பா. ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களைவிட அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரம் ‘ஜானி’. இதனால்தான் ஹரிகிருஷ்ணன் என்கிற நிஜ பெயரைவிட ஜானி என்கிற பெயரில் அவர் அறியப்படுகிறார்.
மெட்ராஸ் படத்துக்குப் பிறகு கபாலி, பரியேறும் பெருமாள், வட சென்னை, டார்லிங் 2, இவன் தந்திரன் போன்ற படங்களில் ஹரிகிருஷ்ணன் நடித்துவிட்டார். அடுத்தகட்ட வளர்ச்சியாக இப்போது கதாநாயகன் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துவிட்டது.
பிரபல கவிஞர், பாடலாசிரியர் குட்டி ரேவதி இயக்கும் புதிய படத்தில் நமது ஜானி ஹரிகிருஷ்ணன் முதன்மையான பாத்திரத்தில் நடிக்கிறார். ஹரிகிருஷ்ணன் முதன்மையான பாத்திரத்தில் நடிப்பது, குட்டி ரேவதி எழுதி இயக்குவது என இரண்டு காரணங்களுக்காக இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
‘சிறகு’ என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் அக்ஷிதா, நிவாஸ், வித்யா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். பியார் பிரேமா காதல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜீ ஒளிப்பதிவு செய்யும் சிறகு திரைப்படத்துக்கு அரோல் கொரெலி இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.