நாம் அனைவருக்கும் எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை குறித்து ஒரு கனவுப் பட்டியல் இருக்கும். அது குறித்து சிந்தித்துக் கொண்டும், திட்டமிட்டுக் கொண்டும் இருப்போம். அதை செயல்படுத்த எவ்வளவு முயற்சி எடுக்கிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதைப் பற்றிய சிந்தனையில் மிதப்பது வாழ்வின் பிற துன்பங்களில் இருந்து ஒரு சில நிமிடங்களுக்கேனும் விடுதலை அளிக்கிறது என்பது உணர்ந்த உண்மை. அதே போல உடனே செய்யத் திட்டமிட்ட செயல் நடக்காமல் இழுத்துக் கொண்டே இருப்பதும், மனதின் எங்கோ மூலையில் சுருண்டு கிடந்த பாம்பொன்று, பறவையென சிறகை விரித்து கொண்டு முன்னால் வந்து நம்மை சுமந்து செல்லத் தயாராகி நிற்பதும் காலத்தின் விளையாட்டன்றி வேறென்ன சொல்ல? பட்டியலில் எங்கோ மூலையில் கிடந்தக் கனவொன்று கடந்த வார இறுதியில் நிறைவேறியது. அது போன்று திடீரென்று வந்த வாய்ப்பால், நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலை ஏறிவிட்டு வந்தோம். கடுமையான உடல் உழைப்பைக் கோருகின்ற, நம் மனஉறுதியை இறுதி எல்லை வரை சோதித்துப் பார்க்கக்கூடிய மலையேற்றப் பாதையாக உள்ளது.

திருச்சியிலிருந்து சனிக்கிழமை மதியம் கிளம்பி, கோவை சென்று அங்கிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் பூண்டி என்ற இடத்தில் அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை இரவு ஏழு மணியளவில் அடைந்தோம். அப்போதே மழைத் தூறல் தொடங்கியிருந்தது. பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே மலையேற வனத்துறையால் அனுமதி வழங்கப்படுகிறது. அதிலும் வார இறுதி என்பதால் மலையேறும் மக்கள் திரள், அதிலும் ஆண்கள் கூட்டம் தான் மிக அதிகமாய் இருந்தது. நாங்கள் வந்து சேர்வதற்கு சற்று நேரம் முன்னர் யானை வந்ததாக, வெடி போட்டு விரட்டியதாக கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தனர்.

நாங்கள் அங்கே செல்லுமுன் சென்னையிலிருந்து வந்திருந்த நண்பர்கள் தயாராய் மூங்கில் கம்புகள் வாங்கி வைத்திருந்தனர். ஆளுக்கு இரண்டு தோசைகளை சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு உள்ளே சென்ற போது அங்கே தக்காளி சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டு கொண்டிருந்தது. மனம் அந்தப்பக்கம் அலைபாய வயிறு நிரம்பச் சாப்பிட்டால் மலையேற சிரமமாக இருக்கும் என்ற நண்பரின் கோரிக்கை ஏற்று, சூடாக வழங்கிய கேசரியை விட மனமில்லாமல் ஒரு காகிதக் கோப்பை நிறைய கேசரியை கைகளில் ஏந்திக் கொண்டேன். மறுகையில் மூங்கில் கம்பு. முதுகில் பயணப்பை.

வனத்துறை சோதனையில் நாம் கொண்டு போகும் அனைத்து வகை நெகிழிப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தின்பண்டங்களை காகிதத் தாளில் சுற்றித் தருகின்றனர். கடைகளில் விற்கும் ஒருமுறை மட்டுமே பயன்படும் தண்ணீர் பாட்டில்களில் இருபது ரூபாயைப் பெற்றுக் கொண்டு ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்படுகிறது. திரும்ப வரும்போது பாட்டிலை ஒப்படைத்து விட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

சோதனைகள் முடிந்து மலையேறத் தொடங்கிய போது எட்டரை மணி. முதல் படியில் காலை வைத்தபோது மழை வேகமாகத் தூரத் தொடங்கியது. மொத்தத் தூரமும் ஏழு மலைகளாக பிரித்து வைக்கப்பட்டு, ஆங்காங்கே அறிவிப்புகள் உள்ளன. நான் உணர்ந்த வரை நாம் ஏறுவது மூன்று என்று தான் தோன்றுகிறது. பெரிய பாறையை சிறு சிறு துண்டுகளாக உடைப்பது போல, பயண தூரம் இதோ முடியப் போகிறது, இன்னும் இரண்டு தான், ஒன்று தான் என்று மனதை சமாதானப் படுத்திக் கொள்ளதான் இப்படி பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. அதுவும் ஒரு வகையில் நல்லது தான்.

