ஹார்மோன் மாயாஜாலங்கள் – 10

இந்தியாவில் 11 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.  சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் இரண்டாவது மிக அதிகமான சர்க்கரை நோயாளிகளை கொண்ட நாடு. 2020 ஆண்டு கணக்கெடுப்பின் படி 700,000 இந்தியர்கள் நீரிழிவு, இரத்தச் சர்க்கரைக் குறைவு, சிறுநீரக நோய் மற்றும்  நீரிழிவு நோயின் பிற சிக்கல்களால் இறந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி  இந்தியாவில் 3.4 மில்லியன் மக்களை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் கணையத்தில் ஏற்படும் பிரச்சனைகளே.

 கணையம் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்குச் சற்று கீழே அமைந்திருக்கும் ஓர் உறுப்பு ஆகும்.  இது, இரைப்பைக்கு நேர் கீழாக, வயிற்றின் இடதுபுறத்தில் காரட் அல்லது  முள்ளங்கியின் உருவத்துடன், சுமார் 20-25 செ.மீ நீளமும், 60-100 கிராம் எடையும் கொண்டது. இதைக் கலப்புச் சுரப்பி (Mixed gland) என்றும் கூறுவார்கள். செரிமானத்தை இயக்கும் ‘நாளமுள்ள சுரப்பி’யாகவும், ஹார்மோன்களைச் சுரக்கும் ‘நாளமில்லாச் சுரப்பி’யாகவும் இயங்குகிறது. உணவு செரிமானம் ஆக உதவும் ஏராளமான என்சைம்களும், ரத்தத்தில் கலக்கும் குளுக்கோஸைத் திசுக்கள் பயன்படுத்த உதவும் இன்சுலின் ஹார்மோனும் கணையத்தில்தான் உற்பத்தியாகின்றன. கணையத்தில் லாங்கர்ஹான் திட்டுகள் எனப்படும் சிறப்பு திசுக்கள் பரவியுள்ளன.ஆரோக்கியமான மனிதனிடம் சுமார் பத்துலட்சம் லாங்கர்ஹான் திட்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு திட்டிலும் ஆல்பா, பீட்டா, டெல்டா என்று மூன்று வகையான செல்கள் உள்ளன. ஆல்பா செல்கள் குளுக்கோகான் என்ற ஹார்மோனை சுரக்கின்றன. நாம் உண்ணும் உணவை செரிமானமண்டலம் குளுக்கோஸாக மாற்றி பின் ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. ரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்வது குளுக்கோகான் ஹார்மோன்தான். மேலும் குளுக்கோஸ் தேவை ஏற்படும்போது, கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட குளுக்கோஜெனை குளுக்கோஸாக மாற்றவும் குளுக்கோகான் அவசியம். பீட்டா செல்கள் நமக்கு மிக பரிச்சயமான இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. குளுக்கோகான் ஹார்மோனுக்கு நேர்மாறாக  இன்சுலின் செயல்படும். ரத்தத்தில்  குளுக்கோஸ் அளவை  அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவது  இன்சுலினின் பணி. குளுக்கோஸை உடல் செல்கள் பயன்படுத்திக்கொள்ள திறவுகோலாக இருப்பதும் இன்சுலின்தான். குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அதிகரிக்கும் அதை சேமித்துவைக்கும்படி கல்லீரலுக்கு சிக்னல் அனுப்பும்.  டெல்டா செல்கள் சொமொஸ்டோடேடின் ஹார்மோனையும் சுரக்கிறது. இது கணையத்தில் மட்டுமின்றி இரைப்பை குடல் பாதை,  ஹைபோதாலமஸ் மற்றும் மத்திய நரம்பு மண்டலம் உள்ளிட்ட பல இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. குளுக்கோகான்னும் இன்சுலினும் வண்டியின் இரட்டை மாடுகள். ஒன்றை ஒன்று புரிந்து செயல்படும் வரைதான் ரத்தத்தின் குளுக்கோஸ் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

செரிமானத்தில் கணையத்தின் பங்கு:

கணையம் ஒரு நாளைக்கு செரிமானத்துக்கு உதவும் என்சைம்களும் தாதுக்களும் நிறைந்த  ஒன்றரை லிட்டர் செரிமான நீரைச் சுரக்கிறது.மட்டுமின்றி இது மிகச் சிறந்த சென்சாராகவும் செயல்படுகிறது!

