திரையரங்குகள் என்பவை வெறும் சினிமா பார்க்கும் இடம் மட்டுமா?
முன்னொரு காலத்தில், ஊடலில் இருக்கும் மனைவியை கணவர்கள் சினிமா டிக்கெட்டுடன் வந்து சமாதானப்படுத்தி அழைத்துச் செல்லும் இடமாக திரையரங்குகள் இருந்தன. வெளியூரிலிருந்து வரும் உறவினர்களை ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டில் அழைத்துச் சென்று உபசரிக்கும் இடமாக இருந்தன. பெரும்பாலான காதலர்கள் முதன்முதலாக தோள்களை உரசி, கைகளைக் கோத்துக் கொண்டு முத்தமிட்ட இடமாக இருந்தன. நண்பர்களுடன் கூடிக் களித்து, கூச்சலிட்டு, கும்மாளமிடும் இடமாக இருந்தன.
இவ்வாறு நம் வாழ்க்கையில் வெறும் பொழுதுபோக்காக மட்டும் அல்ல. வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருந்த திரையரங்குகள், தற்போது ஐஸியூவில் அனுமதிக்கப்பட்டு தனது உயிரைத் தக்கவைக்க போராடிக்கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு ஒரு நேர்காணலில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள், “சமீப காலமாக தியேட்டருக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. பல காட்சிகள் திரையரங்குகளில் ரத்து செய்யப்படுகின்றன. ஒரு காட்சிக்கு 100 பேராவது வந்தால்தான் நாங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியும். இப்போது உள்ள நிலை தொடர்ந்து நீடித்தால் விரைவில் தியேட்டர்களை மூடவேண்டிய நிலை வரும்” என்று கூறியதை படித்ததிலிருந்தே என் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க ஆரம்பித்தது. தற்போது மூடப்பட்டுள்ள தியேட்டர்கள் மீண்டும் திறந்தாலும் மக்கள் எந்த அளவிற்கு வருவார்கள் என்று நிச்சயமாக சொல்ல முடியாது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் திரையரங்குகள் என்பவை நகரங்களில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் இருக்கும்.
எவ்வளவோ விஷயங்களை காலமாற்றம் என்று ஏற்றுக்கொண்ட என்னால், திரையரங்குகளே இல்லாத நிலை வரலாம் என்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏனெனில் எனது இளமைக் காலத்தில் ஏறத்தாழ 15 ஆண்டுகள், சராசரியாக வாரத்திற்கு நான்கைந்து திரைப்படங்கள் பார்த்தவன் நான். ஒரு நட்பை போல் தமிழ் சினிமாவை நேசித்தவன் நான். ஒரு உறவைப் போல் தமிழ் சினிமாவை கொண்டாடியவன் நான். இப்போதும் நிறைய படங்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
எனது இந்த சினிமா ஆர்வம், எனது தந்தையிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும். அவர் 60 வயது வரையிலும் தமிழில் வெளியான ஏறத்தாழ அத்தனைப் படங்களையும் நல்ல படமோ, குப்பை படமோ உடனே சென்று பார்த்துவிட்டு வருபவர். இவ்வாறு என் தந்தை மிகப்பெரிய சினிமா ரசிகராக இருந்தாலும், எனது அரியலூர் பள்ளிக்காலத்தில், என் அப்பாவிடம் சினிமா பார்க்க அனுமதி வாங்குவது மிகவும் கடினமான காரியம். முதலில் அவர் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வந்து, “இந்த படத்துக்கு போகலாம்” என்றால்தான் நாங்கள் அந்தப் படத்துக்கு செல்லமுடியும்.
படம் பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி அளிக்க, என் அப்பா சில நிபந்தனைகளை வைத்திருந்தார். முதலாவதாக அப்படத்தில் சில்க் ஸ்மிதா, அனுராதா போன்ற நடிகைகளின் நடனங்கள் இருக்கக்கூடாது. இதிலேயே பாதி படங்கள் அவுட்டாகிவிடும். அடுத்து… பெட்ரூமில் கணவன் மனைவி நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருக்கக்கூடாது. இதில் பத்து படங்கள் அவுட். அடுத்து… படத்தில் இரண்டு ரீலுக்கு ஒரு சண்டை இருக்கக்கூடாது. இப்படியே பல படங்கள் அவுட்டாகி, கடைசியில் எங்களுக்கு விசுவின் ‘மணல் கயிறு’ போன்ற படங்களே மிஞ்சும். இந்த நிபந்தனைகளை எல்லாம் அப்பா வெளிப்படையாக கூறியதில்லையென்றாலும், அவர் அனுமதிக்கும் படங்களை வைத்து காலப்போக்கில் நானாகவே அறிந்துகொண்ட விஷயம் இது.
