ஹார்மோன் மாயாஜாலங்கள் – 8              

 

பொன்னியின் செல்வன் இப்போது பிரதான பேச்சுப்பொருள். ஒரு காட்சியில் விக்ரம் தன் படைகளுடன் கோட்டை கதவை உடைத்து திறந்து எதிரிகளை பந்தாடுவார். கோட்டை முழுக்க எதிரியின் உடல்கள் சிதறி கிடக்கும். இதே போன்றொரு போர் உங்கள் உடலுக்கு நடக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

ஆம்! நிஜமாகவே நடக்கிறது. வெளியில் இருந்து ஒரு பாக்டீரியாவோ அல்லது வைரஸோ உங்கள் உடலுக்குள் நுழையும் போது நிகழும் மாற்றங்கள் எல்லாம் அவை சார்ந்தவையே. அனலாய் உங்கள் உடல் கொதிக்கையில் மேற்சொன்ன அதே போர் உங்களுக்குள் நிகழத் தொடங்கியிருக்கும். இங்கு கிருமிகளுக்கு எதிராக போர் தொடுப்பவர்கள் நோய் தடைக்காப்பு மண்டலத்தின் உறுப்பினர்களான ரத்த வெள்ளையணுக்கள் (White blood cells). ரத்த வெள்ளையணுக்கள் 20 முதல் 40 சதவீதம் லிம்போசைட்டுகளால் (Lymphocytes) ஆனவை. அந்த லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்து உடல் முழுவதும் அனுப்பும் பணியை செய்வது தைமஸ்.

மனிதன் உட்பட ஏனைய பாலூட்டிகளின் உடலில் முதலில் உருவாகிற நாளமில்லா சுரப்பி தைமஸ். கழுத்தும் நெஞ்சும் இணைகிற இடத்தில், நெஞ்சு எலும்புக்குப் பின்புறமாகவும், மூச்சுக் குழாய்க்கு முன்புறமாகவும் இருக்கிறது தைமஸ் சுரப்பி. பிரமிட் வடிவில் இருக்கிற இந்தச் சுரப்பி உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலோடு தொடர்புடையது. இதுதான் தொற்று நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது. நாம் பிறக்கும்போது 10-12 கிராம் எடையில் இருக்கும் இது 12 வயதுவரை வளர்கிறது. கிட்டத்தட்ட 36 கிராம் வரை. அதன் பிறகு இது சுருங்க ஆரம்பிக்கும். வயதானவர்களுக்கு இது 10 கிராம் எடையில் இருக்கும். அதனால்தான் முதுமையில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்துவிடுகிறது. மனிதரைத் தவிர மற்ற விலங்கினங்களுக்குத் தைமஸ் தொடர்ச்சியாக வளர்ந்து ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

தைமஸ் சுரப்பியில் வலது, இடது என இரு மடல்கள் (Lobes) உண்டு. ஒவ்வொன்றிலும் ஏராளமான நுண்மடல்கள் (Lobules) உள்ளன. இதன் அமைப்பை வெளிப் பக்கமாகப் புறணி (Coretx) என்றும், உட்பக்கமாக அகனி (Medulla) என்றும் பிரிக்கிறார்கள். புறணியில் இளம் லிம்போசைட்டுகளும் , அகனியில் முதிர்ந்த லிம்போசைட்டுகளும் இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் ‘ஹஸல் கார்ப்பசல்ஸ்’ (Hassall’s corpuscles) எனும் சிறப்பு லிம்போசைட்டுகளும் உள்ளன.  லிம்போசைட்டுகளுக்கு தமிழில் நிணவணுக்கள் என்று பெயர்.

என்ன செய்யும் இந்த தைமஸ்?

ரத்த வெள்ளணுக்களில் 5 வகை உண்டு. அவற்றில் லிம்போசைட்டுகளும் அடங்கும். இந்த லிம்போசைட்டுகளை அவை உற்பத்தியாகும் இடத்தை பொறுத்து இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.

 1. B லிம்போசைட்டுகள்
 2. T லிம்போசைட்டுகள்

இதில் B லிம்போசைட்டுகள் Bone marrow எனப்படும் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. T லிம்போசைட்டுகளை தைமஸ் சுரப்பி  உற்பத்தி செய்கிறது. இந்த லிம்போசைட்டுகள் ரத்தத்தில் கலந்து உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகின்றன.

T லிம்போசைட்டுகளின் முக்கிய பணி பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படுவதே ஆகும். மேலும் இவை புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

இது தவிர்த்து கீழ்க்காணும் தைமிக் ஹார்மோன்களையும் அது உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் T செல்களின் உற்பத்தி மற்றும் முதிர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

 1. தைமோசின் (Thymosin)
 2. தைமோபாய்டின் (Thymopoietin)
 3. தைமுலின் (Thymulin)

லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையானது தனி நபரின் வயது, பாலினம்,  இருப்பிடம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும் லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையை ஆரோக்கியமான வரம்பிற்குள் வைத்திருப்பது நோயெதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்பாடுவதன் அறிகுறி ஆகும். லிம்போசைட்டுகளின் எண்ணிக்கை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

லிம்போபீனியா (Lymphopenia)

லிம்போசைட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையே லிம்போபீனியா என்று அழைக்கப்படுகிறது. இது ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. சத்துள்ளதா சாப்பிட்டா தான் நோய் வராதுன்னு சொல்வது எல்லாம் இந்த ரகத்தில் வரும். நோய்த்தொற்றுகளும், மருந்துகளும் கூட லிம்போபீனியாவுக்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இன்னும் இதற்கான சரியான காரணங்கள் கண்டுபிடிக்க படவில்லை. மேலும் இது நம்மை தொந்தரவு செய்யாதவரை இதற்காக எந்த மருந்தும் எடுத்துக்கொள்ள தேவையில்லை

– மாயாஜாலங்கள் தொடரும் –

                                                                                                                                                                                                                                                                         (ndeepika98@gmail.com)

 

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
 2. கணையம் - தீபிகா நடராஜன்
 3. அட்ரினல் சுரப்பி - தீபிகா நடராஜன்
 4. நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்
 5. கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்
 6. உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்
 7. உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
 8. சுரப்பிகளின் நடனம் -தீபிகா நடராஜன்
 9. உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்
 10. ஹார்மோன் மாயாஜாலங்கள் - தீபிகா நடராஜன்