முதல் மலை முழுக்க பெரிய கற்களால் ஆன படிக்கட்டுகள் உள்ளன. அடுத்தப் படிக்கட்டு தெரியாத அளவிற்கு முழு இருட்டு. டார்ச் விளக்கு கண்டிப்பாகத் தேவை. இரண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்து இருப்பதை அலைபாயும் விளக்கொளியில் காணலாம். பகலில் இறங்கும்போது கண்டு ரசித்துக் கொள்ளலாம் என்று நடந்தேன்

முதல் மலையின் வனத்தில் பச்சைப் பாம்பு.

மழைத் துளிகள் பெரிதாகி அனைத்தையும் நனைக்க, அதை விட வியர்வை பெருகி ஊற்றியது. ஒரு கையில் கேசரி, மறுகையில் கம்பு. இவற்றை வைத்துக் கொண்டு ஏறுவது சிரமமாக இருக்க, கேசரி சூடு ஆறிவிட்டது. மற்றவர்கள் வேண்டாம் எனக் கூறவே, கேசரியை இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு மனமில்லாமல் வீசியெறிந்தேன். புதிதாக வருவதால் விவரமறியாமல் உடைகள் எடுத்து வந்திருந்ததால், மழையில் பயணப்பை உள்ளே எல்லாம் நனைந்து எடை அதிகமாகி பின்னால் இழுக்கத் தொடங்கியது. உடன் வந்தவர்கள் எவரும் பைகள் கொண்டு வரவில்லை

 தண்ணீர் பாட்டில் மட்டுமே. கூடிய வரை எவற்றையும் எடுக்காமல் செல்வது நல்லது. முதல் மலையில் பாதி தூரத்திலேயே டி ஷர்ட் களைந்து நனைந்தத் துண்டு மட்டும் மேலே போட்டுக் கொண்டேன். மழையிலும் அவ்வளவு வெப்பம் உடலில். குறிப்பிட்ட இடைவெளிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு ஏறி, முதல் மலையின் முடிவான வெள்ளை விநாயகர் கோவிலை அடைந்த போது பத்து மணி ஆகியிருந்தது. ஒரு மலையை அடைய ஒண்ணரை மணி நேரம். அதற்குள்ளாகவே உடலில் பாதி ஆற்றல் காலியாகி இருக்க, மீதி மலைகளை எப்படி ஏறப் போகிறேன் என்று நினைக்கையில் சோர்வு மின்னலாய் இறங்கியது. அருகில் அமர்ந்திருந்தவர்கள் இதற்கு மேல் வரும் மலைகள் நடக்க சுலபம் தான் என்று வாடிய செடியின் மீது கொஞ்சம் நீருற்றினார்கள். சில கடைகள் அங்கே உண்டு. லெமன் சோடா, சில்லென்று மோர், லெமன் ஜூஸ் இன்னும் சில குளிர்பானங்கள், நெல்லிக்காய், மாங்காய் என சோர்வு நீக்கும் பண்டங்கள் கிடைக்கின்றன. முதலில் விலை இவ்வளவா என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாலும், மலை மீது சுமந்து வந்து சேர்ப்பதற்கு விலை அதிகம் வைப்பதில் சிறிது தவறில்லை என்றும் தோன்றுகிறது. (பத்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் முப்பது ரூபாய். மோர் ஒரு கிளாஸ் முப்பது ரூபாய். ஒரு பெரு நெல்லிக்காய் பத்து ரூபாய்.)

இரண்டாவது மலையில் படிக்கட்டுகள் மிகக் குறைவு. பாறைகள் நிறைந்த சரிவுப்பாதை. மூங்கில் கம்பின் உதவியால் படிகளை விட இங்கே கொஞ்சம் வேகமாய் ஏற முடிந்தது. வழுக்குப் பாறை என்ற இடத்தில் சிறிது தூரத்திற்குப் பாறையில் படிகள் செதுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் கவனமாக இப்பாறையை கடந்தோம். சட்டென ஒரு இடத்தில் கூட்டம் தேங்கி நின்றது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம், குறுகலான பாறைக்கிடையே இறங்குபவர் ஏறுபவர்கள் இடையே புரிதலின்றி, மனித டிராபிக் ஜாம் ஆனது. இருட்டில், மழையில் தேங்கி தேங்கி கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் மேலே நகர்ந்தது. இரண்டாம் மலையில் சுனை ஒன்று உண்டு. மலையில் ஊறி வரும் நீரை பிடித்துக் கொள்ளலாம். இதை விட்டால் கடைகளில் ஒரு லிட்டர் நீர் முப்பது ரூபாய்க்கு விற்கிறார்கள். அதை நீங்கள் கொண்டு செல்லும் புட்டியில் வாங்கிக் கொள்ளலாம்

