தமிழக ரசிகர்கள் சின்னத்திரையில் பார்த்து ரசித்த சிவகார்த்திகேயனை முதன்முதலில் வெள்ளித்திரையில் கதாநாயகனுடன் சுற்றும் அவனின் நண்பன் என்ற வழக்கமான பாத்திரத்தில்தான் பார்த்தார்கள். மிக விரைவிலேயே வசூலைக் குவிக்கும் கதாநாயகனாக, எல்லா வயதினருக்கும் பிடித்தமானவராக திரையில் உருமாறினார் அவர். ஆனால், இப்போது முதன்முறையாக இயக்குநர் ராஜேஷின் Mr.லோக்கலில் வில்லன் கதாபாத்திரத்தில் மிகச் சரியாய் மிளிர்ந்திருக்கிறார்.
குழம்ப வேண்டாம்! திரையில் அறிமுகமான சில நொடிகளுக்குள்ளாகவே ‘இந்த பெண்கள்தான் பசங்களுக்கு எதிரி’ வகையறா வசனம் பேசும் கதாபாத்திரத்தை வேறு எப்படி குறிப்பிட முடியும்? இந்தளவு பெண் வெறுப்பு மனநிலை மட்டும் எதிர்மறை கதாபாத்திரத்துக்குப் போதாது என்று கருதுவீர்கள் என்றால், கவலையே வேண்டாம், இயக்குநர் ராஜேஷின் திரைக்கதை நீங்கள் படம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது உங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச ஐயத்தையும் துடைத்துப் போட்டுவிடும்.
இது ஒரு மூன்று மணி நேர பொறுமை வதை. இதன் ஹீரோ நயன்தாரா. தமிழ் சீரியல்களைத் தயாரிக்கும் சுதந்திரமான கீர்த்தனா வாசுதேவன் கதாபாத்திரம் அவருடையது. அம்மா, அப்பா இன்றி வளர்ந்த அவர் (அதையும் கதையில் கிறுக்குத்தனமாகப் பயன்படுத்தியிருப்பது கொடுமை) ஒரு வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தமாதிரியான சூழலில் அவரின் வாழ்க்கையில் பெரும் இம்சையை விளைவிக்க நுழைகிறார் வில்லன் மனோகர் (சிவகார்த்திகேயன்) இருவரும் சிக்னலில் ஒரு சின்ன விபத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். கீர்த்தனாவின் கார் மனோகரின் இருசக்கர வாகனத்தில் மோதி விடுகிறது. அங்கிருக்கும் போக்குவரத்து அலுவலரே சிக்னல் இயக்கத்தில்தான் பிரச்சனை என்று சொல்லியும் கூட கீர்த்தனாவை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்று துடிக்கிறார் மனோகர். ஏன் என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால், ஆண் ஒருவர் கேட்டும், அதை மறுப்பதென்றால் ஒரு பெண்ணிற்கு எவ்வவளவு திமிர் இருக்க வேண்டும்!
ஆனாலும், இந்த வக்கிரத்திற்கு நமது ஹீரோ அடிபணிந்துவிடவில்லை, மன்னிப்பு கேட்காமலேயே அந்த இடத்தைவிட்டு நகர்கிறார். பெண் வெறுப்பு மனநிலைக்கு எதிரான அவரின் இந்தத் திடமான முடிவு மனோகரைக் கோபமுறச் செய்கிறது. மனோகர் கீர்த்தனாவை அவரின் அலுவலகத்திலேயே சந்தித்துத் தொல்லை கொடுக்கத் தொடங்குகிறார். கீர்த்தனாவின் மனப்போக்கை, ஏன் அவரின் இறந்த பெற்றோரைக்கூட விடாமல் வசைபாடுகிறார், புறம் பேசுகிறார். கீர்த்தனா விடாமல் போராடுகிறார். ஆனாலும் மனோகருக்கு அவர் தொடுக்கும் இம்சைகள் மேல் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. இன்னொரு முறை அனைவரின் முன்னிலையிலும் கீர்த்தனாவுக்கு மன்னிப்பு கேட்க ஒரு வாய்ப்பைத் தருகிறார். ஆனால், அப்போதும் கீர்த்தனா அசைந்து கொடுக்காமல் இருக்கவே வழக்கம்போல அவரைக் குறித்து வக்கிரமான சொற்பிரயோகங்களை முன்வைக்கிறார், அசராமல் இந்த மட்டமான எதிர்வினையைத் தொடர்கிறார். இயக்குநர் ராஜேஷின் திரைக்கதை ஒவ்வொரு காட்சியிலும் இந்தக் கேவலம் அரங்கேறுவதை உறுதி செய்கிறது, மீ டூ இயக்கத்தை அசிங்கப்படுத்தும் வழக்கமான பணியையும் மறக்காமல் அவரின் திரைக்கதை செய்து முடிக்கிறது.
