ஹார்மோன் மாயாஜாலங்கள் – 9

 

தெருவில் சாதாரணமாக நடந்து போய்க்கொண்டிருக்கிறீர்கள் எதிர்பாராத நொடியில் உங்கள் கைப்பையை பிடுங்கிக்கொண்டு ஓடுகிறான் ஒரு முகமூடி ஆசாமி, அடுத்த நொடியில் அவனை பிடித்துவிடும் முனைப்போடு நீங்கள் ஓட  தொடங்கி இருப்பீர்கள். பையை மீட்டதும் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் அட எவ்வளவு வேகமா ஓடிவந்துருக்கோம்! எது உங்களை இவ்வளவு வேகமாக ஓடவைத்தது என்று என்றேனும் யோசித்தது உண்டா? அது உங்கள் அட்ரினல் சுரப்பி.

அட்ரினல் சுரப்பி சிறுநீரகத்தின் மேல் தொப்பி போல அமைந்திருக்கும் முக்கோண வடிவ நாளமில்லா சுரப்பி. இவற்றை இரண்டு சிறுநீரகங்களின் மீதும் காணலாம். தமிழில்  இதற்கு அண்ணீரகச் சுரப்பி என்று பெயர். அட்ரினல் என்றால் சிறுநீரகத்துக்கு அருகில் என்று பொருள். ஆபத்து மற்றும் இக்கட்டான சூழலின்போது, மைய நரம்பு மண்டலத்தில் உள்ள சிறப்பு செல்களான நியூரான்கள் அட்ரினலைத் தூண்டுகின்றன. அட்ரீனல்   சுரக்கும் ஹார்மோன்கள் ரத்தம் மூலமாக உடலுக்குள் பயணித்து பிரச்னையை எதிர்கொள்ள உடலை தயார் செய்கிறது. அட்ரீனலின் வேலைசெய்யும் வேகம் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. எடுத்துக்காட்டாக நாய் துரத்துவதை உங்கள் கண்கள் கண்டதும் நியூரான்கள் அதை மூளைக்கு கடத்தி, மூளை அட்ரினலுக்கான கட்டளையை பிறப்பித்து அது உடலுக்கு கடத்தப்பட்டு அட்ரினல் சுரந்து, அது உடல்முழுவதும் கொண்டுசெல்லப்பட்டு நீங்கள் ஓட துவங்குகிறீர்கள். நாயை காண்பதற்கும் ஓடுவதற்கும் இடைப்பட்ட சில நொடிகளில் இவ்வளவு வேலை நடக்கிறதென்றால் அதன் வேகத்தை கொஞ்சம் கணித்து பாருங்கள். இத்தனை வேலைசெய்யும் அட்ரினலின் எடை வெறும் 12 கிராம் தான். இதன் அமைப்பை வெளிப் பக்கமாகப் புறணி (Coretx) என்றும், உட்பக்கமாக அகனி (Medulla) என்றும் பிரிக்கிறார்கள்.

அட்ரினல் சுரக்கும் ஹார்மோன்கள்:

  1. கார்டிசோல்

இது குளுக்கோ கார்டிகாய்டு வகை ஹார்மோன். இந்த வகை  ஹார்மோன்கள் உடலின் அவசிய தேவைகளான வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுக்குள் வைக்கிறது. எதிர்பாரா விதமாக அடிபடும் போதோ, நோய் கிருமிகளின் தாக்கத்தின் போதோ ஏற்படும் வீக்கத்தை குறைகிறது. ரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்தவும், உயிர்கடிகார சுழற்சியை கட்டுப்படுத்தவும் செய்கிறது. மனஅழுத்தத்தின் போது வெளியிடப்படும் கார்டிசோல் உடல் ஆற்றலை அதிகரிக்கவும், அவசரகால சூழ்நிலையை சிறப்பாக கையாளவும் உதவுகிறது.

  1. ஆல்டோஸ்டிரோன்:

இது ஒரு மினரல் கார்டிகாய்டு ஹார்மோன். பொதுவாகவே இந்த வகை ஹார்மோன்கள் ரத்தத்தில் உப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். ஆல்டோஸ்டிரோன் இரத்தத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் (எலக்ட்ரோலைட்டுகள்) அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலக்ட்ரோலைட்டுகளின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் இரத்த pH அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

  1. அட்ரினலின் (Adrenaline) மற்றும் நார்அட்ரினலின் (Noradrenaline)

இது இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைஅதிகரிக்கிறது. கொழுப்பை உடைக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து உடலுக்கு அதிக ஆற்றலை வழங்க உதவுகிறது. மற்ற அட்ரினல் ஹார்மோன்களை போல இதுவும் ஆபத்தான காலகட்டங்களில் வெளியிடப்படுகிறது

இவை இரண்டு வகைப்படும்:

  1. கேடகோலமைன்கள் (Catecholamines):

உடல் அல்லது உணர்ச்சி மன அழுத்தத்தின் போது இவை வெளியிடப் படுகின்றன. அட்ரினலின், நார்அட்ரீனலின், டோபமைன் ஆகியவை இதில் அடங்கும். உங்கள் அட்ரீனல் சுரப்பிகளின் உள் பகுதியான மெடுல்லா இவற்றை உற்பத்தி செய்து வெளியிடுகிறது.

