பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டசபையில் தலித்துகளுக்கு போதுமான பிரதிநுத்துவம் வழங்கப்படவில்லை எனும் வருத்தத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் சமூகவலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு கருத்தை வைத்து சில நாட்கள் சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வைக்கப்பட்டன. “நீல சங்கி” சதித்திட்ட உரையாடல்கள் மீண்டும் வலுத்தன. விளைவாக, அந்த கருத்தை இப்போது நீலம் பண்பாட்டு மையம் நீக்கியுள்ளது. ஆனால் அவர்கள் இந்த அழுத்தத்துக்கு ஆளாகி தம் கருத்தை நீக்காமல் அதை வேறு வடிவில் கூடுதல் ஆதாரங்களுடன் வாதங்களுடன்  மீள்பிரசுரித்திருக்கலாம் என நினைக்கிறேன்.

 எனக்கு இந்த “தலித்துகள் பாஜகவிடம் சோரம் போகிறார்கள்” வகை குற்றச்சாட்டுகள் மீது என்றுமே உவப்பிருந்ததில்லை. இப்போது எல்லா மத, சாதிப் பகுப்புகளை சேர்ந்தவர்களும் பாஜகவை ஆதரித்தோ அனுசரித்தோ போகிறார்கள். அடுத்தடுத்த தேர்தல்களில் ஆட்சி மாற்றம் வந்தால் இவர்கள் புலம்பெயர்ந்து ஆளும் கட்சியை ஆதரிக்க போகிறார்கள். அது அவர்களுடைய விருப்பம். யாரும் நீல நாடார்கள், நீல கிறித்துவர்கள் என்று சமூகரீதியாக விமர்சிப்பதில்லையா? தலித்துக்களை மட்டும் ஏன் இப்படி குறிவைக்கிறார்கள்?

இன்னொரு பக்கம், முற்போக்கு கட்சிகளின் அரசியல் மீது அதிருப்தி கொண்ட தலித்துகளும், சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். குறிப்பாக போதுமான பிரதிநித்துவம் தமக்கு இருப்பதில்லை எனும் வருத்தம். இது நியாயமானதெனத் தோன்றுகிறது – இடதுசாரிகளோ திமுகவோ அமைச்சரவையை அமைக்கும் போது இதில் கவனம் செலுத்துவது அவசியம். ஏனென்றால் அடுத்த கால் நூற்றாண்டு அரசியல் மீது இந்த “அதிருப்தி” ஒரு தாக்கம் செலுத்தப் போகிறது. பாஜக தொடர்ந்து பிரதிநித்துவ ஆசை காட்டி சிறுபான்மை மதத்தவர்களையும், தலித்துகளையும் இழுத்து வருகிறது. பாஜகவின் சித்தாந்தத்திடம் நம்பிக்கை இல்லாதவர்களும் அவர்களுடன் நடைமுறைத் தேவைக்காக உடன்படும் கட்டாயம் ஏற்படுகிறது.

