பாகம்-2
18ஆம் நூற்றாண்டில் தொடங்கிய இயந்திரப் புரட்சி உலகையே புரட்டிப்போட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகப் பொருட்களை உற்பத்தி செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கியதால் மக்களின் அன்றாட வாழ்க்கை மொத்தமாக மாறிப்போனது. கச்சாப் பொருட்களின் பயன்பாடு, உற்பத்தித் திறன், தொழிலாளர்களின் வாழ்க்கை என எல்லா விதத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டது. விவசாயம், எரிபொருள், உலோகப் பயன்பாட்டியல், நெசவு, போக்குவரத்து, வேதிப்பொருள்கள் என இயந்திரப் புரட்சி தொடாத துறையே இல்லை.
இதில் நெசவு, ஆடை உற்பத்தித் துறைகளில் இயந்திரங்கள் நுழைந்ததில் மனித உழைப்பின் தேவை குறைந்தது. அந்த ஆற்றலை வேறு விதங்களில் பயன்படுத்த முடிந்தது. பருத்தியில் இருந்து நூல் நூற்கவும் துணி நெய்யவும் ஆடைகள் தைக்கவும் என ஒவ்வொரு கட்டத்திலும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் தையல் இயந்திரம் எப்போது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது என்பது சுவாரசியமான கதை.
எல்லோராலும் எளிதில் பயன்படுத்தும் வடிவில் இருக்கும் இன்றைய தையல் இயந்திரம் வெவ்வேறு காலத்திலும் இடத்திலும் வாழ்ந்த ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத அல்லது தொடர்பிருந்த பல மனிதர்களின் கூட்டுமுயற்சியில் உருவானது. அவர்கள் ஒவ்வொருவரின் சிந்தனை, உழைப்பு, விடாமுயற்சி, ஆய்வு, தோல்வி, வெற்றி எல்லாம் இன்றைக்கு நாம் பார்க்கும் வடிவில் அடங்கியுள்ளது. ஆனால் வரலாறு ஒரு பொருளின் கண்டுபிடிப்புக்கான முயற்சியையும் பாராட்டையும் ஒருவர் அல்லது இரண்டு பேரின் பெயரில் எழுதிவிடுகிறது.
எந்தக் கண்டுபிடிப்பையும்போலவே இதிலும் ஒருவரின் சிந்தனையில் உருவானதை மற்றவர் தனதாக்கிக்கொள்வது, வியாபாரத்துக்காக குறைந்த அளவில் விலைகொடுத்து வாங்கி கொள்ளை லாபம் அடிப்பது போன்ற விஷயங்கள் நடந்தேறின. இன்றைக்குக் கணினிமயமாக்கலையும் செயற்கை நுண்ணறிவையும் பார்த்து மனிதர்களின் தேவை குறைந்துபோய் வேலைநீக்கம் செய்யப்படுவோமோ என்று கவலைகொள்கிறோம். 19ஆம் நூற்றாண்டில் தையல் இயந்திரத்தால் அதேபோன்றதொரு அச்சம் மக்களிடையே பரவியதால் அதை எதிர்த்தனர் என்ற செய்தி வியப்பூட்டுகிறது.
முதன்முதலில் அதிக விளம்பரங்களின் மூலம் சந்தைப்படுத்தப்பட்ட பொருளும் இதுதான். விலை அதிகம் என்றாலும் நிறைய நேரத்தை மிச்சப்படுத்த உதவியதால் பரவலாக வாங்கவும் பயன்படுத்தவும் செய்தார்கள். அதனால் தவணைமுறையில் வாங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவைப் போன்ற வெப்பமண்டல நாடுகளில் வேட்டி, சேலை போன்ற உடைகளை அணிவதால் ஆளுக்கு ஏற்றாற்போலத் தைக்கும் தேவை அதிகமில்லை. ஆனால் குளிர் பிரதேசங்களில் சரியான அளவில் உடலைவிட்டு விலகாத ஆடைகளை அணிவது குளிரில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அவசியம். அன்றாட வாழ்வில் பயன்படும் இயந்திரம் என்பதால் 19ஆம் நூற்றாண்டில் இதை உற்பத்திசெய்யப் பல நிறுவனங்கள் முளைத்தன. ஆனால் இவற்றில் பல நிறுவனங்கள் நீடித்து நிலைக்கவில்லை. அல்லது இயந்திரத்தின் காப்புரிமை பெற்றவர்களுக்கு உரிமைத் தொகை வழங்காமல் இருப்பதற்காக ரகசியமாக இயங்கின.
