தொடர்  I

காரணமே இல்லாமல் நீங்கள் மகிழ்ச்சியாக/ சோகமாக இருந்தது உண்டா?   வயிறு நிறைய உண்டு முடித்ததும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஏதேனும் சாப்பிடும்படி மனம் உங்களை தூண்டுகிறதா? கடும் கோபத்தில் இருக்கும் தருணங்களில் ஏதாவது சாப்பிட்டால் மனம் அமைதியடைவதை கண்டு ஆச்சர்யம் அடைந்தது உண்டா? காரணமின்றி தூக்கம் தடைபடுகிறதா? மாதவிடாய்க்கு முன்பு தொட்டால் சிணுங்கியாய் கோபம் வருகிறதா? கருவுற்று  இல்லாதபோது கூட உங்கள் வீட்டு நாய்க்குட்டி கருவுற்ற நாயை போலவும், புதிதாக குட்டிகள் ஈன்ற நாயை போலவும் நடந்து கொண்டதை கண்டு பெரும் குழப்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்களா? உங்கள் வீட்டு குட்டி இளவரசன்/ இளவரசி மிககுறுகிய காலத்தில் நெடுநெடுவென வளர்ந்து உங்களை அதிர்ச்சி அடைய வைக்கிறார்களா? மேலும் பதின்பருவத்தில் மிக பிடித்தவர்களை காணும்போது மின்மினிகளும், பட்டம்பூச்சிகளும் உங்களை சுற்றி பறந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்தானே?

                           இதற்கெல்லாம் என்ன காரணம் என்று எப்போதேனும் யோசித்தது உண்டா நீங்கள்? இந்த எல்லா கேள்விகளும் உங்களுக்கு இருந்தால் அதற்கு ஒரே ஒரு பதில் தான் நான் உங்களுக்கு சொல்ல போகிறேன். அது “ஹார்மோன்கள்”

ஆம்! பசி, தூக்கம், கோவம், நிறம், உடலமைப்பு, குரலின் தன்மை, பாலினம், இனப்பெருக்கம் என மனித உடலின் எல்லா செயல்பாடுகளையும் தீர்மானிப்பது ஹார்மோன்களே. ஹார்மன் என்ற கிரேக்க சொல்லில் இருந்து உருவானதே ஹார்மோன் என்ற சொல். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த W.H பேய்லிஸ் மற்றும் E.H. ஸ்டார்லிங் (1902) என்ற உடற்செயலியல் வல்லுநர்களே ஹார்மோன் என்ற சொல்லை அறிமுகம் செய்தவர்கள். நாளமில்லா சுரப்பிகளின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை பற்றிய அறிவியல் பிரிவு என்டோகிரைனாலஜி என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாகவே விலங்குகளின் உடலில் இருவகையான சுரப்பிகள் உள்ளன:

 1. நாளமுள்ள சுரப்பி (நரம்பு)
 2. நாளமில்லா சுரப்பி

நாளமுள்ள சுரப்பிகள் என்சைம் எனப்படும் நொதிகளை சுரக்கின்றன. இவை நாளங்கள் மூலம் உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வியர்வை, உமிழ்நீர், கண்ணீர், பால், காது மெழுகு போன்றவற்றின் செயல்பாட்டிற்கு நாளமுள்ள சுரப்பிகளே காரணம்.

நாளமில்லா சுரப்பிகள் மூலம் சுரக்கப்படும் ஹார்மோன்கள் நேரடியாக ரத்தத்தில் கலந்து, உடல் முழுவதும் விரைவாக பரவி உடலை செயல்பட வைக்கும். உடலின் பல்வேறு இடங்களில் அமைத்துள்ள நாளமில்லா சுரப்பிகளே ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. எடுத்துக்காட்டாக தைமஸ், தைராய்டு ஆகியவற்றை குறிப்பிடலாம். மேலும் ஹார்மோன்கள் என்பவை வேதிப்பொருட்கள் அடங்கிய நீர்மநிலை புரதங்கள். உடலின் எந்த உறுப்பிற்கு வேதிபொருட்களின் பயன்பாடு தேவையோ அவை நேரடியாக ரத்தத்தில் இருந்து அவற்றை எடுத்துக்கொள்ளும்.

கீழ்காணும் நாளமில்லா சுரப்பிகளே ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன

 1. பீனியல் சுரப்பி
 2. பிட்யூட்டரி சுரப்பி
 3. தைராய்டு சுரப்பி
 4. தைமஸ் சுரப்பி
 5. அட்ரினல் சுரப்பி
 6. கணையம்
 7. அண்டகம் (பெண்)
 8. விதைப்பை (ஆண்)

இவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களே உடல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு மூலக்காரணம். இவற்றின் சமநிலை மாற்றத்திற்கு உட்பட்டு, ஹார்மோன் அளவு கூடினாலோ, குறைந்தாலோ அது பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கும்.

நாளமில்லா சுரப்பி மண்டலம்

ஹார்மோன் சமநிலை:

உடலின் அன்றாட செயல்பாடுகளை சீராக வைத்துக்கொள்ள ஹார்மோன் சுரப்பின் சமநிலை மிக முக்கியம். இந்த சமநிலையில் மாற்றம் ஏற்படும்போது உடலில் பல்வேறு பாதிப்புகள் உண்டாக தொடங்குகின்றன. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாயின் போதும், மாதவிடாய்க்கு முந்தய காலங்களிலும் (premenstrual dysphoric disorder (PMDD))., மாதவிடாய்க்கு பின்னும் (post-menstrual syndrome), மாதவிடாய் நிற்கும் காலத்திலும் (menopause syndrome) ஹார்மோன் சமநிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது உடல்நலம்  மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகளை உண்டாக்குகிறது.

ஹார்மோன் சமநிலையின் பொதுவான அறிகுறிகள்:

மனநிலையில் தொடர்  மாற்றம்,

மன அழுத்தம்,

தூக்கமின்மை,

தொடர்ச்சியான தலைவலி,

நினைவு திறன் குறைபாடு,

பசியின்மை,

செரிமான பிரச்சனைகள்,

திடீர் எடை இழப்பு/அதிகரிப்பு

தொடர்ச்சியான உடல் வலி

இப்படிப்பட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் தொடர்ச்சியாக இருந்தால் அவை ஹார்மோன் சமநிலை மாற்றத்தால் ஏற்படும் பின்விளைவுகளே. நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் “கார்டிசோல் ஹார்மோன்” அளவுகள் மாறுவதால் இந்த பிரச்சனைகள் உண்டாகுகின்றன. உணவு பழக்கங்களை கடந்து இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் நமது உடல் மற்றும் மனநிலையில் பெரிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இம்மாற்றங்கள் நேரடியாக நமது உடலின் ஹார்மோன் சுரப்பை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில எளிமையான உணவு பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் ஹார்மோன் சமநிலையை கட்டுக்குள் வைக்கலாம்.

அவை என்னென்னவென தெரிந்துகொள்ள காத்திருங்கள்…

– ஹார்மோன் மாயாஜாலங்கள் தொடரும் –

ndeepika98@gmail.com

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
 2. கணையம் - தீபிகா நடராஜன்
 3. அட்ரினல் சுரப்பி - தீபிகா நடராஜன்
 4. தைமஸ் சுரப்பி - தீபிகா நடராஜன்
 5. நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்
 6. கேடயசுரப்பி - தீபிகா நடராஜன்
 7. உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்
 8. உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
 9. சுரப்பிகளின் நடனம் -தீபிகா நடராஜன்
 10. உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்