ஹார்மோன் மாயாஜாலங்கள் – 7               

“கூடினும் குறையினும் நோய் செய்யும்” என்ற கூற்று எதற்கு பொருந்துமோ இல்லையோ நாளமில்லா சுரப்பிகளுக்கு மிகச்சரியாய் பொருந்தும். தைராய்டு ஹார்மோன் சுரப்பதன் அளவில் மாற்றங்கள் ஏற்படும் போது அவை இரண்டு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

  1. ஹைப்பர்தைராய்டு(hyperthyroid)
  2. ஹைப்போதைராய்டு(hypothyroid)
  1. ஹைப்பர்தைராய்டு(hyperthyroid)

தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பதை ஹைப்பர் தைராய்டிசம் என்போம். இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும். இதற்கான முக்கியக் காரணம் பரம்பரைதான். தவிர, டென்ஷன், ஸ்டிரெஸ் அதிகமாக இருந்தாலும், தைராய்டு சுரப்பி தூண்டப்பட்டு அதிகமாக ஹார்மோன் சுரப்பு நிகழலாம். இவர்களுக்கு கடகடவென உடல் எடை 15 அல்லது 20 கிலோ வரைகூட குறையும். மட்டுமின்றி ஹைப்பர் தைராய்டு இருந்தாலும் இப்படி எடைக் குறையும்.

இவர்களுக்கு, கை, கால்களில் நடுக்கம் இருக்கலாம். தூக்கமின்மை, படபடப்பு, வேகமான இதயத் துடிப்பு, டென்ஷன், வியர்த்துக் கொட்டிக்கொண்டே இருக்கும். அடிக்கடி மலம் கழித்துக் கொண்டே இருப்பார்கள். சிலர், சாப்பிட்ட உடனே மலம் கழிக்கப் போவார்கள். ஆனால், பேதி ஆகாது.

  1. ஹைப்போதைராய்டு(hypothyroid)

தைராய்டு சுரப்பி குறைவாக சுரப்பது ஹைப்போ தைராய்டிசம் எனப்படுகிறது. இது பெண்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

இதை பிரைமரி, செகண்டரி என இரண்டு நிலைகளாக பிரிக்கலாம். தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாத நிலைதான் பிரைமரி. பொதுவாக இந்தப் பிரச்சனை பரம்பரைத் தன்மை காரணமாக வரலாம். பாட்டிக்கு, அம்மாவுக்கு, அம்மாவுடன் பிறந்தவர்களுக்கு அல்லது அப்பாவுடன் பிறந்தவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்திருந்தால், அடுத்தடுத்த தலைமுறைக்கும் வர வாய்ப்பிருக்கிறது. தைராய்டு சுரப்பியை அறுவைசெய்து எடுத்திருந்தாலும் அவர்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் வரும்.

மூளையின் பிட்யூட்டரி சுரப்பியில் பிரச்சனை ஏற்பட்டு அதன் மூலம் வருகிற தைராய்டு குறைபாட்டை செகண்ட்ரி ஹைப்போ தைராய்டிசம் என்கிறார்கள்.

சருமம் வறண்டுப்போதல், முடி உதிர்தல், மாதவிடாய் பிரச்சனை, கருத்தரிப்பது தள்ளிப் போவது, ரத்தசோகை, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், உடல் சோர்வு எனப் பல பிரச்சனைகள் வரும் என்றாலும், இவை அத்தனையுமே எல்லோருக்கும் வந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும்

தைராய்டு சுரப்புக் குறைபாட்டின் பிரைமரி நிலையை ரத்தப் பரிசோதனை செய்தே கண்டுபிடித்து விடலாம். செகண்ட்ரி என்றால், ஒரு சிலருக்கு மட்டும் ஸ்கேன் செய்ய வேண்டி வரலாம்.

ஒரு சிலருக்கு கடுமையான தைராய்டு பிரச்சனை இல்லாமல், சப் கிளினிக்கல் தைராய்டிசம் இருக்கலாம். அதாவது கழுத்தில் இருக்கிற சுரப்பியில் இருந்து சுரக்கிற  T3, T4  ஹார்மோன்கள் நார்மலாக இருக்கும். ஆனால், மூளையில் இருக்கிற பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து சுரக்கிற  TSH ஹார்மோன் அதிகமாக இருக்கும்.

