ஹார்மோன் மாயாஜாலங்கள்  11

பத்து வாரங்களை கடந்து விட்டது நாம் ஹார்மோன்களை படிக்கத்தொடங்கி! இப்போது சிறியதாய் ஒரு தேர்வு வைக்கலாமென நினைக்கிறேன். எங்கே கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் ஆண்கள் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்…

 1. உங்கள் தாய்/ சகோதரி/ மனைவி/ காதலி யின் மாதவிடாய் தேதி என்ன?
 2. அவர்கள் எந்த சானிட்டரி நாப்கின் உபயோகிக்கிறார்கள்?
 3. ஒரு சானிட்டரி நாப்கின் விலை என்ன?
 4. கடைசியாக நீங்கள் எப்போது சானிட்டரி நாப்கின் வாங்கி வந்தீர்கள்?
 5. மாதவிடாய் பற்றிய இயல்பான உரையாடல் உங்களுக்குள் நடந்தது உண்டா?

இப்போது ஏன் இந்த பரிட்சையெல்லாம் என்று யோசிக்கிறீர்களா? ஏனெனில் இதற்கு காரணமான “அண்டகம்” பற்றித்தான் நாம் தெறிந்துகொள்ள போகிறோம்.

அண்டகம் என்பது கருப்பையின் இருபுறமும் அமைந்துள்ள சிறிய, நீள்வட்ட வடிவ சுரப்பிகள். அவை தான் கருமுட்டைகளை உற்பத்தி செய்து சேமித்து வைக்கின்றன, மாதவிடாய் சுழற்சி மற்றும் அது சார்ந்த ஹார்மோன்களை உருவாக்குகின்றன. ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பின் போது, ​​இது உங்கள் கருப்பையில்  முட்டையை வெளியிடுகிறது. ஒரு விந்தணு மூலம் இந்த முட்டை கருவுற்றால் அது குழந்தையாக வளர தொடங்கும். மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் நிலை நாற்பதிலிருந்து ஐம்பது வயதுக்குள் நிகழ்கிறது. இந்நிலையை ஒருவர் அடையும் வரை  அண்டகம் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியிலும் ஒரு முட்டையை வெளியிடுகிறது. உங்கள் வாழ்நாள் முழுக்க நீங்கள் வைத்திருக்கும் அனைத்து முட்டைகளுடனும் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? அது உண்மையும் கூட!

அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள்:

இரண்டு ஹார்மோன்கள் உங்கள் அண்டகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 1. ஈஸ்ட்ரோஜன்

இந்த ஹார்மோன் பெண்இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சி மற்றும் பெண்தன்மைக்கு  காரணமானது. அண்டகம் மட்டுமின்றி அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் கொழுப்பு திசுக்கள் ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்கின்றன. இருபாலரின் உடலிலும் இந்த ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும் பெண்கள் உடலில் இதன் அளவு அதிகம்.

ஈஸ்ட்ரோஜென் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது

ஈஸ்ட்ரோன் (Estrone), ஈஸ்ட்ரோடியல் (Estradiol), ஈஸ்ட்ரியோல் (Estriol)

ஈஸ்ட்ரோன் மெனோபாஸ் நிலைக்கு பிறகே உடலில் சுரக்க தொடங்குகிறது. தேவைக்கேற்ப ஈஸ்ட்ரோஜெனின் மற்ற வகைகளாக இது உடலால் மாற்றப்படும். ஈஸ்ட்ரோடியல் இருபாலரிலும் உற்பத்தி செய்யப்பட்டாலும் பொதுவாகவே பெண்களின் இனப்பெருக்க காலத்தில் அதிகமாக சுரக்கப்படுகிறது. அதிகப்படியான ஈஸ்ட்ரோடியல் முகப்பரு, மனசோர்வு, ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு மெலிதல்,  கருப்பை மற்றும் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.நேரிட்டால் எடை அதிகரிப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படலாம்.கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரியோலின் அளவு அதிகரிக்கிறது, ஏனெனில் இது கருப்பை வளர உதவுகிறது மற்றும் பிரசவத்திற்கு உடலை தயார்படுத்துகிறது. ஈஸ்ட்ரோஜெனின் அளவானது ஒவ்வொரு தனிமனிதரை பொருத்தும் மாறுபடும். மாதவிடாய் சுழற்சியின் போது மட்டுமின்றி பெண்களின் வாழ்நாள் முழுவதும் இதன் அளவு ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