இந்த அளவானது சாப்பிடும் உணவை பொறுத்து மாறுபடும். எவ்வளவு உணவு இரைப்பையில் இருந்து குடலுக்கு வருகிறது என்பதை மோப்பம் பிடித்து, அதற்குத் தேவையான என்சைம்களை அளந்து அனுப்புகிறது. உணவு எப்போது சிறுகுடலுக்கு வருகிறதோ, அந்த நேரத்தில் கணையச் சுரப்பும் மிகச் சரியாக அங்கு வந்துவிடுகிறது. நீங்கள் நினைப்பதை விடவும் நேர்த்தியாக! ஆச்சரியம் என்னவென்றால் நீங்கள் இட்லி, தோசை சாப்பிட்டால் கணையம் அதை சென்சார் செய்து அமிலேஸ் என்சைமைச் சுரக்கும். பருப்புச் சோறு என்றால் டிரிப்சின் என்சைமையும், இறைச்சி என்றால் லைப்பேஸ் என்சைமையும் தேர்ந்தெடுத்துச் சுரக்கும். மாவுச்சத்து குளுக்கோஸாகவும், புரதச்சத்து அமினோ அமிலமாகவும், கொழுப்புச்சத்து கொழுப்பு அமிலமாகவும் கல்லீரலுக்குப் போகும். அங்கே அவை உடலுக்குத் தேவையான சக்தியாக மாறும்.

சர்க்கரை நோயும் கணையமும்:

சர்க்கரை நோயில் டைப் 1, டைப் 2 என இரண்டு வகைகள்  உள்ளன.

டைப் 1 சர்க்கரை நோய்:

ஆட்டோ இம்யூன் டிசார்டர் () என்ற நோயானது உடலின் செல்களை கிருமிகள் என்று நினைத்து அதற்கு எதிராக வேலைசெய்து அதை முற்றிலுமாக அழிக்கும் ஒருவகை நோயாகும். இதுவே பெரும்பாலும் பீட்டா செல்களை அழிகிறது. இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் அழிக்கப்படும் போது இன்சுலின் சுரப்பு முற்றிலுமாக தடைபடும். இதை  டைப் 1 சர்க்கரை நோய் என்கிறோம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை இன்சுலினை வாழ்நாள் முழுக்க செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.

டைப் 2 சர்க்கரை நோய்:

இன்சுலின் சுரத்தல் அளவில் ஏற்படும் மாறுபாட்டால் வருவது இந்நோய் ஏற்படுகிறது.  சிலருக்கு இன்சுலின் செயல் திறன் குறைவாக இருக்கும். இதனால், குளுக்கோஸ் முழுவதையும் உடல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். உலகில் 95 சதவிகிதம் சர்க்கரை நோயாளிகள் இந்த வகையினர்தான். இவர்களுக்கு இன்சுலினை சுரக்கவைக்க, மாத்திரைகள் கொடுக்கப்படும். இன்சுலின் தேவைக்குச் சற்று குறைவாக இருக்கிறது எனில், தினமும் இன்சுலின் ஊசி  செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டால் டைப்-2 சர்க்கரை நோயில் இருந்து எளிதாக மீள முடியும். இது வாழ்க்கை முறை மாற்றம், வயது, மரபியல் காரணமாக ஏற்படும்.

கணையத்தை காக்கும் உணவுகள்:

  • காளானிலுள்ள நார் சத்து, செலினியம், பொட்டாஷியம், வைட்டமின் டி2 கணைய பாதுகாப்பிற்கு துணைநிற்கும்.
  • பீட்டா கரோட்டின் சத்து அதிகமாக இருக்கும் உணவுகள் கணையத்தை புற்று நோயிலிருந்து பாதுகாக்கும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஆரஞ்சு, மஞ்சள்,  இளஞ்சிவப்பு நிறங்களில் உள்ள காய்கறி, பழ வகைகள். மேலும் காலை நேரத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது கணையத்தைப் பலப்படுத்தும்.

  • கணையத்தின் மிக முக்கிய வேலையே செரிமானம் தான். புரோபயாடிக் எனும் நல்ல நுண்ணுயிரிகளைக் கொண்ட தயிர் செரிமானத்துக்கு பெரிதும் உதவக்கூடியது. எனவே தினசரி உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது  நல்லது .தயிர் கணையத்தில் நோய்த்தொற்றுகளைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கணையத்தை வலிமைப்படுத்தும்.
  • பசலைக்கீரைக்கும் கணையத்தினை புற்று நோயிலிருந்து பாதுகாக்கும் திறன் உண்டு. வாரம் இரு முறையாவது இதனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பூண்டில் உள்ள அலிசின் கணையத்தில் உருவாகும் கட்டிகளைத் தடுக்கும் வல்லமை கொண்டது. உணவில் பூண்டு சேர்ப்பதால், காயங்கள் மற்றும் கட்டிகளிலிருந்து கணையத்தை முழுமையாகப் பாதுகாக்கும்.
  • புரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து, உடல் கொழுப்பைக் குறைக்கும். மலச்சிக்கல் வராமல் தடுக்கும். புரோக்கோலியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் கணையப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

 

– மாயாஜாலங்கள் தொடரும் –

    -ndeepika98@gmail.com-

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  2. அட்ரினல் சுரப்பி - தீபிகா நடராஜன்
  3. தைமஸ் சுரப்பி - தீபிகா நடராஜன்
  4. நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்
  5. கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்
  6. உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்
  7. உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  8. சுரப்பிகளின் நடனம் -தீபிகா நடராஜன்
  9. உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்
  10. ஹார்மோன் மாயாஜாலங்கள் - தீபிகா நடராஜன்