இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்னையை பற்றி எடுக்கப்பட்ட “பீரியட் எண்ட் ஆஃப் செண்டன்ஸ்” என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்த பிளாக் பேந்தர் திரைப்படம் ஏழு பிரிவுகளில் போட்டியிட்டு சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
ஆஸ்கர் விருது
91ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (பிப்ரவரி 25) காலை 7 மணிக்குத் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. உலக சினிமா திரையுலகமே ஆஸ்கர் விருதை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த தருணம் இன்று வந்துள்ளதாக விழாவில் பங்கேற்ற நடிகர், நடிகைகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஹாலிவுட் சினிமாவின் மிக உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை எதிர்பார்த்து ஒட்டுமொத்த சினிமா திரையுலகமும் ஆவலுடன் காத்திருந்தது.
சினிமா துறையின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான 91ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் மிக கோலாகலமாக இன்று நடைபெற்றுவருகிறது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் விலகியதையடுத்து, வேறு யாரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. இதனால் தொகுப்பாளர் இல்லாமலையே நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த படங்களுக்கு, நடிகர், நடிகைகளுக்கு உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
விருதுகளை குவித்த படங்கள்
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்த பிளாக் பேந்தர் திரைப்படம் ஏழு பிரிவுகளில் போட்டியிட்டு சிறந்த ஆடை வடிவமைப்பு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு என இரண்டு விருதுகளை வென்றுள்ளது. பீட்டர் ஃபெர்ரலி இயக்கிய க்ரீன் புக் திரைப்படம் 3 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. ப்ரியான் சிங்கர் இயக்கிய பொஹிமியான் ராப்சோதி திரைப்படம் 4 விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த குறு ஆவணப்படத்துக்கான விருது பீரியட் என்ட் ஆப் சென்டன்ஸ் என்ற படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் மூடநம்பிக்கைகளால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிப் பேசும் படமாக இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களை மையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த முருகானந்தம் உருவாக்கிய மலிவு விலை நாப்கினை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.
ஆஸ்கர் விருதுகள் பட்டியல்
சிறந்த திரைப்படம் – க்ரீன் புக்
சிறந்த இயக்குனர் – அல்போன்சோ குரான் (ரோமா)
சிறந்த நடிகர் – ரமி மலிக் (பொஹிமியன் ராப்சோடி)
சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மன் (தி ஃபேவரிட்)
சிறந்த துணை நடிகர் – மஹர்ஷாலா அலி (க்ரீன் புக்)
சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங்,
சிறந்த வெளிநாட்டுப் படம் – ரோமா (மெக்சிகோ)
சிறந்த அனிமேஷன் படம் – ஸ்பைடர் மேன் (இன் டு தி ஸ்பைடர் – வெர்ஸ்)
சிறந்த திரைக்கதை – க்ரீன் புக்
சிறந்த தழுவல் திரைக்கதை – பிளாக்லான்ஸ்மேன்
சிறந்த பின்னணி இசை – ப்ளாக் பேந்தர்
சிறந்த பாடல் – ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)
சிறந்த ஆவணப்படம் – ஃப்ரீ சோலோ
சிறந்த குறு ஆவணப்படம் – பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் – ஸ்கின்
சிறந்த அனிமேஷன் குறும்படம் – பாவோ
சிறந்த ஒளிப்பதிவு – அல்போன்சோ குரான் (ரோமா)
சிறந்த தயாரிப்பு – ப்ளாக் பேந்தர்
சிறந்த ஆடை வடிவமைப்பு– ப்ளாக் பேந்தர்
சிறந்த ஒப்பனை– வைஸ்
சிறந்த ஒலித் தொகுப்பு– பொஹிமியான் ராப்சோதி
சிறந்த ஒலிக் கலவை– பொஹிமியான் ராப்சோதி
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்
சிறந்த படத்தொகுப்பு – பொஹிமியான் ராப்சோதி