ஹார்மோன் மாயாஜாலங்கள் – 6

யாருக்கேனும் பல்கூச்சம் ஏற்பட்டால் குளியலறை, டீ கடை, உணவகம் என்று பாரபட்சம் இல்லாமல் கதவை உடைத்துக்கொண்டு சமந்தா வந்து நின்று உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? என்று கேட்கிறார். நாமும் அடுத்த முறை கடைக்கு செல்லும்போது சமத்தாக உப்பு போட்ட பேஸ்ட்டை வாங்கிகொள்கிறோம். ஆனால் உப்பில் உள்ள அயோடினை மட்டும் அம்போவென அப்படியே விட்டுவிடுகிறோம். இப்போதெல்லாம் நாம் பரவலாக கேள்விப்படும் தைராய்டு சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அயோடின் குறைபாடு என்று நான் சொன்னால் அதிர்ச்சியாக மாட்டீர்கள் தானே?

ஆம்! இந்தியாவிலுள்ள பத்தில் ஒருவர் தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். 2021 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்கள். தைராய்டு நோயில் இருக்கும் பிரச்னை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. ஆண்களை விட இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது.

தைராய்டு சுரப்பி

மனித உடலின் நாளமில்லா சுரப்பிகளில் மிகப்பெரியது தைராய்டு சுரப்பி. தைராய்டு என்பது கிரேக்க சொல். கிரேக்க மொழியில் thyrose என்றால் கேடயம் என்று பொருள். நோய்களில் இருந்து தைராய்டு சுரப்பி நம் உடலை கேடயமாக பாதுகாப்பதால் இதற்கு “கேடயசுரப்பி” என்று பெயர். உடலின் வளர்ச்சிக்கும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் முக்கிய காரணியாக திகழ்வதால் இதை “ஆளுமை சுரப்பி” என்றும் அழைக்கின்றனர்.

குரல்வளைக்கு கீழே முன்கழுத்து பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி நான்கு சென்டிமீட்டர் உயரமும், 15 முதல் 20 கிராம் எடையும் கொண்டது. இது பார்ப்பதற்கு வண்ணத்து பூச்சி வடிவத்தை ஒத்திருக்கும். இந்த சுரப்பி ஹார்மோன்களை குறைவாகவோ கூடுதலாகவோ சுரக்கும்  போது மனித உடலில் பல சிக்கல்களை உண்டாக்குகிறது. தைராய்டு சுரப்பிக்கு அருகில் பக்கத்திற்கு இரண்டு வீதம் சிறிய அளவிலான இரண்டு சுரப்பிகள் உள்ளன. இதற்கு பாரா தைராய்டு என்று பெயர்.   பிட்யூட்டரி சுரப்பியின் TSH எனப்படும் தைராய்டு ஊக்குவிப்பு ஹார்மோன் தான் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை  கட்டுப்படுத்துகிறது. மனித உடலில் கருஉற்பத்தியான முன்றாவது வாரத்திலேயே தைராய்டு சுரப்பி உருவாக தொடங்கிவிடும். ஆனால் மூன்றாவது மாதத்தில் இருந்தே அது தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்ய தொடங்கும். அது வரையில் சிசுவுக்கு தேவையான தைராய்டு ஹார்மோன் தாயிடமிருந்தே பெறப்படுகிறது. எனவே தாய்க்கு தைராய்டு  பிரச்சனைகள் இருப்பின் அது குழந்தையை கடுமையாக பாதிக்கும்.

தைராய்டு சுரப்பி மூன்று வகையான ஹார்மோன்களை சுரக்கிறது.

  1. T4 அல்லது தைராக்சின்
  2. T3 அல்லது ட்ரைஅயோடோதைரோனின் (Triiodothyronine)
  3. கால்சிடோனின் (calcitonin)

T3 மற்றும் T4 ஹார்மோன்கள் உங்கள் ரத்தத்தில் கலந்து  உடலின் ஒவ்வொரு செல்லையும் சென்றடைந்து வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. புரதச் சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவது, சிறுகுடலுக்கு செல்லும் உணவுக் கூழானது ஆற்றலாக மாற்றப்படுவது, ரத்தத்தில் கொழுப்பு அளவை  கட்டுப்படுத்துவது, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவது, பருவமடைவதற்கும் கருத்தரித்தலுக்கும் துணைபுரிவது  என இந்த ஹார்மோன்கள் அற்புதமான பணிகளை செய்கின்றன. கால்சிட்டோனின் ஹார்மோன் இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. உடலின் சீதோஷ்ண நிலையை சமநிலையில் வைக்கிறது.

இவ்வளவும் செய்யும் தைராய்டு ஹார்மோன் தடையில்லாமல் கிடைக்க வேண்டுமானால் கட்டாயம் உணவில் அயோடின் கலந்த உப்பை மட்டும் உபயோகியுங்கள். தினசரி நம் உடலுக்கு வயதிற்கு ஏற்ப 50 முதல் 150 மைக்ரோகிராம்  வரை அயோடின் தேவைப்படுகிறது.

தைராய்டில் பிரச்சனை என்றாலே நம் நினைவுக்கு வருவது முன்கழுத்துக் கழலை நோய். இது  கழுத்தில் தொண்டைப் பகுதிக்குக் கீழே வீக்கம் ஏற்பட்டு, தைராய்டு சுரப்பி அசாதாரணமாக பெரிதாகும் நிலை ஆகும். அயோடின் குறைபாடே முன்கழுத்துக் கழலைக்கான முதன்மைக் காரணமாக கருதப்படுகிறது.

இதையும் தாண்டி நாம் தெரிந்துகொள்ளாத நிறைய பிரச்சனைகள் உடலில் தைராய்டு அளவு மாறும்போது உண்டாகின்றன. அவை என்னென்னவென தெரிந்துகொள்ள காத்திருங்கள்…

 – மாயாஜாலங்கள் தொடரும் –

                      (ndeepika98@gmail.com)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. அண்டகம் சுரக்கும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  2. கணையம் - தீபிகா நடராஜன்
  3. அட்ரினல் சுரப்பி - தீபிகா நடராஜன்
  4. தைமஸ் சுரப்பி - தீபிகா நடராஜன்
  5. நாளமில்லா சுரப்பிகள் - தீபிகா நடராஜன்
  6. உயிர்கடிகாரம் - தீபிகா நடராஜன்
  7. உடல் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் - தீபிகா நடராஜன்
  8. சுரப்பிகளின் நடனம் -தீபிகா நடராஜன்
  9. உணவில் பிறக்கும் உணர்வுகள் - தீபிகா நடராஜன்
  10. ஹார்மோன் மாயாஜாலங்கள் - தீபிகா நடராஜன்