சினிமா எடுப்பதை பற்றி விளக்குவதற்கு நான் ஒன்றும் 10,15 படங்கள் வெற்றி கொடுத்த இயக்குனரோ தயாரிப்பாளரோ அல்ல. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வெளியான ஒரு படத்தை கூட விடாமல் பார்த்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனாக அந்த சினிமாக்கள் எப்படி உருவாகின என்பதும் ஓரளவுக்கு தெரியும். சினிமாவை பொறுத்தவரை நாம் சினிமா பார்ப்பதே ஒரு வகையான பயிற்சி தான்.
இன்றைய சூழ்நிலையில் சினிமா எடுக்க சினிமாவில் பணிபுரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. கார்த்திக் நரேன் என்னும் 24 வயது இளைஞர் யூடியூபை பார்த்து படம் எடுக்கும் முறையை, இயக்கத்தை கற்று ஒரு படம் இயக்கி வெளியிடுகிறார். அந்தப் படம் அனைவராலும் கொண்டாடப்பட அவர் கவனிக்கத்தகுந்த இயக்குனர் ஆகிறார். இன்னொரு பக்கம் சினிமாவிலேயே பழம் தின்று கொட்டை போட்ட மூத்த இயக்குனர்கள் வரிசையாக தோல்விப் படங்களாக கொடுத்து தவிக்கிறார்கள். இந்த முரண்பாடு மட்டுமல்ல முரண்பாடுகளின் மொத்த உருவமே சினிமா தானோ என்று சொல்லும் அளவுக்கு திரையுலகம் இயங்குகிறது.
சினிமாவும் அரசியலும் ஒன்றுதான். இரண்டுமே தனக்கான ஆளுமைகளை தானே உருவாக்கி கொள்ளும் திறன் கொண்டவை. இந்த இரண்டுக்குமே தான் தான் அரசன் என்று யாராலுமே எந்த காலத்திலுமே பறை சாற்றிக்கொள்ள முடியாது. காரணம் இரண்டுமே மக்களின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டவை. அரசியலை விட்டுவிடுவோம். சினிமாவை பொறுத்தவரை அதை பார்க்கும் பார்வையாளர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான ஆட்கள் இல்லை. ஆனால் வெற்றி பெற்ற படங்கள் என்பவை பெரும்பாலான மக்களுக்குப் பிடித்தவை. இதுதான் சினிமாவின் ஃபார்முலா.
சினிமாவும் சமையலும் ஒன்றுதான். சமையல் செய்வது நாமாக இருந்தாலும் அதை நாம் மட்டுமே சாப்பிட போவது இல்லை. மற்றவர்கள் சாப்பிட்டு அது நன்றாக இருக்கிறது என்றால் அந்த சமையல் நல்ல சமையல். அதுபோல் தான் சினிமாவும் மற்றவர்கள் பார்த்து நல்ல சினிமா என்று சொன்னால் தான் அது நல்ல சினிமா. இங்கே சினிமாவில் இருக்கும்பெரிய பிரச்சினையே இதுதான். மேலே சொன்ன வரிகளை புரிந்துகொள்வது இல்லை. ஓரிரு படங்களிலேயே நாம் எடுப்பது தான் சினிமா என்ற மனநிலை உருவாகி விடுகிறது. அது நம்மை வீழ்த்தி விடுகிறது.
சினிமா எடுப்பதற்கு என்று எந்த தகுதியும் தேவையில்லை. மக்கள் எதை ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டால் போதும். உளவியல் தான் இங்கே அவசியம். மக்கள் என்றால் நாமும் மக்கள் தானே. நமக்கு ஒரு கதை பிடித்திருந்தால் அதை தாராளமாக படமாக எடுக்கலாம். அதற்கு முக்கியமான ஒரு தகுதி சொல்வதை சுவாரசியமாக சொல்ல தெரிய வேண்டும்.
காலம் காலமாக உதவி இயக்குனராகவே பணிபுரியும் நபர்களையும் நாம் பார்க்கிறோம். ஓரிரு படங்கள் பணிபுரிந்துவிட்டு படம் இயக்கும் இயக்குனர்களையும் நாம் பார்க்கிறோம். எல்லோரிடத்திலுமே கதை இருக்கிறது. அந்தக் கதை அவர்களை பொறுத்தவரை சிறந்த கதை தான். ஆனால் அதை சொல்லும் விதத்தில் தான் கோட்டைவிடுகிறார்கள்.
கதையை வைத்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் அலையும் நபர்கள் இருக்கும் இதே சினிமா துறையில் தான் முழுக்கதை எழுதுவதற்கு முன்பே தயாரிப்பாளரைப் பிடித்துவிடும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். இங்கு பிடித்த என்ற இடத்தில் கவர்ந்த என்று போட்டுக்கொள்ளலாம். கவருதல் என்றால் நம் கதை கேட்பவரை கவர வேண்டும். முதலில் நாம் உருவாக்கி இருக்கும் கதை கருவாக இருக்கும்போதே கவரவேண்டும். சுவாரசியமான கதையை உருவாக்குவதை விட அதை சுவாரசியமாக சொல்லவும் தெரிய வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு கதைக்கருவை பார்ப்போம். ஒரு தாத்தாவும் பேரனும் வசித்து வருகிறார்கள். தாத்தா பேரனுக்கு பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுக்கிறார்.பேரனை நல்ல ஒரு வீரனாக வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் பேரனுக்கு தனது தந்தையை கொன்றுவிட்டார்கள் என்று தெரிய வருகிறது. தந்தையை கொன்றவர்களை அந்த ஹீரோ எப்படி பழி வாங்கினான் என்பதே கதை.
இதில் ஏதாவது புதிதான கதையோ அல்லது சுவாரசியமோ இருக்கிறதா? காலம் காலமாக பார்த்து சலித்துப்போன கதை தானே என்று சோர்வு தான் தட்டும். இதே கதையை சொல்லும் முறையில் சொன்னால் அது சுவாரசியமாக மாறும்.
ஒரு முதியவர் தன் மகனை கொன்றவர்களை பழிவாங்க பேரனை தயார்ப்படுத்துகிறார். இதுதான் கதைக்கரு. ஒரே வரியில் கதை எந்த கதாபாத்திரத்தை மையமாக கொண்டு நகர்கிறது என்பதை மாற்றும்போது அது சுவாரசியமாக மாறுகிறது.வழக்கமான கதையைகூட சுவாரசியமாக சொன்னால் இங்கே ஜெயிக்கலாம். இதுதான் சினிமா. சினிமா எடுக்க தயாரிப்பாளர்கள் பவுண்டட் ஸ்க்ரிப்ட் இருக்கா? என்று முதல் கேள்வியாக கேட்கும் இந்த காலக்கட்டத்தில் இந்தகதைக்கரு எல்லாம் தேவையா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு படத்துக்கு சுவாரசியமான கதைக்கரு ஏன் அவசியம்? வரும் பகுதிகளில் பார்க்கலாம். அதற்கு முன்பு ஒரு சின்ன பயிற்சி. உங்களுக்கு பிடித்த, மனதுக்கு நெருக்கமான படங்களை பட்டியலிட்டு அவற்றுக்கான கதைக்கரு என்ன என்று யோசியுங்கள். ஒரே வரியில் ஒரு படத்தின் கதையை சுவாரசியமாக சொல்ல முடிகிறதா…என்று முயலுங்கள்.
(உரையாடுவோம்)