ரு மலையின் உச்சியிலிருந்து இன்னொரு மலையின் உச்சிக்குத் தாவினாற் போல் தன் படங்களின் கதாநிலத்தை ஒன்றுக்கொன்று யூகிக்கவே முடியாத வித்யாசங்களைக் கொண்டு அமைத்தவர் இயக்குநர் சீ.வி.ஸ்ரீதர்.ஒவ்வொரு மனிதரைக் கொண்டும் காலம் தன் கையெழுத்தை இடும்.அந்த வகையில் ஸ்ரீதரின் காலம் என்று ஒரு முழுமையான கலாவுலகத் தேருலா இருந்தது என்று சொல்ல முடியும்.எத்தனையோ படங்களை இயக்கி இருந்தாலும் காலத்தை வென்ற ஸ்ரீதரின் படைப்புகளில் முதன்மையானது 1964ஆம் ஆண்டு அவர் உருவாக்கி அளித்த காதலிக்க நேரமில்லை.

சின்னமலை எஸ்டேட்டுக்கு மட்டுமல்ல  பெரும் காசுக்கும் அதிபதி விசுவநாதன்.ஒரே மகன் செல்லப்பா சினிமா எடுக்கப் போவதாக சுற்றித் திரிய பட்டணத்தில் கல்லூரி படிப்பு முடித்து விட்டுத் தகப்பன் வீடு நோக்கி வருகின்றனர் அவரது மகள்கள்  காஞ்சனாவும் நிர்மலாவும் தந்தையின் எஸ்டேட் மேனேஜராக இருக்கும் அஷோக்கோடு முட்டிக் கொள்கிறது நிர்மலாவுக்கு.காஞ்சனாவின் மனம் ஏற்கனவே சென்னையில் தனக்கு அறிமுகமான வாசுவின் வசம் இருக்கிறது.வாசுவும் அஷோக்கும் பலகால சினேகிதர்கள்.

விசுவநாதனின் அகந்தை நிர்மலாவின் செல்வத் திமிர் அஷோக்கின் வேலை போகிறது.எஸ்டேட்டை விட்டுக் கிளம்ப மறுக்கும் அஷோக் ஒருதலையாக நிர்மலாவை காதலிக்கத் தொடங்குகிறான்.நண்பனின் காதலை நிறைவேற்றித் தருகிற பரோபகார நோக்கத்திற்காக மாபெரும் செல்வந்தர் சிதம்பரமாக வயோதிக வேடம் பூண்டு அங்கே வந்து சேர்கிறான் வாசு.தன்னை விடப் பணம் என்றதும் விசுவநாதன் வாயெல்லாம் பல் ஆகிறார்.அவர் மகன் செல்லப்பாவோ ஓஹோ ப்ரொடக்ஷன்ஸ் எனும் தன் கனவுசினிமா நிறுவனத்தின் வாயிலாகத் தான் எடுக்க விழையும் படத்திற்கு செல்வந்தரிடமிருந்து கதையும் பணமும் கிடைக்காதா என்று முயன்று பார்க்கிறான்.வாசுவின் தந்தையும் விசுவநாதனும் பால்ய ஸ்னேகிதர்கள் என்பது ஒரு முடிச்சு.வாசுவுக்கும் விசுவத்தின் மகள் காஞ்சனாவுக்கும் பேச்சளவில் திருமணம் நிச்சயமாகிறது.

ஆள்மாறாட்ட போலிவேடதாரி குழப்பங்கள் யாவும் தீர்ந்து விசுவநாதனின் மூன்று மக்களுக்கும் ஒரே தினம் அடுத்தடுத்த கூடங்களில் திருமணம் நிகழ்ந்தேறுவதோடு சுபம் என்று நிறைகிறது காதலிக்க நேரமில்லை படம்.

நாகேஷ் மற்றும் பாலையா இருவருடைய ஒப்பிடுவதற்காகாத நடிப்பு இந்தப் படத்தின் முதல் பலம்.கதையின் எல்லாக் காட்சிகளிலும் வண்ணத்தைப் போலவே செல்வந்தம் ததும்பும் இப்படியொரு படம் இதற்கு முன் வந்ததில்லை என்றாற் போல் எஸ்டேட் பங்களா மலைப்பாதைகள் கார் ஜீப் இத்யாதிகள் எனப் பலவும் இப்படத்தின் கதை நகர்வுக்குத் துணை நின்றன.பாடல்களும் இசையும் தொய்விலாப் பேரின்பத்தை வழங்கின.நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் தா தா பாடல் முன்பின் அறியாத தன் பூக்குரலால் ஒளிரச் செய்தார் ஜேசுதாஸ்.

நாகேஷ் தன் முகமொழி மூலமாகவும் குரலாலும் ஏற்ற இறக்கங்களொடும் அடுத்தடுத்த காட்சிகளை விவரிப்பதன் மூலமாகத் தன் திரைப்படத்துக்கான கதையை தந்தை பாலையாவுக்கு விவரித்து அவர் முதுகுத் தண்டை உறையச் செய்யும் காட்சி இந்தியத் திரைவானின் ஆகச்சிறந்த நகைச்சுவைக் காட்சிகளில் ஒன்றெனத் தனிக்கிறது.

 

தொடரலாம்

அன்போடு

ஆத்மார்த்தி