  1. ஸ்டீராய்டு ஹார்மோன்கள் (Steroid hormones):

வளர்சிதை மாற்றம், வீக்கம், நோயெதிர்ப்பு அமைப்பு செயல்பாடுகள், உப்பு மற்றும் நீர் சமநிலை, பாலியல் பண்புகளின் வளர்ச்சி, காயம் மற்றும் நோயைத் தாங்கும் திறனை ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகின்றன. உங்கள் அட்ரீனல் சுரப்பிகளின் வெளிப்புறப் பகுதியான கார்டெக்ஸ் ஸ்டீராய்டு ஹார்மோன்களான குளுக்கோகார்டிகாய்டுகள், மினரல் கார்டிகாய்டுகள் மற்றும் அட்ரீனல் ஆண்ட்ரோஜன்களை உற்பத்தி செய்து வெளியிடுகிறது.

அட்ரினலை தாக்கும் நோய்கள்:

உங்கள் அட்ரினல் தேவைக்கும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஹார்மோன்களை சுரக்கும் போது அவை மனித உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. சில வகையான  ஸ்டீராய்டு மருந்துகள், மரபணு மாற்றங்கள், ஆட்டோ இம்யூன் நோய்கள், காயம், தொற்று அல்லது இரத்த இழப்பு மூலம் அட்ரீனலுக்கு ஏற்படும் சேதங்கள், ஹைப்போதாலமஸ் அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள பிரச்சனை இவையெல்லாம் அட்ரினல் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும்.

அடிசன் நோய் (Addison’s disease):

இது அரிதாகவே கண்டறியப்பட்டுள்ளது. அட்ரினல் ஹார்மோன் குறைவாக சுரப்பதால் உண்டாகிறது.  அட்ரினல் கார்டெக்ஸ் சேதமடைவதால் நமது உடலில் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கார்டிசோல் மற்றும் சோடியம் பொட்டாசியம் அளவை கட்டுக்குள் வைக்கும் அல்டோஸ்டீரோன் உற்பத்தி தடைபடுகிறது. இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். சரியான சிகிச்சை அளிக்கப்படாத போது உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்நோய் இரண்டு வகையாக தோன்றும்.

  1. முதன்மை அட்ரினல் பற்றாக்குறை:

நம் உடலின் நோய்எதிர்ப்பு மண்டலம் அட்ரினலை தாக்குவது முதன்மை அட்ரினல் பற்றாக்குறை வகையை சேர்ந்தது. நோய் தொற்றுகள், புற்றுநோய், ரத்தம் உறைவதை கட்டுப்படுத்தும் சில மருந்துகள் மூலம் இது ஏற்படலாம்.

  1. இரண்டாம் நிலை அட்ரினல் பற்றாக்குறை:

பிட்யூட்டரி சுரப்பி தேவையான அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோனை உற்பத்திசெய்ய தவறும்போது இது உண்டாகிறது. புற்றுநோய், கட்டிகள் மற்றும் அதிர்ச்சியான மூளை காயங்கள் மூலம் இவை உண்டாகலாம்.

குஷிங் நோய் (Cushing’s syndrome):

அட்ரினல் சுரப்பி மனஅழுத்தத்தை உண்டாகும் கார்டிசோல் ஹார்மோனை அதிகப்படியாக சுரப்பதால் இந்நோய் உண்டாகிறது. தோள்களுக்கு இடையில் ஒரு கொழுப்பு படிவது, ஒரே உருண்டையான முகம் மற்றும்  தோலில் இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிற தடிப்புகள் உண்டாவது இதன் அறிகுறியாகும். குஷிங் சிண்ட்ரோம் உயர் இரத்த அழுத்தம், எலும்புகள் உறுதி இழப்பது மற்றும் சில சமயங்களில் டைப் 2 நீரிழிவு நோயையும் ஏற்படுத்தும்.

பிறவிக்குரிய அட்ரீனல் ஹைபர்பைசியா (Congenital Adrenal Hyperplasia – CAH)

CAH என்பது அட்ரீனல் சுரப்பிகளை பாதிக்கும் ஒருவகை மரபணு கோளாறு. இந்நிலையில் உடலில் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தி தடைபடுவதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

ஹிர்சுடிசம் (Hirsutism):

இது அளவுக்கு மீறிய முடிவளர்ச்சியை கொண்ட நிலையாகும். இது அனைத்து வயது பெண்களிடமும் ஏற்படலாம். உலக மக்களில் 5 – 10 % மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இதில் ஆண்களை போலவே பெண்களுக்கும் மேல் உதடு, கன்னம் போன்ற இடங்களில் முடிவளர்ச்சி இருக்கும். பெண்களில் சுரக்கும் அதிகப்படியான ஆண்ட்ரோஜென், கருப்பையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் மாதவிடாய் தொடர்பான ஹார்மோன்களே இதற்கு காரணம். முழுமையான உடல் பரிசோதனையை தொடர்ந்து, கருப்பையின் நிலையை அறியும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை, ஆண்ட்ரோஜென் அளவை கண்டறிதல் ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். அதிகப்படியான முடிவளர்ச்சியை கட்டுப்படுத்த ப்ளக்கிங் (முடியை பிடுங்குதல்) மற்றும் லேசர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

அட்ரினல் சுரப்பி  மட்டுமல்ல எல்லா நாளமில்லா சுரப்பிகளையும் பிட்யூட்டரி சுரப்பிதான் கட்டுப்படுத்தும். அதனால் பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் பிரச்னை கூட, அட்ரினல் சுரப்பியில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

– மாயாஜாலங்கள் தொடரும் –

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  (ndeepika98@gmail.com)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  2. கணையம் - தீபிகா நடராஜன்
  3. தைமஸ் சுரப்பி - தீபிகா நடராஜன்
  4. நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்
  5. கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்
  6. உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்
  7. உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  8. சுரப்பிகளின் நடனம் -தீபிகா நடராஜன்
  9. உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்
  10. ஹார்மோன் மாயாஜாலங்கள் - தீபிகா நடராஜன்