ஆம், பாஜக தலைமைப் பொறுப்பை எப்போதும் நாக்பூர் பார்ப்பனர்களிடமும், அடுத்தகட்ட தலைமையை வியாபாரிகளிடமும் மட்டுமே கொடுக்கும். இப்படி கொடுத்தபடியே, அது மாநில அளவில் தாழ்த்தப்பட்டோரில் சிலர் எழுச்சி பெற இடமளிக்கும் – இது தற்காலிகமாகக் கூட இருக்கலாம், ஆனால் அது வெறுமையான இடத்தில் ஏற்படும் முக்கிய சலனமாக இருக்கும். இது பாரதூரமான விளைவுகளை நமது அரசியலில் பின்னர் ஏற்படுத்தும். இவர்களை ஏமாற்றி மீண்டும் சனாதன அமைப்புக்குள் கருத்தியல் அடிமை ஆக்குவார்கள். தற்காலிக வாய்ப்புகளை அளித்து விட்டு தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் வளர்வதற்கு, அதிகாரம் பெறுவதற்கான வாய்ப்புகளை மறுக்கும் வேலைகளை அடித்தளத்தில் செய்வார்கள். உ.தா, கடந்த ஏழு ஆண்டுகளில் மோடியின் ஆட்சியின் கொள்கை முடிவுகள், சட்டதிருத்தங்கள் எவையும் விளிம்புநிலையினரிடன் முன்னேற்றத்துக்கு சாதகமானவை அல்ல. ஒரு பக்கம் வாய்ப்பளித்தபடியே மறுபக்கம் நசுக்குவதே அவர்களுடைய கொள்கை – மகாபலியை வரம் கேட்கும் குள்ள பார்ப்பனின் வடிவெடுத்து வந்து விஷ்ணு மிதித்து பாதாள உலகத்துக்கு அனுப்பியது போல். ஏனென்றால் அவர்களுடைய கட்சி சித்தாந்தமானது இந்து மகாசபை காலத்தில் இருந்தே வேதம் ஓதுவோர், அவர்களுக்கு ஆதரவானவர்களை தலைமைக்கு கொண்டு வந்து, வேதகால கலாச்சார அமைப்பை மீளுருவாக்க வேண்டும், பார்ப்பனீய பாரதத்தையே இந்தியாவாக்க வேண்டும் என்பதே. அம்பேத்கர் தனது எழுத்துக்களில் பூர்வ பௌத்தர்களான தலித்துகளுக்கும் வேத மரபை சேர்ந்த பார்ப்பனர்களுக்குமான பகை பல நூற்றாண்டுகள் பழையது, ஒரு போதும் இந்த முரண் முடிவுக்கு வராது என்கிறார் (“சூத்திரர்கள் என்பவர்கள் யார்?”). ஆகையால், பூர்வ விரோதிகளுடன் கைகோர்ப்பது தலித்துகளுக்கு தொலைநோக்கு அடிப்படையில் ஆபத்தானதே.  இந்திய ஜனாதிபதியான ராம் நாத் கோவிந்த் ஒருமுறையாவது தலித் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்ததுண்டா? தலித் இளைஞர்கள் – ரோஹித் வெமுலாவைப் போல – எதிர்ப்பரசியலை முன்னெடுத்தால், அம்பேத்கரியத்தை செயல்படுத்திய போது, அவர்களை “தேசவிரோதி”, “பயங்கரவாதிகள்” என சித்தரித்தவர்களே பாஜகவினர். இந்திய சமூக அமைப்பின் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முயலாத, இங்கு எந்த மாற்றத்தையும் கோராத கோவிந்துகள், எல்.முருகன்களையே அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த தலித் தரப்பினர் இடையே கலாச்சார ரீதியாக வைதீக இந்து மதத்தை, அதன் பார்ப்பனீயம் சாராத பக்தி மரபை விரும்புகிறவர்களும், மதசார்பின்மையை அதனாலே ஏற்காதவர்களும் உள்ளார்கள். அதே போல முற்போக்கு மதசார்பற்ற கட்சியை ஆதரிக்கும் தலித்துகளும் உண்டு. குறிப்பாக இம்முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றியில் விடுதலை சிறுத்தைகளின் கீழ் தலித்துகளின் பங்களிப்பின் முக்கியத்துவம். இதை முன்பே உணர்ந்து தலித் வாக்குகளை பிரித்து இந்து வைதீக சமூக வாக்காக மாற்றும் நோக்கிலேயே அவர்கள் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமாவளவன் இந்துப் பெண்களை அவமதித்து விட்டார் என ஒரு கடுமையான பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டார்கள். ஆனால் அதையும் மீறி விடுதலை சிறுத்தைகள் மக்களின் நம்பிக்கையை பெற்று, பாஜகவின் சதித்திட்டத்தை முறியடித்தார்கள்.

இன்னொரு பக்கம், அரசியல் ரீதியாக பாஜகவுடன் கைகோர்க்காமல், அதே சமயம் முற்போக்கு கட்சிகளின் பாராமுகத்தால் சோர்ந்து போன தலித்துகளும் சிறுபான்மையினரும் இருக்கிறார்கள். இப்படி பலதரப்பட்டவர்கள் தலித் மக்களிடையே உண்டு. இவர்களில் ஒரு பகுதியினர் முற்போக்கினரை விமர்சித்தால் உடனே கட்சி ஆதரவாளர்கள் அவர்களுடைய வருத்தத்தை, நியாயத்தை உணராமல் “நீலசங்கிகள்” எனப் பழிப்பது தவறு.