ஆனால் எனது அம்மா வழி பாட்டி இருக்கும் தஞ்சாவூருக்குச் சென்றால், இந்த அனுமதி பிரச்னை எல்லாம் கிடையாது. நான் அடம் பிடித்து பல படங்களுக்கும் பாட்டியை அழைத்துக்கொண்டுச் சென்று விடுவேன். காதல் படமான ‘ஏக் துஜே கேலியே’ படத்திற்கு என்னை அழைத்துச் சென்றது என் பாட்டிதான்.
இது கூட பரவாயில்லை. ஒரு முறை தஞ்சை ஜுபிடர் தியேட்டரில் சத்யராஜ், நளினி நடித்த ‘இரவுப் பூக்கள்” என்ற படம். பேரே ஒரு மாதிரி கிளுகிளுப்பாக இல்லை?அந்தப் படத்துக்கு பாட்டியை அழைத்துக்கொண்டுச் சென்றேன். வாசலில் படப் பெயரைப் பார்த்த பாட்டி லேசாக தயங்கிக்கொண்டு, “வேறு படத்துக்கு போகலாமா?” என்றார். நான் சத்யராஜ் படம்தான் போகவேண்டும் என்று அடம் பிடிக்க… வேறு வழியின்றி அழைத்துச் சென்றார். அந்தப் படத்தில் விபச்சார விடுதியெல்லாம் வரும் என்று ஞாபகம்.
படம் முடிந்து வெளியே வரும்போது கவாஸ்காரத் தெரு ஜோதி மாமா எங்களைப் பார்த்துவிட்டு, “பாட்டியும் பேரனும் சேந்து பாக்குற படமாடா இது?” என்று கூற… “இந்த கம்னாட்டிதான் அழைச்சுட்டு வந்துச்சு” என்று என் பாட்டி என் தலையில் தட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போது யோசித்துப் பார்க்கும்போது, பாட்டி என்னை வெறுமனே சினிமாப் பார்க்க அழைத்துச் சென்றதாக தோன்றவில்லை. எனது விருப்பங்களை நிறைவேற்றும் அன்பின் வெளிப்பாடே அது.
ஆனால் அரியலூரில் இந்த அளவு என் தந்தை அன்பை வெளிப்படுத்தவில்லை என்பதால், வீட்டுக்குத் தெரியாமல் நான் படங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன். ஒரு முறை சக்தி தியேட்டரில் ‘விக்ரம்’ படம் போட்டிருந்தார்கள். என் அப்பா அந்தப் படத்தை பார்த்துவிட்டு வந்து அனுமதி வாங்குவதற்குள் இரண்டு நாட்களாகிவிடும். எனவே வீட்டில் நண்பன் வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு மேட்னி ‘விக்ரம்’ படம் பார்க்கச் சென்றபோது ஒரு
வினோதமான பிரச்னையை சந்தித்தேன்.
தியேட்டர் வாசலிலேயே கையில் பைபிளோடு நின்றுகொண்டிருந்த ஒருவர் என்னை வழிமறித்து,
“சினிமாங்கிறது பாவக்காட்சிகள் நிரம்பியது தம்பி. சினிமாக்கெல்லாம் போகக்கூடாது” என்றார். நான் ஏற்கனவே ‘வீட்டுக்குத் தெரியாமல் படம் பார்ப்பது ஒரு பாவக் காரியம்’ என்ற குற்ற உணர்வோடுதான் தியேட்டருக்கு வந்திருந்தேன். அவர் வேறு பாவக்காட்சி என்று கூற… எனக்கு தூக்கிவாரிப்போட்டது. “பாவக்காட்சிகள் மனதுக்கு கேடு தம்பி…” என்று தொடர்ந்து அவர் கூற… “இந்த ஒரு படம் மட்டும் பாத்துர்றன்ங்க…” என்று கூறிவிட்டு தியேட்டருக்கு ஓடினேன். அந்தப் படத்தில் டிம்பிள் கபாடியாவின் ஒரு நடனத்தைத் தவிர பெரிதாக பாவக்காட்சிகள் ஏதும் இல்லை என்பதில் இன்று வரையிலும் எனக்கு வருத்தம்தான்.
படம் முடிந்து வீட்டுக்கு வந்தால், சினிமாவையே தோற்கடிக்கும் ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது. நான் வீட்டில் நுழைந்தவுடனேயே என் அம்மா, “எங்கடா போய் தொலைஞ்ச?மதியானம் உங்கப்பா சாப்பாட்டுக்கு வந்தப்ப, விக்ரம் படம் ஃபர்ஸ்ட்ஷோ பாக்க பர்மிஷன் வாங்கிட்டேன். அவரு ஏற்கனவே திருச்சில இந்தப் படத்தப் பாத்துட்டாராம். கிளம்பு…” என்று கூற… நான் பேய் முழி முழித்தேன். வேறு வழி? அப்படியே ரிட்டர்னாகி மீண்டும் ஃபர்ஸ்ட் ஷோ விக்ரம்.
இப்படி எத்தனையோ படங்கள்… எனது டீன் ஏஜ் காலத்தின் உச்சத்தில் தெலுங்கு டப்பிங் படங்கள் பார்ப்பதில் மிகுந்த நாட்டம் வந்தது. ஏனெனில் இந்த படங்களில் தமிழ்ப்படங்கள் போல் கஞ்சத்தனமாக ஒரே ஒரு கதாநாயகியை போடாமல், குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று கதாநாயகிகள் இருப்பார்கள். ஆளுக்கு தலா இரண்டு அல்லது மூன்று பாட்டு. அதில் சென்ஸார் அனுமதிக்கும் அளவிற்கு குறைந்தபட்ச ஆடைகளுடன் ஆடுவார்கள். மழையில் உருளுவார்கள். பூக்களில் புரளுவார்கள். அத்தனையும் லட்டு. எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி போன்றோரின் கலையம்சம் பொருந்திய நடனங்களும் உண்டு என்பதை மிகுந்த வெட்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் வளர… காலைக்காட்சி மலையாளப் பட தியேட்டர் ஆபரேட்டர்கள் மீது எனக்கு மிகவும் பொறாமை ஏற்பட்டது. ஏனெனில் அப்படங்களில் பாவக்காட்சிகள் ஏராளமாகக் காணப்படும். அப்போது மலையாளப்படம் ஓட்டும் தியேட்டரில் ஆபரேட்டர் வேலைக்குச் செல்வதுதான் எனது லட்சியமாக இருந்தது.
நினைக்க நினைக்க… திரையரங்குகள் குறித்த நினைவுகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வாறு என்னைப் போல் எத்தனையோ பேர், எவ்வளவோ வருடங்கள் கும்பல் கும்பலாக வந்த தியேட்டர்களுக்கு ஏன் இப்போது மிகவும் குறைவான எண்ணிக்கையில் வருகிறார்கள்?
கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, கடந்த நவம்பர் 10 ஆம் தேதி தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. பொங்கல் சமயத்தில் வந்த விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துக்கு மட்டுமே கூட்டம் வந்தது. பிறகு செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்கு முதல் 3 நாட்கள் மட்டும் ஓரளவு கும்பல் வந்திருக்கிறது. அடுத்து கர்ணன் திரைப்படத்திற்கு கூட்டம் வந்தது. Aவேறு எந்த படத்திற்கும் ரசிகர்கள் வரவில்லை.
இதற்கு கொரோனா அச்சம்தான் காரணம் என்று கூறமுடியாது. ஏனெனில் கோயில் திருவிழாக்கள்… உறவினர் திருமணங்கள்… அரசியல் கட்சி கூட்டங்கள்… என்ற எல்லா இடங்களுக்கும் மக்கள் கொரோனா அச்சமின்றி, சர்வசாதாரணமாக சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையில் கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளின் நிலைமை மோசமாகத்தான் இருந்தது. கடந்த 2000-ஆம் ஆண்டு 2339 திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில், தற்போது 1100 ப்ளஸ் தியேட்டர்களே இருக்கிறது. அதிலும் 400 தியேட்டர்கள் மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்கள்தான் என்ற நிலையில், சிறு நகரங்களிலும், சிற்றூர்களிலும் ஏறத்தாழ 700 தியேட்டர்களே உள்ளன.
இந்த குறைந்தளவிலான தியேட்டர்களிலும், பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர, மற்ற படங்களுக்கு மக்கள் வருவது கொரோனாவுக்கு முன்பே குறைந்துவிட்டது. பெரிய நடிகர்களும் ஆண்டுக்கு ஒரு படம் என்ற ரேஞ்சுக்குதான் நடிக்கிறார்கள். 80களிலும், 90களிலும் 10 பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் வருடத்திற்கு சராசரியாக நான்கைந்து படங்களில் நடிப்பார்கள். கமல், ரஜினி, விஜயகாந்த் போன்றோர் வருடத்திற்கு ஏழெட்டு படங்களில் கூட நடித்திருக்கிறார்கள். இப்படி பெரிய நடிகர்கள் படங்களே அப்போது வருடத்திற்கு நாற்பது, ஐம்பதாவது வந்துவிடும். மேலும் பிராண்ட் வேல்யூ உள்ள இயக்குனர்களும் அதிக எண்ணிக்கையிலான படங்களை இயக்குவார்கள். ஆனால் இப்போது இவர்கள் சராசரியாக இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படம்தான் இயக்குகிறார்கள். இதைத் தவிர தியேட்டர்களின் டிக்கெட் கட்டணம், கதையம்சம் இல்லாத மட்டமான படங்கள், ஸ்நாக்ஸ், பார்க்கிங் சார்ஜ் பிரச்னைகள்… என்று பல்வேறு காரணங்களால் திரையரங்குகளுக்கு மக்கள் வருவது குறைந்துகொண்டுதான் இருந்தது.
ஏற்கனவே நொண்டியடித்துக்கொண்டிருந்த தியேட்டர் கலாச்சாரத்தை, கொரோனா காலத்தில் உருவான ஓடிடி கலாச்சாரம் ஓங்கியடித்து ஓரத்தில் உட்கார வைத்துவிட்டது. கடந்த டிசம்பர் 2020ல் மேற்கொண்ட ஒரு கணக்கீட்டின் படி, இந்தியாவில் டிஸ்னி-ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஜீ5 மற்றும் sonyLiv ஆகிய ஓடிடி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 14.42 மில்லியனிலிருந்து(2019) 32.11 மில்லியனாக(2020) அதிகரித்துள்ளது. இவையன்றி பல மாநில மொழி ஒடிடி தளங்களும் வந்துவிட்டன. இந்த ஓடிடி தளங்களின் சந்தாதாரர்கள், கடந்த ஒரு வருட காலத்தில் ஒடிடியில் படம் பார்த்து திருப்தியடைய பழகிவிட்டனர். ‘மாஸ்டர்’ போன்ற பெரிய படங்களே இரண்டு வாரத்தில் ஓடிடிக்கு வந்தபோது, ஓடிடி சந்தாதாரர்கள் ஓடிடியிலேயே படத்தை பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
ஆனால் முழுக்க முழுக்க ஓடிடி மீது மட்டும் பழியைப் போட முடியாது. இது போன்ற சூழ்நிலையில், பெரிய நடிகர்களுக்காக காத்துக்கொண்டிருக்காமல், தெலுங்கு, மலையாளப் படங்களின் புதிய தலைமுறை இயக்குனர்கள் போல் உருப்படியான கன்டென்ட்களை மட்டும் நம்பி வித்தியாசமான, பேசப்படும் படங்களை இயக்கவேண்டும்(தமிழ் உதாரணம்: அருவி, ஓ மை கடவுளே…). இப்படங்களை குறைந்தபட்சம் இரண்டு மாத காலத்திற்காவது ஓடிடி மற்றும் டிவியில் வெளியிடக்கூடாது. இவையெல்லாம் வெறும் ரசிகனாக எனக்குத் தோன்றுபவை. இது போல் பல விஷயங்கள் குறித்து திரைத்துறை சங்கத்தினர் கூடிப் பேசி, ஒரு பெரிய செயல்திட்டத்தை உருவாக்கி, அதைக் கண்டிப்புடன் அமுல்படுத்தினால் மட்டுமே தியேட்டர்கள் பிழைக்கும்.
இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கவிருந்த தருணத்தில், “என்ன எழுதுகிறீர்கள்?” என்று கேட்டான் எனது 21 வயது மகன். நான் இப்படி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதைச் சொல்லி, நானும், என் பாட்டியும் சேர்ந்து சினிமா பார்த்த விஷயங்களைச் சொன்னவுடன் எனது மகன் சொன்னான்:
“நீங்க உங்க பாட்டிய பத்தி சொன்னவுடனே எனக்கு தாத்தா ஞாபகம் வருது. நான் பிஃப்த் ஸ்டாண்டர்ட் படிச்சிட்டிருந்தப்ப, எனக்கு மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்ல படம் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. அப்ப கார்த்தி நடிச்ச ‘நான் மகான் அல்ல’ படம் ரிலீஸ் ஆச்சு. நான் ஐநாக்ஸ் மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் அழைச்சுட்டுப் போங்கன்னு உங்ககிட்ட பயங்கரமா அழுது அடம் பிடிச்சேன். ஆனா நீங்க அங்க காஸ்ட்லியா இருக்கும்ன்னு, ஆல்பட் தியேட்டருக்குதான் அழைச்சுட்டுப் போனீங்க. கொஞ்ச நாள் கழிச்சி தாத்தா சென்னை வந்தாரு. அப்ப நான் அவர்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். அதற்கு அவர், “ஐநாக்ஸ்தானடா… நான் அழைச்சுட்டுப் போறேன் வாடா…” என்று ஐநாக்ஸ்ல “பாஸ் என்கிற பாஸ்கரன்” அழைச்சுட்டுப் போனாரு. ஐநாக்ஸ்க்குள்ள நுழைஞ்சப்ப எனக்கு பயங்கர சந்தோஷம். படம் பாத்துட்டு வந்து ஃப்ரண்ட்ஸ்ங்களுக்கு எல்லாம் ஃபோன போட்டு ஐநாக்ஸ் போன விஷயத்தைச் சொல்லி அவ்வளவு சந்தோஷப்பட்டேன்” என்று என் மகன் சொன்னபோதே அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்று நான் யூகித்துவிட்டேன்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லபடியாக சென்னைக்கு வந்த எனது தந்தைக்கு, திடீரென்று மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, அவர் இன்னும் 3 மாதங்கள்தான் உயிரோடு இருப்பார் என்று கெடு விதித்து விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர் தனது நினைவுகளை இழக்க ஆரம்பித்தார். பேச்சும் குறைந்துவிட்டது. எனது தந்தை திரைப்படங்கள் ஆர்வமாக பார்ப்பவர் என்பதால், நாங்கள் அவரை ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் பார்க்க அழைத்துச் சென்றோம். திரையில் கார்த்தி தோன்றியவுடன், “இது யாருன்னு தெரியுதா?” என்று கேட்டதற்கு நெடுநேரம் யோசித்து, “சிவக்குமார் மகன்… பேரு ஞாபகத்துக்கு வரலடா…” என்று சொன்னார்.
இந்த விஷயத்தை ஞாபகப்படுத்திய என் மகன், “கடைக்குட்டிச் சிங்கம் படம் பார்க்க தாத்தாவ ஐநாக்ஸ்தான் அழைச்சுட்டுப் போனோம். என்னை தாத்தாதான் முதமுதலா ஐநாக்ஸ் அழைச்சுட்டுப் போனாரு…” என்ற எனது மகனின் தொண்டை அடைத்து, “கடைசியா நான் தாத்தாவோட படம் பாத்ததும் ஐநாக்ஸ்லதான். தாத்தா செத்த பிறகு நான் ஐநாக்ஸ் போனா தாத்தா ஞாபகமாவே இருக்கும். அதனால இப்பல்லாம் நான் ஐநாக்ஸ்ல படம் பாக்குறதே இல்ல…” என்று கூறி முடித்தபோது அவன் கண்கள் கலங்கியிருந்தன.
திரையரங்குகள் என்பவை வெறும் சினிமா பார்க்கும் இடம் மட்டுமா என்ன?