மூன்றாவது மலைச் செல்லும் பாதையும் சரிவுப் பாறைகள் நிறைந்த மண் பாதை தான். இம்மலையை ஏறத் தொடங்கிய போதெல்லாம் உடலில் சுத்தமாக சக்தி இல்லை. ஓய்வு நேரம் அதிகமாகவும் ஏறும் நேரம் குறைவாகவும் இருந்தது. தொடங்கும்போது மணி பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. மழையும் விட்டிருந்தது. கால்கள் கெஞ்ச, உடல் தடுமாற மெல்ல மெல்ல மேலே நகர்ந்தேன். உடன் வந்த நண்பரில் ஒருவர் நாலாவது மலை முழுக்க சமவெளி தான் என்று கூறி உற்சாகப்படுத்தினார். ‘அதுவரைக்கும் முதலில் போக வேண்டுமே.’ உடலில் இருந்து வெளியேறும் வெப்பத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கலாம் போல இருந்தது. தொடைகள், கால்களின் ஆடு சதைகள் எல்லாம் இறுகி விறைப்பாய் ஆனது. கால்களை எடுத்து வைப்பது மிகச் சிரமமான காரியமாக ஆனது. கம்புகளை ஊன்றி, ஊன்றி உடலை நகர்த்துவதால் வலது கை வலிக்கத் தொடங்கியதுஇடது கைக்கு மாற்றினால் போதிய வலு கிடைக்காமல் கம்பு தள்ளாட உடல் சமநிலை தவறுகிறது. கைகள் வழுக்குகின்றன. இன்னும் நான்கு மலைகள் இருக்கின்றன என்று நினைத்த போது அடுத்து வரும் சமவெளி எண்ணி மனதைச் சரிசெய்து கொண்டேன். சமவெளியில் வெயிலில் வதங்கிக் கிடக்கும் போது மலையுச்சியை கனவு கண்ட மனது இது.

நாலாவது மலையை ஒரு வழியாய் வந்து சேர்ந்தேன். அங்கே அனைவரும் பாறையில் சாய்ந்து கொண்டோம். கடையில் பெரு நெல்லிக்காய் ஒன்று வாங்கிக் கடித்த போது, இதுவரை இப்படி ஒரு சுவையை அனுபவித்ததில்லை என்று இருந்தது. அந்த துவர்ப்பும் இனிப்பும் அத்தனை சுவையாக, உடல் முழுவதும் பாய்ந்த புத்துணர்ச்சியை கூற வார்த்தைகளை அதியமானிடம் நெல்லிக்கனியைப் பெற்ற அவ்வைதான் உரைக்க வேண்டும். என்ன சுவை…! நைந்து கிழிந்தது போல இருந்த உடல் நெல்லிக்கு சுவையைக் கூட்டியதா? நேரம் இரண்டு மணியை நெருங்கிக் கொண்டிருக்க நடக்கத் தொடங்கினோம். அரை மணி நேரத்தில் கண் முன்னே சமவெளி முடிந்து போய் ஏற்றம் ஒன்று தென்பட்டது. ‘அய்யய்யோஎன்று பதற, அந்த ஏற்றத்தில் புற்கள், சிறிய செடிகள் அளவில் ஈச்சம் மரங்கள் நிறைந்து இருந்தது. திரும்பிப் பார்க்கும் போது முதன் முறையாக கீழே இருளில் வெளிச்சப் புள்ளிகள் மினுங்கச் சமவெளி மிக அழகாய் விழிகளுக்கு தென்பட்டது. சில்லென்று குளிர் காற்று வீச மனதில் நிம்மதி ஒன்று இதமாக இறங்கியது. இப்பகுதியில் நிறைய பேர் பாறைகளில் அமர்ந்தவாறு, சாய்ந்தவாறு என்று போர்த்திக் கொண்டு உறங்கினார்கள். இருளில் பாறையைப் போலவே தெரிந்தார்கள். பார்த்ததும் உறக்கம் கண்ணைச் சுழற்ற, “ஒரு அரை மணி நேரம் தூங்கிட்டு போலாமே,” என்றேன். தூங்கினால் திரும்ப ஏறுவது கடினம் என்று இழுத்துக் கொண்டுச் சென்றார்கள் கொடுமைக்காரர்கள். அந்த ஏற்றத்தை அடைந்த போது சம்வெளியில் மிகப்பெரிய கூட்டமே உறங்கிக் கொண்டிருந்த காட்சி தெரிந்து. கடைகளில் முன்னால் எல்லாம் போர்வை உருண்டைகள்.

