#RIPBALASINGH

பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துப் பிரபலமான பாலா சிங் காலமானார். அவருக்கு வயது 67.

‘இந்தியன்’, ‘ராசி’, ‘புதுப்பேட்டை’, ‘விருமாண்டி’ உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்திருந்தார். அதிலும், இவரது யதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது. ‘என்.ஜி.கே’ இவரது நடிப்பில் வெளியான 100-வது படமாகும். இவரது நடிப்பில் இறுதியாக ஆர்யா நடித்த ‘மகாமுனி’ படம் வெளியானது.

சினிமா மட்டுமன்றி பல்வேறு சின்னதிரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.
விருகம்பாக்கத்தில் உள்ள பாலா சிங்கின் வீட்டில் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் அவரது சொந்த ஊரான களியக்காவிளைக்கு அவரது உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட உள்ளது.