 1. புரோஜெஸ்ட்டிரான்

புரோஜெஸ்ட்டிரோன் என்பது பெண் இனப்பெருக்க அமைப்பால் சுரக்கப்படும் கர்ப்பகால ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும். இது மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் மற்றும் கரு வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடையது. உங்கள் அண்டகம்  ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான கருப்பை நுண்ணறைகள் உள்ளன. இவை  முதிர்ச்சியடையாத முட்டைகளை வைத்திருக்கும் கருப்பையில் உள்ள சிறிய பைகள் ஆகும். பூப்படைதலுக்கு பிறகு, கருப்பைகள் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. இந்த செயல்முறை அண்டவிடுப்பு  என்று அழைக்கப்படுகிறது. இந்த கருமுட்டை கருப்பைக்கு ஃபலோபியன் குழாய் எனப்படும் குறுகிய, பாதை வழியாக தனது பயணத்தைத் தொடங்குகிறது. அது விந்தணுவுடன் சந்தித்தால் கருவுறுதல் நடைபெறும். இந்த சுழற்சியில் நீங்கள் கர்ப்பமாக இருக்கவில்லை என்றால் கருமுட்டை சிதைந்து உங்கள் உடலால் மீண்டும் உறிஞ்சப்பட்டு மாதவிடாய் தொடங்கும்.

கார்பஸ் லியூடியம் என்பது அண்டகத்தின் ஒரு தற்காலிக நாளமில்லா சுரப்பி சுரப்பி ஆகும். இந்த கார்பஸ் லியூடியம் தான் புரோஜெஸ்ட்டிரோனின் முக்கிய ஆதாரமாகிறது. ஃபலோபியன் குழாய் வழியாக முட்டை பயணிக்கும்போது, உடலின் புரோஜெஸ்ட்டிரோன் அளவு உயர்கிறது, இது கர்ப்பத்திற்கு கர்ப்பப்பையை தயார் செய்ய உதவுகிறது.கருத்தரிப்பு ஏற்பட்டால், புரோஜெஸ்ட்டிரோன் எண்டோமெட்ரியம் எனப்படும் உள் திசுக்களில் உள்ள இரத்த நாளங்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும் கருவுற்ற முட்டைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சுரக்க எண்டோமெட்ரியத்தில் உள்ள சுரப்பிகளைத் தூண்டுகிறது. கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் புரோஜெஸ்ட்டிரோன் மற்ற முட்டைகள் முதிர்ச்சியடைவதைத் தடுக்கிறது, மேலும் இது பாலூட்டலுக்குத் தயாராக மார்பக திசுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

புரோஜெஸ்ட்டிரோன் அளவு மாதந்தோறும் அதிகரிக்கவில்லை மற்றும் குறையவில்லை என்றாலும் அது கருமுட்டை வெளியாவதில் ஏற்படும் பிரச்னையின் அறிகுறியாக இருக்கும். மேலும் இது கருவுறாமைக்கு காரணமாகவும் இருக்கலாம். இரட்டையர்கள், மூன்று குழந்தைகளை பிரசவிக்கும் நிலையை உடையவர்களுக்கு இயற்கையாகவே அதிக அளவு புரோஜெஸ்ட்டிரோன் உள்ளது. இந்த புரோஜெஸ்ட்டிரோன் அளவை இரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். அதன் மூலம் கருவுறாமைக்கான காரணம், தோல்வியுற்ற கர்ப்பம் மற்றும் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்டறியலாம்.

கருப்பை பிரச்சனையின் தன்மையை பொறுத்து அதன் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். இடுப்பு வலி, ஒழுங்கற்ற இரத்தப்போக்கு, மாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் ஆகியவை பொதுவான சில அறிகுறிகளாகும். ஆக மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறவில்லை என்றாலே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.

– மாயாஜாலங்கள் தொடரும் –

 -ndeepika98@gmail.com-

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. கணையம் - தீபிகா நடராஜன்
 2. அட்ரினல் சுரப்பி - தீபிகா நடராஜன்
 3. தைமஸ் சுரப்பி - தீபிகா நடராஜன்
 4. நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்
 5. கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்
 6. உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்
 7. உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
 8. சுரப்பிகளின் நடனம் -தீபிகா நடராஜன்
 9. உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்
 10. ஹார்மோன் மாயாஜாலங்கள் - தீபிகா நடராஜன்