இத்தனை மோசமான எதிர்வினைகளைப் பார்த்த பின்பும், நமது ஹீரோ கண்ணியமாக நடந்துகொள்கிறார் (இயக்குநர் ராஜேஷின் திரைக்கதை கொடுக்கும் விளக்கத்தின்படி, ஒரு பெண்ணால் அப்படித்தான் அடக்கமாக நடந்துகொள்ள இயலும்), சட்டத்தின் வழி இந்த வில்லனை எதிர்கொள்ள முடியுமா என்று பார்க்கிறார். ஆனாலும், யதார்த்த வாழ்க்கையில் எத்தனையோ மோசமான வக்கிர மனோபாவங்களை எதிர்கொண்ட நயன்தாராவின் கதாபாத்திரம் திரையில் இயக்குநர் ராஜேஷின் அற்புதமான திரைக்கதையின் அழுத்தத்தில் பலமிழந்து, மட்டகரமான முடிவுகளை எடுக்க வேண்டிய கைப்பாவை நிலைக்குத் தள்ளப்படுகிறது. தொடர்ந்து திரையில் நீள்வது வில்லனின் முடியாத இம்சையும், பின்தொடர்தலும், பாலியல் வன்கொடுமைகளும்தான். ஒரு கட்டத்திற்குப் பிறகு வில்லன் கீர்த்தனாவைக் காதலித்து, காலம் முழுதும் இதுபோன்றே கொடுமை செய்ய வேண்டும் என்று உறுதி ஏற்கிறார்.
ஒரு புள்ளியில் நயன்தாரா ‘கடவுளே, ஏன் இவன் இப்படி இருக்கிறான்!’ என்ற ரீதியில் கேட்கிறார். நமது எண்ணமும் அதேதான். பெண்களை இப்படி அணுகுகிறான் என்றால், அவனது குழந்தை பிராயத்தில் முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருக்கலாம், பெண்களைக் குறித்தான மோசமான பார்வையை அவன் உள்வாங்கிக் கொண்டிருப்பதைத் தடுக்க, சரியான பார்வையைக் கொடுக்க அவனுக்கு யாரும் இல்லாமல் இருக்கலாம். அனால், இயக்குநர் ராஜேஷின் திரைக்கதை அதைக் குறித்தெல்லாம் பேசுவதற்குப் பிரியப்படவில்லை. மனோகர் தன் தாய்க்கும் தங்கைக்கும் பெருமளவு மரியாதையும் அன்பும் கொடுக்கிறார். அதனால், நாம் மனோகர் தன் ரத்த உறவாய் இருக்கும் பெண்களிடமும், தன் கண்களுக்குக் கவர்ச்சியாய், அழகாய்த் தெரியும் பெண்களிடமும் மட்டும்தான் மரியாதையாய் நடந்துகொள்வார், மற்ற பெண்கள் அவரிடம் பாதுகாப்பற்றவர்கள் என்ற முடிவிற்குத் தள்ளப்படுகிறோம். ஆனாலும் எப்படியோ, மனோகர் நமது ஹீரோ கீர்த்தனாவை வருத்துவதில் ஒரு தனி இன்பத்தைக் காண்கிறார்.
நிறைய பேர் Mr.லோக்கலை சமகாலத்து மன்னன் திரைப்படமாகக் கருதினர் (விஜயஷாந்தி, ரஜினிகாந்த் நடித்த திரைப்படம்) என்னதான் சகிக்கவே முடியாத, பெரும் மட்டமான வக்கிரப் பார்வைகள் நிறைந்திருந்தாலும், அந்தப் படத்தில் குறைந்தபட்சம் விஜயஷாந்தியின் கதாபாத்திரத்தை வெறுக்க நமக்கு சில காட்சிகளாவது காரணமாய் இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் கீர்த்தனாவுக்காய் வருத்தப்படுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
இந்தத் திரைப்படம் மட்டத்தின் உச்சகட்டமாய், நமது ஹீரோ மனோகருடன் காதலில் விழுவதில் முடிந்து தொலைக்கிறது. உங்களுக்கு கீர்த்தனா அப்படி வீழ்வதில் அவ்வளவு மன வருத்தம் இல்லையென்றால் அதற்கும் இயக்குநர் ராஜேஷ் அவரின் கதையில் வழி வைத்திருக்கிறார். யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதீஷின் காமெடிகள் நம்மைப் பயங்கரமாக சோதிக்கிறது. ஆனாலும், கதையில் வில்லனுக்கு எதற்கு நண்பர்கள் என்றுதான் தெரியவில்லை. அவரோ எந்நேரமும் தன் ‘காதல்’ வக்கிரங்களுக்குப் பணியாத பெண்ணைப் படுத்தி எடுப்பதிலேயே முழு நேரத்தையும் கவனத்தையும் செலுத்தி வருகிறார். ஹிப்ஹாப் ஆதியின் இசை ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால் பாடல்கள் படத்தின் நீளத்திற்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்கின்றன. சண்டைக் காட்சிகள் நன்றாகவே இருக்கிறது.
மொத்தமாக, Mr.லோக்கல் சமகாலத்தில் வந்திருக்கிற படம் என்பதை நம்பவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சிவகார்த்திகேயனுக்குத்தான் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். திரைத்துறையில் நுழைந்த இவ்வளவு குறுகிய காலத்திலேயே இதுபோன்ற ஒரு கொடும் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உண்மையிலேயே பெரும் தைரியம் வேண்டும். நயன்தாரா அற்புதமாக நடித்திருக்கிறார். அதிகாரமோ, பொருளாதார நிலையோ ஒரு பெண்ணை ஆணாதிக்க மனோபாவத்தை எதிர்கொள்ளாமல் தப்பவைக்க முடியாது என்பதைக் காட்டி நிற்கிறார். தொடக்கத்தில் திடமாய்ப் போராடும் கீர்த்தனா முடிவில் (இயக்குநர் ராஜேஷின் அற்புதமான திரைக்கதையால்) வில்லனின் பெண் வெறுப்பு மன நிலைக்கு அடிபணிந்து விடுகிறார்.
நன்றி: தி நியூஸ் மினிட் https://www.thenewsminute.com/article/surprise-surprise-turns-out-sivakarthikeyan-actually-villain-mr-local-101955
தமிழில்: நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி