ரட்டை வேடப்படங்கள் இரு விதம்.ஆள்மாறாட்டத்தை முன்வைக்கிற வழமையான கதை.அல்லது அதனைத் தாண்டிய விஷயங்களைத் தன்னால் ஆன அளவு பேசிச்செல்லும் கதை.இந்த இரண்டாம் வகைமையின் முக்கிய படவரிசையில் ஒன்று ஜானி.

யாரோ ஒருவன் செய்த தவறுக்கு அவனைப் போன்ற இன்னொருவன் தொடர்ந்து தண்டிக்கப்படுவான் என்றால் தன்னைப் போலிருக்கும் அந்த இன்னொருவன் கணக்கில் தனக்கு மிகவும் தேவையான இரண்டு கொலைகளைச் செய்து கொள்ளுகிற வித்யாசாகர் எனும் முடி திருத்தும் கலைஞனாகவும், ஜானி எனும் மேம்போக்குத் திருடனாகவும் ரஜினிகாந்த் இரு வித்தியாச மனிதர்களின் வேடங்களை ஏற்ற படம் ஜானி.

மற்றுமொரு இரட்டை வேடப் படமாகத் தகர்ந்து போயிருக்கவேண்டிய ஜானி, தமிழின் நிரந்தரக் கொண்டாட்ட சினிமாக்களின் வரிசையில் ஒன்றெனத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்கான முக்கியமான காரணம் அந்தக் கதை வழங்கப்பட்ட விதம். நீர்வீழ்ச்சி ஒன்றும் சற்றே நடக்கிற தூரத்தில் குளமொன்றுமாக நீரின் இருவேறு அருகாமை விலாசங்களாகத் தனித்தும், விலகியும் காணப்பட்ட கதாபாத்திரப் புனைதல்தான் ஒரு நடிகனின் இருவேறு பிரதிபிம்பங்களாகப் பார்க்கப்பட்டிருக்க வேண்டிய இரட்டை வேடப் பாத்திரங்களைத் தன்னாலான அளவு வித்தியாசம் செய்தார் ரஜினி.

இதன் இரு பெண் கதாபாத்திரங்களும் இருவேறு வான் எல்லைகளாகவே கதைப் பறவையின் அலைதலின் முன் விரிந்தன. நான்கு வெவ்வேறு மனிதர்களை, இடை முரண் கொண்டு பிணைத்து ஒரே பெட்டியில் இட்ட வேறுபட்ட சர்ப்பங்களைப் போல் மகேந்திரனின் கதைப்பாங்கு அமைந்திருந்தது. சொல்லிச் சொல்லி வார்த்தாற் போல் ஸ்ரீதேவியும், யாராலும் யூகிக்க முடியாத தீபா உன்னிமேரியும், சுருளிராஜனும் ஜானி படத்தின் கதையை நிகழ்த்திய முகங்கள்.

அஷோக் குமாரின் ஒளிப்பதிவு, குறிப்பாக இரட்டை வேடங்கள் ஒன்றிணையும் காட்சிகள், அவற்றுக்கான கோணங்கள், மேலும் ”செனோரிட்டா”, ”ஆசையக் காத்துல தூது விட்டு” பாடல்கள், ரஜினிகள் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் வசனங்கள் கண்ணில் ஒற்றிக் கொள்கிறாற் போன்ற ஜானி படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் தைலவண்ணங்களைக் கொட்டி உருவாக்கப் பட்ட மாபெரிய கலாவுலகமாகவே காண்போர் நெஞ்சங்களில் உறைந்தன.மழையும் தனிமையும் மந்தகாசமும் பொறாமையும் வெம்மையற்ற பருவங்களுமாக இதுவரை அழுத்தமாய்ச் சொல்லப்படாத இயற்கையின் ஏற்றத்தாழ்வுகளைக் கூடத் தன் போக்கில் கதையின் உபபாத்திரங்களாகவே கையாண்டது ஜானி.

 

இந்தப் படத்தின் தீம் இசை, பாடல்களோடு இசைத்தட்டில் இடம்பெற்றது. மந்தகாசத்தின் வெறுமையை அதன் பல்வேறு கிளைத்தல் நகர்தல் மற்றும் முறிதல்களை, படத்தின் பின்னணி இசையாக்கி வழங்கினார் இளையராஜா. ஐந்தில் ஒரு பாடலைக் கண்ணதாசனும், மற்றவற்றை கங்கை அமரனும் எழுதினார்கள்.

ஜானி தமிழ் மொழியினூடாக திரைப்படத்தைக் கற்க விரும்புகிற புதியவர்களுக்குக் கதையாகவும் காட்சியாகவும் நடிப்பாகவும் வழங்கப்பட்ட விதமாகவும் பாத்திரமாக்கல் மற்றும் வசனம் பாடல்கள் எனப் பல்வேறு காரணங்களுக்காக முக்கியமான படம்.இதனைப் பின் தொடர்ந்து செல்கையில் தமிழில் முயலப்பட்ட அசலான கலாமேதமைப் படங்களின் நூதன பட்டியல் ஒன்றை உருவாக்கிட முடியும்.1980 ஆமாண்டு வாக்கில் வெளியான ஜானி இன்னமும் அதன் மேற்சொன்ன மேன்மைகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஆச்சர்யம் மட்டுமல்லாது அதன் அபூர்வத்திற்கான விளக்கமும் கூட.

மீவுரு செய்ய முடியாத  சாக்லேட் சிற்பம் ஜானி.