அடுத்து, அமைச்சரவையில் மத்திய சாதியினர் அதிகமாக இடம்பெறுவது சமூக நீதி சார்ந்து யோசித்தாலும் ஏற்கத்தக்கது அல்ல. என்ன தான் அனைத்து ஒடுக்கப்பட்டோரின் சார்பாக தமது கட்சி செயல்படும் என முற்போக்கு சித்தாந்திகள் கருதினாலும், நேரடி பிரதிநித்துவமே தாழ்த்தப்பட்டோர் அரசியல்படவும், நம்பிக்கை பெறவும் உதவும். எதிர்கால செயல்திட்டமாக இக்கட்சிகள் இதைக் கருதும் என நம்புகிறேன்.

இன்று தலித்துகளும், சிறுபான்மையினரும் கோரும் அமைச்சரவையில் நேரடி பிரதித்துவம் என்பது கூட நிரந்தர தீர்வு அல்ல – நம்முடைய சட்ட சபைகளில் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான பிரதிநிதிகளை அளிக்கும் சட்டமாற்றமே சரியான தீர்வாக இருக்கும். அதாவது இப்போதுள்ள பொது வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலான பிரதிநுத்துவம் நமது அமைப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு ஒரு முக்கிய காரணம் – மதவாதிகளும் சாதியவாதிகளும் அதை பயன்படுத்தி பல கலகங்களை உண்டு பண்ணி மக்கள் இடையே பிரிவினைகளை ஏற்படுத்தி, பெரும்பான்மை சாதி, மதங்களின் வாக்குகளை வெல்கிறார்கள். சில இடங்களில் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து முற்போக்கு சக்திகளை முறியடிக்கவும் செய்கிறார்கள். இந்த மிக மோசமான அரசியலுக்கு முடிவு கட்ட ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் பரப்பின் அடிப்படையில் தொகுதியை பிரிக்காமல் சாதி, மதம், வர்க்கம், ஒடுக்கப்படும் மூன்றாம் பாலினம், மாற்றுத்திறனாளிகள் அடிப்படையில் பிரிக்கலாம். அனைத்து மக்களுக்கும் ஒரே எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் அமையும்படி பண்ணலாம். இதை சுதந்திரத்துக்கு முன்பே அம்பேத்கரும், ஜின்னாவின் வேறு வடிவங்களில் கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள். இத்தகைய அமைப்பில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். பெரும்பான்மை சமூகத்தினர் மற்றும் மதத்தினர் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோருக்காக பேசுவதும், செயல்படுவதுமே முற்போக்கு, மதசார்பின்மை அரசியல். ஆனால் இந்த அரசியல் அம்மக்களை குரலற்றவர்கள் ஆக்குகிறது, அவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்காமல் களிம்பு பூசி வலிநிவாரணம் மட்டும் தருகிறது. நம்முடைய தேசத்து வனங்களின் உரிமையாளர்களான பழங்குடிகளின் உரிமைகளை யாரும் பொருட்படுத்துவதில்லை என்பது ஒரு உதாரணம். எத்தனைக் காலம் தான் அவர்களும் சமவெளி மக்களின் கருணையை கோரி பொருட்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்? இன்னொரு பக்கம் பெரும்பான்மை மதத்தவர் மட்டுமே வாக்களித்தால் போதும் என நேரடியாகக் கோரும் பாஜகவோ வெளிப்படையாக எண்ணிக்கையில் வலுத்தவனே வாழ்வான், அதில் தவறில்லை என நம்மை மூளைச்சலவை செய்கிறது.