ஹைப்போ தைராய்டிசமும்  மற்றும் கருவுறுதலும்

ஒரு சில பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது தைராய்டு குறைவாக சுரக்கிறப் பிரச்சனை வரலாம். ஒருவேளை தைராய்டு பிரச்சனைக்காக  மாத்திரை சாப்பிடுவதால் கருவில் இருக்கிற சிசுவுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. மாத்திரை எடுக்கவில்லையென்றால்தான், குழந்தைக்கு மூளை வளர்ச்சியில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.ஜர்னல் ஆஃப் அப்ளைடு அண்ட் பேசிக் மெடிக்கல் ரிசர்ச் ஆய்வின்படி, குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் இருக்கும் 2% முதல் 4% பெண்கள் குறைந்த தைராய்டு ஹார்மோன் அளவைக் கொண்டுள்ளனர். ஹைப்போ தைராய்டிசம் பெண்களின் கருத்தரிக்கும் திறன் மற்றும் கருவை நீண்ட காலத்திற்கு கொண்டு செல்லும் திறன் ஆகிய இரண்டிலுமே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தைராய்டு ஹார்மோன் கருவுறுதலில் தலையிடுவது  பெண்களுக்கு மட்டுமே வரும் பாதிப்பு அல்ல. ஆண்களில் தைராய்டு கோளாறுகள் இருந்தால் அது ஆண், பெண் இருவரின் ஒட்டுமொத்த கருவுறுதலையும் பாதிக்கும். ஒழுங்குபடுத்தப்படாத தைராய்டு செயல்பாடு விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

ஹைப்போதைராய்டிசம் கீழ்காணும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

  1. மாதவிடாய் சுழற்சியில் சீர்குலைவு.
  2. அண்டவிடுப்பில் (Ovulation) குறுக்கீடு.
  3. கருச்சிதைவுக்கான வாய்ப்பு
  4. முன்கூட்டிய பிறப்புக்கான (Premature birth) வாய்ப்பு அதிகரிப்பது.

ஹைப்போ தைராய்டிசமும் குழந்தைகளும்

கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன், தேவையான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காத பட்சத்தில் குழந்தைக்கு ஹைப்போ தைராய்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிப்படைகிறது.

பொதுவாக குழந்தை வளர வளர அதன் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். ஆனால், ஹைப்போ தைராய்டு உள்ள குழந்தைக்கு ‘வளர்ச்சி மைல்கல்’ தாமதப்படும். உதாரணமாக, தாயின் முகம் பார்த்துச் சிரிப்பது, குரல் கேட்டுத் திரும்புவது, நடக்கத் தொடங்குவது, பல் முளைப்பது, பேச்சு வருவது, ஓடியாடி விளையாடுவது மற்றும் புத்திக்கூர்மையிலும் (I.Q.) பின்னடைவும் பாதிப்பும் ஏற்படும். வயதுக்கு ஏற்ற அதன் செயல்பாடுகளில் மந்தமான நிலை உண்டாகும். மாறுகண், காது கேளாமை போன்ற குறைபாடுகளும் தோன்றலாம்.மேலும், கற்றலிலும் நினைவாற்றலிலும் குறைபாடுகள் தோன்றும். பெண் குழந்தைகள் பருவமடைவதில் தாமதம் ஏற்படும் அல்லது மாதவிலக்கு அதிக நாட்கள் நீடிக்கும். இவ்வாறு ஏற்படும் நிலையில் குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து தகுந்த சிகிச்சை பெற்றால் பாதிப்புகள் குறையும்.

தைராய்டு பரிசோதனைகள்                    

 வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் T3, T4,TSH,ஆகியவற்றின் அளவுகளைப் பரிசோதிப்பதன் மூலம் நோயின் நிலையை தெரிந்துகொள்ளலாம். இது தவிர அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் தைராய்டு சுரப்பியின் அளவு, வடிவம், எடை ஆகியவற்றை அளந்து தைராய்டு பாதிப்பை கணிக்க முடியும்.

தைராய்டும் உணவும்                                           

மருத்துவ ஆலோசனையின் படி மருந்துகள் எடுத்து கொள்வதுடன் உணவு பழக்கங்கள் மூலமும் தைராய்டை கட்டுக்குள் வைக்க முடியும். பால், யோகர்ட், முட்டை, இறைச்சி ஆகியவை தினசரி அயோடின் தேவையை பூர்த்திசெய்ய உதவுகின்றன.  தானியங்களில் ஓட்ஸ், பார்லி மற்றும் பழுப்பு அரிசி ஆகியவற்றில் உள்ள வைட்டமின் பி வளர்ச்சிதை மாற்றத்தை சீர்செய்து தைராய்டு அளவை கட்டுக்குள் வைக்கும்.

மேலும் பதப்படுத்தப்பட்டவை, பேக்கரி உணவுகள், பாஸ்ட் ஃபுட் ஆகியவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சோளம், ஆளி விதை போன்ற சல்பர் அதிகம் உள்ள உணவுப் பொருட்களும், முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகளும் தைராய்டு சுரப்பியால் அயோடினை உறிஞ்ச முடியாமல் செய்கிறது. எனவே உணவுபழக்கத்தை கவனிப்பது மருத்துவமனையின் தேவையை பாதியாக குறைக்கும்.

– மாயாஜாலங்கள் தொடரும் –

   (ndeepika98@gmail.com)

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  2. கணையம் - தீபிகா நடராஜன்
  3. அட்ரினல் சுரப்பி - தீபிகா நடராஜன்
  4. தைமஸ் சுரப்பி - தீபிகா நடராஜன்
  5. கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்
  6. உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்
  7. உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  8. சுரப்பிகளின் நடனம் -தீபிகா நடராஜன்
  9. உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்
  10. ஹார்மோன் மாயாஜாலங்கள் - தீபிகா நடராஜன்