ஓர் ஆய்வுக்கூடத்தில் பெரும் கண்டுபிடிப்பிற்கான ஈடுபாட்டில் இருக்கும் விஞ்ஞானி, இந்த உலகத்தை புறம் சார்ந்த ஒன்றாகவும், பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதனூடே கண்டடையும் அறிவின் மூலம் தொடர்புரும் உண்மையே தனக்கும் இந்த உலகத்திற்குமான உறவு அல்லது தன் இருப்பு என புரிந்துகொள்வார். ஆனால், அவரது இருப்பானது ஆய்வுகூடத்தில் இருக்கும் சமயமே நிலை கொள்கிறது.

நான் அறிவோடு செயல்படுகிறேனா என்பதை காட்டிலும் ஹைடெக்கர் “நான் குறிப்பிட்ட சூழ்நிலையில் எவ்வாறாக என்னை கண்டுகொள்கிறேன்” என்பதையே முக்கியமாகக் கருதுகிறார். இதனை மனநிலை(mood) என்று சொல்கிறார். வெறுமென மனநிலை என்கிற பொருளில் புரிந்து கொண்டால் ஹைடெக்கர் சொல்லமுற்படுவதை உள்வாங்கத் தவறிவிடுவோம். ஜெர்மானிய மொழியில் மனநிலை(mood) என்பதற்கு (stimmung) என்றழைக்கப்படுகிறது. இதையே ஹைடெக்கர் பயன்படுத்துகிறார். ஆங்கிலத்தில் “மூட்” என்று சொன்னாலும் அதன் பொருள் நான் சோகமாக உள்ளேன், மகிழ்ச்சியாக உள்ளேன் என்பதை பேச்சின் மூலம் தெரியப்படுத்தும்  மனநிலையாக ஹைடெக்கர் சொல்லவில்லை.

உதாரணமாக, மேல் சொன்ன அதே விஞ்ஞானியிடம் சென்று ஹவ் ஆர் யூ சர்? என்று கேட்டால் அவர் என்ன பதிலை சொல்வார்? எப்படியிருக்கிறீர்கள்? என்றால் அவர் என்ன பதிலை சொல்வார்? இருத்தலியலில் மிக மிக முக்கியமான கேள்வி இதுவே. ஹவ் ஆர் யூ?. பதிலுக்கு அவர் நான் நலமாக இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு என்ன பொருள்? மனநிலையின்(stimmung)(mood) மூலமாகவே உலகம் நமக்கு முதலில் வெளிப்படுகிறது என்று ஹைடெக்கர் சொல்கிறார். “நான் குறிப்பிட்ட சூழ்நிலையில் எவ்வாறாக என்னை கண்டுகொள்கிறேன்” என்பதே அடிப்படையான “இருத்தல்”.

இந்த வகையில் தான் உலகம் நமக்கு திறந்துவிடுப்படுகிறது. மேலும் “அங்கே இருத்தலின்”(dasein) மனநிலையாக(mood) நமக்கு வெளிப்பாடு அடைகிறது. ஹைடெக்கரின் சிந்தனைப்படி மனநிலை(mood), உளவியல் சம்மந்தப்பட்டவையாக இருக்க முடியாது. மேலும், முகபாவனைகளின் மூலம் அறியப்படும் ஒன்றாகவோ கருதமுடியாது. ஹைடெக்கருக்கு மனநிலை(mood) என்பது அடிப்படை இருத்தலின் கட்டமைப்பும், என்னை நான் எவ்வாறாக இந்த உலகில் கண்டுகொள்கிறேன் என்பதின் வெளிப்படுதலுக்கான வழியாகும். இதனோடு மட்டும் தான் உலகோடு நான் ஒத்திசைகிறேன்(attuned). மற்றமைகளிடத்தும் இணைந்து கொள்கிறேன். இதனை ஹைடெக்கர் சொல்லும்போது மனநிலை என்பது நமது செயலினால், அறிதலினால் ஏற்படும் பின்விளைவுகள் அல்ல. மாறாக, புலனறிவுக்கு முன்னதாகவே உள்ளது. இருத்தலும் காலமும் நூலில் “மனநிலை என்பது மாற்றமுடியாத ஒரு பூதக்கண்ணாடி போல” என்று சொல்கிறார். அதன் மூலமாகவே உருப்பெருக்கி உலகை காண்கிறோம். இவ்வகையான மனநிலையை நாம் கவனிக்க முடிவதில்லை. இதனை நாம் உணரமுடியாமலே மனநிலைகளை கடக்கிறோம். இந்த உலகத்தில் இருப்பதன் ஒட்டுமொத்த வெளிப்பாடு “மனநிலை”. அது இந்த உலகத்தில் இருப்பதனாலேயே(being in the world) உள்ளதே தவிர தனியே எழுவது அல்ல. நாம் இருப்பது “டாசென்” என்னும் இருப்பான உலகத்தில்.

தமிழ் சூழலுக்கு ஹைடேக்கரின் “நான் குறிப்பிட்ட சூழ்நிலையில் எவ்வாறாக என்னை கண்டுகொள்கிறேன்” என்பதை ஒரே சொல்லில் விளக்க முயல்வது சிரமம் தான். இன்னும் அவதானிக்க, விளக்க முடியாததாக இருக்கும் ஹைடெக்கரின் மனநிலை(mood) எப்படி புரிந்துகொள்ளலாமென்றால், தமிழ் சூழலில் மனநிலை(mood) என்பதை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்தாலே இதன் வெளிபாடடென்பது நம் கட்டுக்குள் இல்லாதது அல்லது “மனநிலை” நம் அடிப்படையான இருப்பு என்பதை விளங்கிக் கொள்ள முடியும். மனநிலை(mood) என்ற சொல்லை முழுக்க பாலியல் சார்ந்த ஒரு சூழ்நிலையாக, கலவி சார்ந்த ஒரு நிலையாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. “மூட்” என்பதே பாலியல் தொடர்புடையதோ என்ற சந்தேகமும் நமக்கு எழும். ஆணுறைக்கு கூட “மூட்ஸ்” என்ற பெயர் உள்ளதை அறிவோம். ஹைடெக்கர் பார்வையின் படி பார்த்தால் நாம் “மூட்” என்பதை இந்த குறிப்பிட்ட சொற்ப்ரயோகத்தில் சரியானதாகவே புரிந்துகொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. உதாரணமாக, இளைஞர்கள் ஒன்று கூடி பேசும் போது “மச்சி! எனக்கு நேற்று செம மூடாகிருச்சு” என்று சொல்வதை கேட்டிருக்கலாம். அப்படி கேள்விப்படும் போது அது ஒரு மனநிலை என்று நமக்கு நிச்சயமாக புரியும். அந்த வேளையில் பாலியல் மனநிலையே என் ஒட்டுமொத்த உலகமாக திறந்துவிடப்பட்டிருக்கும் என்பதை அறிவோம். இந்த அடிப்படையில் ஹைடெக்கரின் மனநிலை(mood) சொல் பிரயோகத்தை இணைத்து புரிந்துகொள்ள முடியும் என்று எண்ணுகிறேன். பாலியல் எண்ணங்கள் கற்பனை செய்வதற்கு முன்பாகவே அவ்விதமான மன நிலை ஏற்கனவே உள்ளது. அப்படியான மனநிலை நம்மை ஆட்கொள்ளும் போது மொத்த உலகமும் பாலியலாகவே தோன்றும். தனந்தனியாக வசித்த அனுபவமுள்ளவர்களுக்கு இந்த மனநிலையானது(mood) எத்தனை விரிவானது, மனதின் இருளான மொத்த பக்கங்களும் திறந்துகாட்டபடும் வெளிப்பாடு கொண்டது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஹைடெக்கர் சொல்கிறார்: மனநிலை என்பது மாற்றமுடியாத பூதக்கண்ணாடி போன்றது என்று. ஹைடெக்கர், கருத்தளவில் இல்லாமல் சொல்லின் மூலப்பொருளைக் கொண்டே அவர் விளக்க முயற்சிப்பதால் இளைஞர்கள் பயன்படுத்தும் “மூட் ஆகிருச்சு” எனும் சொல்லை உதாரணமாக எடுத்துக்கொண்டேன். மனநிலை என்பது பாலியலோடு தொடர்புள்ள வெளிப்பாடு மட்டுமல்ல. இந்த உதாரணத்தைக் கொண்டு மற்ற மனநிலைகளையும் விளங்கிக்கொள்ளலாம். உதாரணமாக, காதலி புறக்கணித்துவிட்டால் காதலனுடைய உலகம் என்பது வெறுமையானதாக, மொத்த உலகமே அர்த்தமற்றதாக தோன்றுமல்லவா? அதேபோல, நெருங்கியவரின் இறப்பு இன்னும் பல.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி உலகம். அனைத்துமே ஹைடெக்கர் விளக்கும் உலகம். பொருட்களோடு தொடர்புரும் உபயோகம் சார்ந்த இருப்பு மட்டுமல்ல. அதனோடு சேர்ந்த மனநிலையும் முதன்மையான பங்கு கொள்கிறது. மேற்சொன்ன விளக்கத்தின் அடிப்படையில் அன்றாடத்தில் உள்ள இருத்தல் சார்ந்த சாத்தியத்தை அவதானிக்க முடியும்.

உதாரணமாக, வேலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்கிறேன். திடீரென பஞ்சர் ஆகிவிடுகிறது. இப்போது இருத்தலின் செயல் ரீதியான சாத்தியங்களைப் பாருங்கள். வேலைக்கு சென்றாக வேண்டும். பஞ்சர் ஒட்டுபவருக்கு போன் செய்யவேண்டும். கைபேசியில் அழைப்பு கொடுக்கும் அளவிற்கு காசு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்டோ அல்லது கார் பேச வேண்டும். முதலாளியிடம் அவகாசம் கேட்கவேண்டும். பஞ்சர் என்ற தடை ஏற்பட்ட பிறகும் இதெல்லாம் சீராக அடுத்தடுத்து நடந்தால் சிக்கலில்லை. மாறாக, பஞ்சர் ஒட்டுபவர் கைபேசி அழைப்பை எடுக்காமல் இருந்தால், கையில் ஆட்டோ, காரில் போகும் அளவிற்கு பணமில்லாமல் இருந்தால், முதலாளி சீக்கிரம் வரவேண்டும் என்று சொன்னால், வண்டியையும் தள்ளிக்கொண்டு தான் போக வேண்டும் என்ற நிலை வரும்போது ஏன் நமக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று கோபம் வரும், எரிச்சல் வரும். அவை கோபமா, சோர்வா, விரக்தியா என்று எளிதில் வகைபடுத்த முடியாது. இதற்கு இணையான சூழ்நிலையை எல்லோரும் அனுபவித்திருக்கலாம். இது போன்ற சமயத்தில் மொத்த உலகமும் நமக்கு எவ்வாறாக தோன்றும்? காரில் செல்பவர்களை பார்த்தால் எரிச்சல் வரும். யாரை பார்த்தாலும் கோபம் வரும். இவையெல்லாம் நமக்கு இரண்டாம் பட்சமாக வெளிப்படும் உணர்ச்சிகள்.

ஆனால் அடிப்படையில், சொல்லப்பட்ட உதாரணத்தில் நான் எவ்வாறாக என்னை இவ்வுலகத்தில் கண்டுகொண்டேன் என்று பார்த்தால், எதிலும் ஒரு தொடர்நிலை இல்லாமலும், செய்யக்கூடிய செயலில் எந்தவித இருத்தலுக்கான சாத்தியமும் இல்லாததாலும். அந்த சூழ்நிலையில் மிகவும் சலிப்படைந்தவர்களாக, ஏதோவொரு விதத்தில் இந்த உலகம் கைவிட்டதாக, கடமைகளை செய்யத்தவறியவறாக உணர்கிறோம். ஏனெனில், குறிப்பிட்ட வேலை, வண்டி, டயர், சாலை, வெயில், நேரம், எல்லாவற்றிலுமான இருப்பில் வீழ்ந்திருக்கிறோம். இந்த நிலையில் “ஹவ் ஆர் யூ” என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால் சொந்தமான இருத்தலுக்கான சாத்தியங்கள் வெளிப்படும் என்று எண்ணுகிறேன்.

இயல்பாக இருப்பவன் இந்த உதாரணத்தில் என்ன செய்வான் என்று யோசித்தால் வண்டி பஞ்சரான சமயமே வேலைக்கு செல்ல முடியாது என்ற முடிவை எடுப்பான். வண்டியை ஒரு மரத்தினருகே நிறுத்திவிட்டு தானும் சிறிதுநேரம் அமர்ந்துவிட்டு வந்த வேகத்தில் வீட்டிற்கு கிளம்பியிருப்பான். மீண்டும் மாலை நண்பர்களுடன் வந்து வண்டியை எடுத்து சென்றிருப்பான். ஒருநாள் சம்பளம் போனாலும் பரவாயில்லை. முதலாளி திட்டுவதால் என்னவாகிவிடப் போகிறது என்ற எண்ணமும் இருக்கும். இயல்பாக இருப்பவன் இப்படி செய்யலாமென்று கற்பனை தான் செய்கிறேன். எதற்கு இயல்பை கற்பனைக்கு உட்படுத்துகின்றோம் என்றால் ஹைடெக்கர் தன்னதிகாரமுள்ள இருப்பு(authentic being) என்ற நம் சொந்தமான இருப்பை தொலைத்து விட்டதாக சொல்கிறார். மேலும் மற்றமைகளோடு நம் இருப்பின் உறவானது மிக விசாலமாக விரிகிறது. அதாவது “அவர்களின்” உலகத்தை பூர்த்தி செய்வதாக உள்ளது. வண்டி பஞ்சராகி வழியில் நின்றவர் விடுப்பெடுக்காமல்  சென்று நற்பெயரை பெறுவதற்காக சீக்கிரம் செல்லவேண்டும்  என்று முனைப்பில் இருக்கவேண்டியுள்ளது. ஒரு நாள் சம்பளம் போனால் மாத பட்ஜெட் இடிக்கும். ஆனால், சூழ்நிலையின்போது  நம் மனநிலையின் வெளிபாடுகளை கொண்டே சொந்தமான இருப்பை அவதானிக்க முடியும் என்று எண்ணுகிறேன். ஹைடெக்கர் நம்மை அன்றாடத்திலிருந்து நம் சொந்தமான இயல்பை நோக்கி விடுவிக்க முயல்கிறார்.

ஆனால், அவர் சொல்லும் வீழ்தலிலிருந்து(falling) தப்பிக்க முடியாது. ஏதோவொரு ஒருவகையில் இங்கே இந்த உலகத்தில் இருந்து தான் ஆக வேண்டும். நிச்சயமாக அது “அவர்களின்” உலகமாக தான் இருக்கும். அதில் வீழ்வதும், ஒதுங்கிவிடுவதும் ஒரு தொடர் நிகழ்வு. சொல்லப்பட்ட பஞ்சர் உதாரணத்தில் கவனித்தால் இயல்பான இருத்தலுக்கான சாத்தியங்களை திறந்துவிடுவதற்காகவே மனநிலையின்(mood) மூலமாக வெளிப்படுகிறது என்று விளங்கிக்கொள்ளலாம். இதே நோக்கில் ஒவ்வொரு முறையும் நாம் எறியப்படுகிறோம்(thrown).

இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், “அவர்களின்”(they) உலகத்தில் நான் வாழுகிறேன். அதில் நான்  “அவர்களின் சுயமாக” இருக்கிறேன். மனநிலையின் மூலம் “அவர்களின் சுயமாக” நான் இருப்பதில் அதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைவதிலேயே இருத்தாலானது பயத்தின் மூலமாக தன்னதிகாரமற்ற இருப்பாக(inauthentic) ஒதுங்க முயல்கிறது. செயல்களின் மூலம் தொடர்கிறது. மேல் சொன்ன உதாரணத்தில்  சாத்தியங்கள் அனைத்தும் நம்மிடையே உள்ள அவர்களின் சுயத்திடமே திரும்புகிறது. இருக்கும் மனநிலையின் மூலம், வெளிப்பாடுகளின் மூலம் நான் என்னுடைய “அவர்களின் சுயத்திடமே திரும்புகிறேன். பயந்து ஒதுங்குவதை தப்பிப்பதாக எண்ணி அதேசுழியில் மீண்டும் வீழ்கிறேன். உண்மையில், அங்கே இருத்தலில்”(dasein)  மனநிலையானது   “இருத்தலின் பதற்றமாக”(anxiety) வெளிப்படுகிறது. ஹைடெக்கர் பார்வையில், அதை நம் இருப்பில் நிலைகொள்ளும் ஒட்டுமொத்தமான “தப்பித்தல்” உணர்வு என்று சொல்லலாம். அதாவது “அங்கே இருத்தலில்”(dasein) உதாரணமாக, ஒரு பெரிய கிணற்றில் விழுந்து தத்தளித்து மீண்டும் மேலே திரும்பிப்பார்த்து தப்பிக்க முயலும் மனநிலை போல நேரடியாக தன் இருப்பின் நிதர்சனத்தை ஒரு கண்ணாடி போல கண் முன் காட்டப்படுகிறது. “இருத்தல்” தன்னையே நேரடியாக திரும்பிப்பார்க்கிறது. “அங்கே இருத்தலில்” தன்னதிகாரமுள்ள சாத்தியமானது  வெளியில் எறியப்படும் முன்பாக என்னுடைய “அவர்களின் சுயத்தின்” மீது எறியப்படுகிறது. அவற்றிலிருந்து தப்பிப்பதற்கான சாத்தியத்தை  எறிகிறது.  அன்றாடத்தின்  மீதுள்ள பற்றும், அர்த்தமும், முற்றுமாக இழக்கும்போது தன்னதிகாரமுள்ள(authentic dasein) இருப்பிற்கான சாத்தியங்கள் வெளிப்படும்.  நிச்சயமாக, “இருத்தலின் பதற்றமான”(anxiety) மனநிலையே இந்த உலகத்தில் நான் யார் என்பதை தனித்துவமாக உணர்த்தக்கூடியதாகவுள்ளது