1931இல் நடந்த இரண்டாவது வட்டமேஜை கருத்தரங்கின் போது அம்பேத்கருக்கும், காந்திக்கும் இடையில் பொதுத்தொகுதிகள் குறித்து நடந்த கருத்துமோதல், காந்தி உண்ணாவிரதம் இருந்து இறுதியில் அம்பேத்கரை அனைத்து சாதினரும் இணைந்து வாக்களிக்கும் தொகுதி அமைப்புக்கு ஒப்புக் கொள்ள வைத்ததைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் (பூனா ஒப்பந்தம்). இந்த விவாதத்தின் முடிவில் காங்கிரசார் தனித்தொகுதி முறையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதித்தனர் – ஆனால் தலித்துகள் தலித்துகளுக்கே வாக்களிப்பார்கள் எனும் கோரிக்கையை மறுத்து, தலித் வேட்பாளர்களுக்கு பொது வாக்காளர்கள் வாக்களிக்கும் முறையை கொண்டு வந்தார்கள் (ஆனால் இஸ்லாமியர்களுக்கு தனித்தொகுதியை அளிக்கப்படவில்லை). இதில் ஒரு சிக்கல் எழுந்தது – இந்த நடைமுறை வந்ததும் 1937இல் நடந்த முதல் தேர்தலில் இருந்தே பொதுவாக்காளர்களின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் கட்சியின் தலித் வேட்பாளர்களால் சுலபத்தில் வெல்ல முடிந்தது. இந்த தலித் பிரதிநிதிகள் பின்னர் இயல்பாகவே தலித்துகளுக்காக குரல் கொடுக்காமல் பெரும்பான்மையினர் அழுத்தத்துக்கு ஆளாகி முகமற்றவர்களாக இருந்தனர்.  இதனாலே 1955இல் அம்பேத்கர் பொதுத் தொகுதிகள் என்பவை தலித்துகளை இந்துக்களின் அடிமைகளாக வைத்திருக்குமே ஒழிய அவர்களை சுதந்திரமானவர்களாக இருக்க அனுமதிக்காது என்றார். இன்று இந்திய மக்களவையில் உள்ள 543 இடங்களில் 131 தனித்தொகுதிகளாகும். ஆனால் பொதுவாக்காளர்களின் வாக்குகளால் இந்த 131 இடங்களும் சமூக அடையாளமும் அரசியல் அதிகாரமும் இழந்தவர்கள் ஆகிறார்கள்.

தலித் ஆதரவாளர்கள் ஆட்சியில் பிரதிநித்துவம் கோரும் அதே வேளையில் இந்த வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள ஒரு முக்கிய பாடம் உள்ளது – தனித்தொகுதி போன்றே, ஆட்சியில் பிரதிநுத்துவமும் ஒரு டோக்கனிசமாக மாற வாய்ப்புள்ளது. தலித்துகளுக்கு மட்டுமல்ல, எண்ணிக்கை பலமில்லாத மக்களுக்கு (இஸ்லாமியர், கிறித்துவர்களில் இருந்து மூன்றாம் பாலினத்தோர், மாற்றுத்திறனாளிகள் வரை) அனைவருக்கும் ஒரே எண்ணிக்கையில் பிரதிநிதிகள், அதற்கான சம எண்ணிக்கை தொகுதிகளைக் கோருவதும், அத்தொகுதியில் தனி வாக்காளர்கள் இருப்பதும் அவசியம்.

இதில் சாதி, மத, வர்க்க, பாலின, உடல்சார்ந்த பேதங்களை அங்கீகரிக்கும் ஒரு சிக்கல் உள்ளது. ஆம், 1931இல் இதை வைத்து தான் காந்தியும், பின்னர் வல்லபாய் பட்டேலும் தனித்தொகுதி, தனிவாக்காளர்கள் கோரிக்கையை எதிர்த்தனர். ஆனால் பாகுபாட்டை சட்டரீதியாக அங்கீகரிக்காமல் எப்படி அதைக் கடப்பது, முறியடிப்பது? கல்வியில், வேலையில் இட ஒதுக்கீட்டைப் போல தேர்தல் அரசியலிலும் எண்ணிக்கை சாராத சரிநிகர் பிரதிநுத்துவத்தை கொண்டு வந்து சட்டரீதியாக இப்பாகுபாட்டை அங்கீகரித்து, நடைமுறையிலும் கலாச்சார ரீதியாகவும் பாகுபாட்டை ஒழிப்பதற்கு முயற்சி எடுப்பதே சரியான தீர்வாக இருக்கும். (இந்த முறையின் ஒரு கூடுதல் பலன் இது இந்துத்துவ, சாதீய அரசியலுக்கு ஒரேயடியாக முடிவு கட்டி விடும் என்பது.)