இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று பரவல் ஏற்கனவே அறிவித்த ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டு வருமா என்பது சந்தேகத்திற்கு உரிய விசயமாகவே இருக்கிறது. கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க சமூக விலகல் மிகவும் அவசியமானது என்ற நிலையில் பள்ளிக்கூடங்களுக்கு தான் முதலில் மூடுவிழா நிகழ்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் மூடுவிழா நிகழ்த்தப்பட்டது.
இந்திய கல்வி முறைகளில் ஆரம்ப கல்வி, உயர்நிலை கல்வி, கல்லூரிக் கல்வி என மூன்று நிலைகள் இருக்கின்றன. இந்திய அளவில் மூன்று கல்வி பிரிவுகளிலும் சேர்த்து ஏறத்தாழ 35கோடி மாணவர்கள் பயில்கின்றனர். தமிழகத்தில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தோராயமாக 1.28 கோடி ஆகும். தமிழகத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில்தான் பன்னிரெண்டாம் வகுப்பிற்கும் பத்தாம் வகுப்பிற்கும் பொதுத் தேர்வுகள் நடைபெறும். பன்னிரெண்டாம் வகுப்பிற்கு இன்னும் ஒரு சில தேர்வுகள் மிச்சமிருக்கின்றன.பத்தாம் வகுப்புக்கு தேர்வுகள் முழுமையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வழக்கமாக இந்த காலகட்டத்தில் செய்முறை தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும்.
ஏப்ரல் மாதத்தின் மத்தியில் எழுத்து தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும். ஆனால் கொரோனாவும் ஊரடங்கு உத்தரவும் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. இறுதியாண்டு பயிலும் பலருக்கு இன்னும் பாடங்களே முழுமையாக நடத்தி முடிக்கவில்லை. இறுதியாண்டு மாணவர்களுக்கு இதுதான் நிலைமை என்றால் முதலாமாண்டு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் குறித்து எதுவும் சொல்லுவதற்கில்லை. அரசு நடத்தும் கல்வி நிலையங்கள் பலவற்றில் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல் தான் தேர்வுகளே நடக்கும். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறையில் கழிந்துவிடும். ஜூன் மாதத்தில் வகுப்புகள் துவக்கப்படும். தனியார் பள்ளிக்கூடங்களைப் பொறுத்தவரை 2020-21 ஆம் ஆண்டிற்கான பாடங்களை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதங்களில் நடத்த தொடங்கிவிடுவார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைமைகளை மாற்றி அமைத்திருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் வழக்கமான கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது. ஆகையால் அனைவரும் இணைய வழி கற்றல் முறைகளுக்கு மாறி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி கல்வியைப் பொறுத்தவரை அரசு, தனியார் இருவருமே பங்களித்து வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை. அரசின் பங்களிப்பு அதிகம். இணைய வழி கல்வி கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு தேவையானவை,
டிஜிட்டல் உபகரணம் (Computer, Tablet, Smartphone)
இணையம் (Internet)
பாடத்திட்டம்(Syllabus) மென்பொருள் (Software)
ஆசிரியர்கள், மாணவர்கள்( Teachers Students)
இணையவழி கற்றல் முறைமைகளில் மிகவும் முக்கியமான ஒன்று டிஜிட்டல் உபகரணம். ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே கற்றல் கற்பித்தல் இணையம் வழியாக இந்த உபகரணங்கள் உதவியுடனே நிகழும். இந்தியா போன்ற பல்வேறு சமூக பொருளாதார கட்டமைப்புள்ள நாட்டில் அனைவரிடமும் ஒரேவித தரத்தில் உபகரணங்கள் இருக்காது. ஒரு மாணவன் மடிக்கணினியுடன் கலந்துரையாடலில் பங்குபெறுவதும், அலைபேசியுடன் பங்கெடுப்பதும் ஒரேவிதமான வசதிகளை வழங்காது. கிராமம், நகரம் என வேறுபாடுகளைக் கொண்ட சமூகத்தில் கிராமப்புற மாணவனுக்கும் நகர்ப்புற மாணவனுக்கும் இணையவழி கற்றலில் சமவாய்ப்பு என்பது சற்றே கேள்விக்கு உரிய விசயம் தான். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இருக்கின்ற பொழுது அனைவருக்கும் கணினி, மடிக்கணினி அல்லது ஸ்மார்ட்போன் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. அத்தகைய குடும்பங்களில் இருக்கின்ற மாணவர்களை இணையவழி கற்றலில் பங்கெடுக்க வைப்பது எங்ஙனம் சாத்தியம். அரசும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக மானிய குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக் கழகமும் மாணவர்களின் கற்றல் தடையின்றி தொடரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன.அதில் மாற்றுக்கருத்தும் தேவையற்றது. ஆனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுகிறதா என்பதற்கு ஒருவரிடமும் பதிலில்லை. இந்திய சமூகத்தில் பெண்கள் வேலைக்கு சென்றாலும் வீட்டு வேலைகளை செய்யக்கூடியவர்கள். குடும்பத்தினர் அனைவருமே வீட்டில் இருக்கின்ற பொழுது பெண்கள் இணையவழி கற்பித்தலில் முழுமையாக ஈடுபடுவதற்கான சாத்தியம் குறைவு.
இணையவழி கற்றலில் இணயத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரேவிதமான சேவையை அலைபேசி நிறுவனங்கள் வழங்குவதில்லை.
இணையவழி கற்றலில் இணயத்தின் தரவு பரிமாற்ற வேகம் மிகவும் முக்கியமானது. தரவு பரிமாற்ற வேகம் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரே அளவில் இருக்காது. அலைபேசி நிறுவனங்கள் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வாங்கும் மதிப்புகளைக் கொண்டே அளவீடு செய்கின்றன. ஆசிரியர்கள் மாணவர்கள் சிறந்த டேட்டா பிளானில் இல்லை என்றால் தரவு பரிமாற்றம் சரியாக இருக்காது. சிறந்த டேட்டா பிளான் 500 ரூபாய்க்கு குறைவாக கிடைப்பதில்லை என்பது நிதர்சனம். அனைத்து மாணவர்களாலும் அந்த தொகையை இந்த சூழ்நிலையில் செலவு செய்ய முடியுமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. டெல்லி போன்ற மாநிலங்களில் டேட்டா பிளானுக்கு ஆகும் செலவை மாநிலமே வழங்க முடியுமா என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை தமிழகத்தில் தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி செயல்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றது. இணையத்தில் பெருமளவில் ஆங்கில வழி கற்றலுக்கு தேவையான காணொளிகளும், இணைய தளங்களும் விரவிக் கிடக்கின்றன. ஆனால் தமிழ்வழி கற்றலுக்கு தேவையான கற்றல் காணொளிகளும், இணைய தளங்களும் மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன.
ஆசிரியர்கள், மாணவர்கள் இணையவழி கற்றல் கற்பித்தலில் பங்கெடுக்க பல்வேறு மென்பொருள்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்தும் மென்பொருட்கள் அவர்களுடைய தனியுரிமையை பாதிக்காதவகையில் இருக்க வேண்டும். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் WhatsApp, Telegram, iCloud, Skype, Google Classroom, Zoom போன்ற மென்பொருட்களை பரிந்துரைக்கின்றன. இதுமட்டுமின்றி சில கல்வி நிறுவனங்கள் தங்களுக்கென்று பிரத்யேகமான கற்றல் நிர்வாக மென்பொருளை(Learning Management Software) வைத்திருக்கின்றன. முன்னரே இணையவழி கற்றலுக்கான சர்வதேச சந்தை மதிப்பு 132.98 பில்லியன் டாலராக 2023 ஆம் ஆண்டில் இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதய சூழல் அதனை அதிகரிக்கவே செய்யும். இந்தியா போன்ற நாடுகளில் அதன் சந்தை மதிப்பு 2பில்லியன் டாலர் அளவில் 2021 ஆம் ஆண்டிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்புகொள்ள இந்திய அரசு SWAYAM, E-Pathsala, DIKSHA என பல முயற்சிகள் எடுத்தாலும் அவை மாநில மொழிகளில் இல்லை என்பது மிகப்பெரிய குறைபாடு. கற்பித்தல் கற்றல் முறைகளில் மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியமான கூறாகும். இணையவழி கற்றலைப் பொறுத்தவரை பல்வேறு சமூக பொருளாதார வேறுபாடுகளைக் கொண்ட சமூகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்புகளை வழங்காமல் அவர்களை மதிப்பீடு செய்வது ஒருவகையில் குரூரமானது.மனித தன்மையற்றது. ஜாதவ்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரஞ்சன் தாஸ் அவர்கள் இத்தகைய சூழலில் இணையவழி கற்றலின் அடிப்படையில் மதிப்பீடு செய்யக்கூடாது என்று தெரிவித்திருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
வழக்கமான முறைகளில் இல்லாமல் இணையவழி கற்றலில் மாணவர்கள் பெரிய அளவில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்துவதற்கு வாய்ப்புகள் குறைவு.எனவே பல மாணவர்கள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள ஆசிரியர்களின் பங்களிப்பும் குறைவாகவே இருக்கும்.பாடங்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியாத மாணவர்கள் ஒருவிதமான உளவியல் சிக்கலுக்கு ஆட்படும் சூழல் இருக்கிறது. இந்நிலையில் மதிப்பீடுகளை தள்ளிவைப்பதுதான் மரியாதைக்குரியது.