கண் முன்னே தெரிந்த அந்த கடைகள் நிறைந்த அந்தப் பகுதி தான் ஐந்தாவது மலை என்றார்கள். பசி பயங்கரமாக இருக்க ஒரு கடையில் தின்பதற்கு விசாரித்த போது பரோட்டா, சப்பாத்தி, மேகி நூடுல்ஸ் இருப்பதாகக் கூற அனைவரும் மேகியை தேர்வு செய்து கடை வாசலில் கூட்டத்தில் கலந்தோம். ஊசிப் பனிக்காற்று உள்ளே வரை பாய மேலுடையை அணிந்து கொண்டு, நடுக்கத்தோடு அமர்ந்திருந்தேன். உறக்கம் கண்களைச் சுழற்றி அடிக்க அப்படியே தூங்கி விடலாம் அவர்கள் சென்று வரட்டும் என்ற சொற்களை வெளியில் விடவில்லையே.

இரண்டு முறை ரெடியா? ரெடியா? என்று கேட்ட போதும் உள்ளுக்குள் இன்னும் கொஞ்சம் தாமதமாகவே வரட்டும் என்று மனம் வேண்டியது. இருபது நிமிடங்களுக்குப் பிறகு சுடச்சுட மேகி. கடுங்குளிரில் முதல் வாய் சூடாக உள்ளே இறங்கும் போது கிட்டிய அந்தச் சுவை, ஐந்தாவது மலை வரை ஏறிச் சென்று சாப்பிட்டால் தான் கிடைக்கும். பகலில் வரும்போது தெரியும் ஐந்தாவது மலைச் சரிவு, கண்ணுக்கெட்டிய வரை பசுமையான புல்வெளி, புகை போல வெண்மேகம் அணைத்துக் கொண்டு, எதிரே தெரிந்த மலையும் அதன் கீழே தரையில் வனமும் அதை பிளந்து ஒடும் சிறுவாணி ஆறும் அத்தனை அழகாக இருந்தன. நம் காலுக்கு கீழே மேகம் தவழ்கிறது. மேகத்தைத் துரத்தலாம் இங்கே. பகலில் இங்கிருந்து முக்கோணம் ஒன்றை கவிழ்த்து வைத்தது போலத் தெரியும் கடைசி மலை மேகங்கள் சூழ காணலாம். இனிமையான காட்சி.

விடிகாலை மூன்றரை மணிக்கு ஆறாவது மலையைத் தொட்டோம். தொடக்கமே பயங்கரமாகக் கீழே இறங்கும் பெரும்பள்ளம். அடர்ந்து வளர்ந்து கிடக்கும் பெரிய மரங்கள் உள்ள வனத்தின் இடையே பாதை இறங்குகிறது. பாதை ஈரத்தில் நச நசத்துக் கிடக்க, மரங்களின் வேர்கள் மேலே புடைத்துக் கொண்டு நம்மை இடறி விடத் தயாராய் உள. அதோடு கூடவே இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் கால்களை கவ்விக் கொள்ளத் தேடித் தேடி ஓடி வருகின்றன. இயற்கை உபாதையை கழிக்கக்கூட ஒதுங்க முடியாது அட்டைகள் பாய்ந்து வருகின்றன. அவைகளிடமிருந்து தப்பிக்க நிற்காமல் நடந்து கொண்டே இருக்க வேண்டும். நிதானமாக சரிவில் மரங்களை, வேர்களை, பாறைகளைப் பிடித்துக் கொண்டு இறங்கினோம்

உண்மையிலேயே பல விதங்களில் சவாலை அளிக்கக்கூடிய மலை இந்த ஆறாவது மலை. ஒரு சிறிய நீரோடையில் முடிகிறது இந்தப் பள்ளம். அங்கே குளிக்க முயற்சி செய்யவில்லை. தண்ணீர் அத்தனை சில்லென்று காலைத் தீண்டுகிறது. இங்கே குளிக்கத் தேங்கும் கூட்டத்தால் மீண்டும் ஒரு டிராஃபிக் ஏற்பட்டது. பகலில் திரும்ப இறங்கும் போதும் இங்கே அரை மணி நேரத்திற்கு மேல் நிற்கும்படி ஆனது. ஆறாவது மலை முடிவில் சூடான சுக்குமல்லி காபியுடன் ஓய்வு தொடங்கியது.


