ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இந்நிலையில் தனது காட்சிகளை முடித்து சென்னை திரும்பிய ரஜினி அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக விரைவில் மும்பை செல்லவிருக்கிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகிற மே 29-ந் தேதி தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.
ரஜினி இந்தப் படத்தில் சமூக சேவகர், அதிரடி போலீஸ் அதிகாரி என இரட்டை வேடத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி, அவர் என்கவுண்டர் சிறப்பு போலீசாக நடிப்பது தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு நடந்த கல்லூரியிலேயே குற்றவாளிகளை விசாரிக்கும் சிறப்பு அறையை செட் போட்டு படம்பிடித்துள்ளனர். அங்கு ரஜினி குற்றவாளியை விசாரிப்பது போன்ற காட்சியை எடுத்துள்ளார்கள். ஏற்கனவே படத்தின் சில காட்சிகள் படம்பிடித்து ஆங்காங்கே சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்ட நிலையில் ரஜினியி இரட்டை வேடம் பற்றிய தகவல்களும் வெளிவந்திருக்கின்றன.
மேலும் மற்றொரு கதாபாத்திரத்தில் ரஜினி தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை.
தாதா ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியான ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா வருகிறார். தற்போது என்கவுண்ட்டர் போலீஸ் காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.