ஹார்மோன் மாயாஜாலங்கள்  3

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்றொரு சொல்லாடல் உண்டு. பிட்யூட்டரி சுரப்பிக்கு இது 200% பொருந்தும். நம் மூளையின் கீழ்ப்பகுதியில் ஹைப்போதலாமஸ் என்ற உறுப்புக்குக் கீழே தான் பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland) அமைந்துள்ளது.  0.5 கிராம் எடையில் ஒரு பட்டாணியின் அளவுள்ள இது மனித உடலில் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது! ஆம் உடலின் எல்லா நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடும் கட்டுப்பாடும் “பிட்யூட்டரி சுரப்பி (Pituitary gland)” கையில் தான் இருக்கிறது. அதனால் தான் இது “சுரப்பிகளின் தலைவன் (Master gland)” என்று அழைக்கப்படுகிறது. இந்த பிட்யூட்டரி சுரப்பியானது உடலை சமநிலையில் வைத்திருக்கும் ஹார்மோன்களை  (Homeostasis hormone) மட்டுமின்றி பிற நாளமில்லா சுரப்பிகளை தூண்டும் ட்ரோபிக் வகை ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது .

கொஞ்சம் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், நம் நாட்டில் ஆட்சி எவ்வாறு நடக்கிறதென கற்பனை செய்து பாருங்களேன். பிரதமரிடம் இருந்து வரும் கட்டளை நேராக முதல்வரிடம் வந்தடையும். பின் அங்கிருந்து சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் வந்து மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டடையப்படும். அதே போலத்தான் நம் உடலும்!  உடலில் ஹார்மோன் அளவு குறையும்போது, அந்தத் தகவல் முதலில் பிரதமரான ஹைப்போதலாமஸுக்குச் செல்லும். உடனே அது சில விடுவிப்பு ஹார்மோன்களை (Releasing hormones) வெளிவிடும். அவை பிட்யூட்டரி என்ற முதலமைச்சரிடம் வந்து ஊக்குவிப்பு ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும். பிறகு அவை நாளமில்லாச் சுரப்பிகள் எனும் அமைச்சரிடம்  சென்று தேவையான ஹார்மோன்களைச் சுரக்கச் செய்யும். இவை தேவைக்குச் சுரந்ததும், ஹார்மோன் சுரந்தது போதும் என்னும் தகவல் ஹைப்போதலாமஸுக்கு வரும். உடனே, விடுவிப்பு ஹார்மோன்கள் சுரப்பதை அது நிறுத்திவிடும். இதன் விளைவால், மற்ற சுரப்பிகளும் அந்தந்த ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திக்கொள்ளும். அதன் பிறகு ஹார்மோன் தேவைப்பட்டதும், ஹைப்போதலாமஸ் ஆணைப்படி இந்தச் சுழற்சி மீண்டும் ஆரம்பிக்கும். இது ஒரு தொடர் ஓட்டம்போல மனித உடலில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்தச் செயல்பாட்டுக்கு ‘எதிர் பின்னூட்ட முறை’ (Negative feed back system) என்று பெயர்.

என்னதான் பிட்யூட்டரி சுரப்பி மாஸ்டராகவே இருந்தாலும் இது ஹைப்போதலாமஸ் எனும் பிரதமரின் ஆணைப்படிதான் இயங்குகிறது. இதன் காரணமாக நரம்பு மண்டலத்தையும் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தையும் இணைக்கும் பாலமாக ஹைப்போதலாமஸ் இருக்கிறது. முதுகெலும்புள்ள உயிரினங்களில் காணப்படும் பிட்யூட்டரி சுரப்பியானது எல்லா உயினங்களிலும் ஒரே வடிவத்தில் இருப்பதில்லை. விலங்குகளின் தன்மைக்கு ஏற்ப இதன் வடிவங்களிலும் மாற்றங்கள் உண்டு. நம் மூளையின் அடிப்புறத்தில் ஸ்பீனாய்டு (Sphenoid) எனும் எலும்பு இருக்கிறது. அதில் உள்ள சிறு பள்ளத்தில் இது மிகவும் பாதுகாப்பாக அமைந்திருக்கும் பிட்யூட்டரி சுரப்பியானது  ‘இன்ஃபண்டிபுலம்’ (Infundibulum) என்ற சிறு காம்பின் மூலம் இது மூளையின் முக்கியப் பகுதியான ‘ஹைப்போதலாமஸ்’ உடன் இணைந்துள்ளது.

பிட்யூட்டரி சுரப்பி ஹார்மோனை குறைவாக சுரந்தால் அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த நிலை “ஹைப்போ பிட்யூட்டரிசம்” (Hypopituitarism) எனப்படும். சில குழந்தைகளில் பிறக்கும்போதே இது சரியாக வளர்ச்சி அடையாமல் இருக்கும் அல்லது மூளையில் ஏற்படும் கட்டி, தொற்றுக்கிருமி, கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் தவறான சிகிச்சை மூலமும் இது நேரலாம். மாறாக பிட்யூட்டரி சுரப்பி அதிகமாக சுரக்கும்போது அது ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிக்கும், தலைவலி, பார்வை குறைபாடு இன்னும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். பிட்யூட்டரி சுரப்பி ஒரு தலைமை சுரப்பி என்பதால் இதில் ஏற்படும் சிறு பாதிப்பும் மொத்த நாளமில்லா சுரப்பி மண்டலத்தையும் பாதிக்கும். எனவே வைட்டமின் A, D, E மற்றும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவை தொடந்து உட்கொள்வது அவசியம்.

அமைப்பு ரீதியாக இந்தச் சுரப்பி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.

 1. முன்பகுதி மடல் – அடினோஹைப்போபிஸிஸ் (Adenohypophysis).
 2. பின்பகுதி மடல் – நியூரோஹைப்போபிஸிஸ் (Neurohypophysis).

முதலாவதில் சுரப்பித் திசுக்களும் இரண்டாவதில் நரம்புத் திசுக்களும் உள்ளன. இந்த இரண்டாவது மடல் நேரடியாக எந்த ஹார்மோன் சுரப்பிலும் ஈடுபடுவது இல்லை. ஹைப்போதலாமஸ் சுரக்கும் ஹார்மோன்களை சேகரித்து வெளியேற்றும் பணியை செய்கிறது. முதல் மடலானது ஐந்து ஹார்மோன்களை சுரக்கிறது.

அவை….

தெரிந்து கொள்ள காத்திருங்கள்.

– மாயாஜாலங்கள் தொடரும் –

                                                                                                                                                                                                                        -ndeepika98@gmail.com-

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
 2. கணையம் - தீபிகா நடராஜன்
 3. அட்ரினல் சுரப்பி - தீபிகா நடராஜன்
 4. தைமஸ் சுரப்பி - தீபிகா நடராஜன்
 5. நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்
 6. கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்
 7. உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்
 8. உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
 9. உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்
 10. ஹார்மோன் மாயாஜாலங்கள் - தீபிகா நடராஜன்