கண்ணுக்கெதிரே இறுதி சவால் மிக உயரமாய் நிற்கிறது. உடல் முழுக்க ஒவ்வொரு பாகமும் ஓய்வு வேண்டும் என்று கதறிக் கொண்டிருக்க, மனது சோர்வின் உச்சியில் நின்று குத்தி விடுவேன் எனக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது. இருள் இன்னும் விலகவில்லை. ஏறுவதை கை விடும் முனைப்பில் மனது தவித்துக் கொண்டிருக்க, எங்கிருந்தோ மின்மினி ஒன்று சிறகடித்து கொண்டு என் முன்னே பசும்புல்லின் நுனியில் அமர்கிறது. சில நொடிகள் எதையோ யோசிக்கிறது, பின் திரும்பி அந்த உச்சி மலையை நோக்கி பறக்கத் தொடங்கியது. மணி ஐந்தைத் தாண்டியிருக்க, கம்பை உயர்த்திப் பிடித்தேன்.

ஆங்காங்கே மழைச் சேறும் சகதியும் கிடக்க, உடல் மனம் இரண்டிலுமிருந்தும் தனியே வெளியேறிய ஏதோ ஒன்று என்னை மேலே செலுத்திக் கொண்டிருந்தது. மற்ற மலைகளைக் காட்டிலும் மிக மெதுவாக ஊர்ந்தபடி என்று சொல்லுமளவுக்கு நகர்ந்தேன். பாதி மலை ஏறியபோது வானம் வெளிச்சத்தை ஏந்தத் தொடங்கியது. மேகங்கள் கடல் அலைகள் போல வந்து மலையை மோதத் தொடங்கின. எதிரே பத்தடி தொலைவில் உள்ளவர் முகம் தெரியாத அளவிற்கு மேகமூட்டம் மூடிக் கொண்டது

இம்மலையில் உடன் வந்த நண்பர்கள் கூட்டத்தில் கலந்து முன்னே சென்றுவிட கடைசி வரை அவர்களை பிடிக்க முடியவில்லை. செல்போன் சிக்னல் மிகக் குறைவாக அல்லது பெரும்பாலான இடங்களில் கிடைக்காது. அடிவாரத்தில் இரவு எட்டு மணிக்கு தான் அவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நாங்கள் இருவரும் உச்சியை அடைந்த போது ஏழு மணி. இரண்டு, மூன்று யானைகளுக்கு சமமான பெரிய பாறைகள் கூடாரம் போல நிற்கும் பகுதியில் சிறிய கோவில், அதனுள் வெள்ளியங்கிரி சிவன் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

ஏறிய போதே எல்லா ஆற்றலும் காலியாகி, ஏறுவதற்கு நிகராக இறங்குவதும் மிகக் கடினமாகவே இருக்க, கால்களில் நடுக்கம், சமநிலை தவறுதல் ஏற்படுகிறது. இறங்கி வரும்போது இந்த மலையில் வழுக்கி நான்கு பேர் உருண்டு சேதாரம் எதுவுமின்றி தப்பித்துக் கொண்டார்கள். காலை எட்டு மணியளவில் தொடங்கி அடிவாரத்தை அடைய ஐந்து மணி ஆனது எனக்கு. பெரும் பசி. கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. சாதம், சுவையான சாம்பார், பொரியல், போண்டா, ஜாங்கிரி என்று திருப்தியாக உணவு உண்டோம். அப்பளம் கிடைக்கவில்லை. இரண்டு முறை சாம்பாருக்குப் பிறகு ரசத்தில் இறங்கிக் கொண்டிருக்கும்போது பெருமழை ஒன்று சாப்பிட விடாமல் துரத்த அவசரமாக சாப்பிட்டு முடித்தோம். மழையை சபித்துக் கொண்டே மனிதப் பிறப்பே சோதனை நிறைந்தது தான் என்று, அடுத்தது சதுரகிரியா இல்லை பர்வத மலையா எதுவென பேசிக்கொண்டே திருச்சிக்கு பேருந்து ஏறினோம்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் இன்று, இரண்டு நாட்கள் ஆன போதும் உடல் மற்றும் கால்களில் வலி குறையவில்லை. கர்ணனின் தொடையில் நுழைந்து கொண்ட வண்டைப் போல வலி குடைந்து கொண்டு நகர்கிறது. படிகளில் இறங்க முடியவில்லை. இரு சக்கர வாகனம் செலுத்தும்போது கியர் மாற்றச் சிரமம். ஆனால் மனது காற்றில் அலையும் பட்டாம்பூச்சி போல அத்தனை இதமாய் உள்ளதுகாதுகளில் மூங்கில் கம்புகள் பாறைகளில் பதியும் டக், டக், டக் சத்தம் உறங்கும்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.

goldeneyesankar@gmail.com