18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சார்லஸ் வெய்ஸந்தல் என்ற ஜெர்மானியர் தையல் இயந்திரங்களில் பயன்படுத்தும் ஊசியை உருவாக்கி அதற்கான காப்புரிமையைப் பெற்றார். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தாமஸ் செயிண்ட் என்ற ஆங்கிலேயர் தோலைத் தைக்கும் இயந்திரத்தை உருவாக்குவதற்கான வரைபடம் ஒன்றை வரைந்து அதற்கான காப்புரிமையையும் பெற்றார். 1874ஆம் ஆண்டு வில்லியம் நியூட்டன் வில்சன் என்பவர் இந்த வரைபடத்தை அடிப்படையாகக்கொண்டு அதில் சிற்சில மாற்றத்தைச் செய்து தையல் இயந்திரத்தை உருவாக்கினார். ஒருவேளை தாமஸ் செயிண்ட் தானே அந்த இயந்திரத்தை உருவாக்கி இருந்தால் தையல் இயந்திரம் உருவான ஆண்டு 18ஆம் நூற்றாண்டு என்று பாடம் படித்திருப்போமோ என்னவோ.
19ஆம் நூற்றாண்டு தொடங்கி தையல் இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டது. இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, அமெரிக்கா எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான தையல் இயந்திரத்தை வடிவமைத்தனர். வணிகரீதியான முதல் தையல் இயந்திரத்தை வடிவமைத்த பெருமையைத் தட்டிகொண்டு போனவர் பார்தலெமி திம்மோனியர் என்ற பிரெஞ்சு தையல்காரர். பற்பல ஆய்வுகளுக்குப் பிறகு அவர் இறுதியாக வடிவமைத்த கருவிக்கான காப்புரிமையை 1830இல் பிரான்ஸ் நாட்டில் பெற்றார்.
தொடக்கத்தில் இந்தக் கருவி பூப்பின்னல் வேலைப்பாட்டை மட்டுமே செய்ய உதவியது. திம்மோனியர் சளைக்காமல் செய்த ஆய்வுகளின் விளைவாக நாளடைவில் மற்ற பொதுவான தையல் பணிகளுக்கும் பயன்படுத்த முடிந்தது. 1840களில் சுமார் 80 தையல் இயந்திரங்களை உருவாக்கி இராணுவச் சீருடைகளைத் தைக்கும் நிறுவனத்தை அமைத்தார். இதைப் பார்த்த மற்ற தையல்காரர்கள் தங்களின் வாழ்வாதாரம் மொத்தமாகப் பறிபோய்விடும் என்று அச்சம்கொண்டனர். திம்மோனியரின் கடைக்குள் நுழைந்து தையல் இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். கையில் ஒற்றைக்காசு இல்லாமல் பாரிஸைவிட்டு ஓடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார் திம்மோனியர். ஆனாலும் சளைக்காமல் தெரிந்தவர்களின் மூலமாக நிதி உதவிபெற்று ஆய்வினைத் தொடர்ந்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் இன்னும் வேகமாகத் தைக்கும் இயந்திரத்தை வடிவமைத்தார். பிரான்ஸ் நாட்டின் முதல் தையல் இயந்திர நிறுவனத்தை அமைந்தார்.
1848ஆம் ஆண்டில் முடியாட்சிக்கு எதிராக ஐரோப்பா முழுவதும் நடந்த புரட்சியால் நிறுவனத்தை இழுத்துமூட வேண்டியிருந்தது. மீண்டும் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு சிறிது காலமானது. அதற்குள்ளாக மற்ற கண்டுபிடிப்பாளர்கள் அவரை முந்திக்கொண்டனர். பிரான்ஸில் பெற்ற காப்புரிமையோடு இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் காப்புரிமையைப் பெற்றிருந்தார் திம்மோனியர். ஆனாலும் இதனால் எல்லாம் பொருள் சேர்க்கமுடியவில்லை, இறுதிக்காலத்தை வறுமையில் கழிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.
(தொடரும்)