே இழையோடும் மெல்லிய கார்பன் ஹ்யூமர் எனப்படுகிற சாம்பல் நகைச்சுவை தமிழ் சினிமா முன்னர் அறியாதது.
நீ மட்டும் உயிரோட இருந்த உன்னை கொன்னுருப்பேன் என்று ஒரு இடத்தில் சொல்லும் கஜேந்திரன் பாத்திரம் தன்னிடம் வந்து ஜோசியம் சொல்ல முயலும் 5ஸ்டார் கிருஷ்ணா மனசுக்குள் ரெண்டு பூக்கள் நினைத்துக்கொள்ள சொல்லிவிட்டு ஒவ்வொரு பூவாய் சொல்லி முடிக்க எல்லாவற்றையும் மறுப்பார். நீங்க மனசுல நெனச்ச அந்த ரெண்டு பூ என்னன்னு சொல்ல முடியுமா எனக் கேட்கும் கிருஷ்ணாவிடம் ப்ரபூ குஷ்பூ எனும்போது திரையரங்கம் உடைந்து சிதறும்.
உங்கப்பான்னா உனக்கு ரொம்பப் பிடிக்குமா எனக் கேட்கப்படும்போது கொடுக்காப்புளி சொல்லும் ஒருவரி பதில் பல தினங்கள் மனசுக்குள் ஒலித்தவண்ணம் இருந்தது
இல்லை… ஆனாலும் அவர் என் அப்பா.
ஆரண்ய காண்டம் மனிதவாழ்வின் மிருகவாதம்.