கொரோனா. கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் அஞ்சி நடுங்ககக்கூடிய இந்த வைரஸ் தாக்குதலால் உலகில் சுமார் 90 நாடுகளில் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இதன் தாக்கம் வெகுவாக பரவி வருவதன் காரணமாக இத்தாலி, சவுதி அரேபியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கான வரவுகளைத் தடைசெய்துள்ளன.

உலகெங்கும் மிகவும் பிரசித்திபெற்ற வாடிகன் நகரம் மற்றும் புனித மெக்கா போன்ற இடங்கள் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த 1400 ஆண்டுகளில் ஒரு நாள்கூட மக்கள் கூட்டம் இன்றி புனித மெக்கா நகரம் இருந்ததில்லை என்று ஆச்சரியத்தில் மூழ்கிப் போயுள்ளனர் அரபு நாட்டினர்.

இவ்வளவு பெரிய வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதால் உலக சுற்றுலாத்துறை முழுவதும் முடக்கியுள்ளது. உலகம் முழுவதும் இது வரையிலும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்து உள்ளதாகவும் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தினம் தினம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இது ஒருபுறமிருக்க, இந்த வைரஸ் தாக்குதலால் உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் தலைகீழ் மாற்றத்திற்குப் போயுள்ளன. உற்பத்தி துறை, சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, இறக்குமதி என எல்லாத்துறைகளும் பெருமளவில் பாதித்துள்ளது. இதனால் உலகளாவிய வர்த்தகம் கடும் வீழ்ச்சியால் பாதிப்படைந்து வருகிறது. இதன்காரணமாக சுற்றுலாத்துறையை நம்பியிருந்த அரசுகள் போதுமான வருவாய் இன்றி திண்டாடி வருகிறது.

இந்த உறுதியற்ற பொருளாதார சூழ்நிலையில் சீனாவைத் தவிர்த்து உலக நாடுகள் மொத்தமும் சுமார் 148 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக இழப்புகளை சந்திக்க உள்ளதாக எச்சரித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சுமார் 2500 கோடி அளவிற்கு வருமான இழப்பு ஏற்படும் என்று கணித்துள்ளது ஐநா சபை.

மேலும் சீனாவின் உள்நாட்டு பொருளாதாரம் சுமார் ரூ.7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிட்டுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வறிக்கை.

இதன்மூலம் மிக மோசமான சூழலை எதிர்கொள்ள போகின்றன எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள். ஏற்கனவே அமெரிக்கா சவுதி எண்ணெய் வர்த்தக போர் நடைபெற்று வரும் இந்த வேளையில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பீப்பாய் விலை 30 ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளது. இதனால் உலக நாடுகளில் எண்ணெய் வியாபாரம் கடுமையான வீழ்ச்சி அடைந்து வரும் இந்த வேளையில். இந்த வைரஸ் தாக்குதலும் இணைந்து கொண்டுள்ளதால் அரபு நாடுகள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

மேலும் சில நாடுகளில் இதன் தாக்கம் பொருளாதார தேக்க நிலையை உருவாக்கும் என்றும், சர்வதேச அளவில் பொருளாதார நிலை சரியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கை.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தையில் வெகுவாக எதிரொலித்துள்ளது. கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் கடந்த வியாழக்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் மட்டும் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளனர் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள். மேலும் வியாழக்கிழமை வர்த்தக இறுதியில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2919 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. 2018ஆம் ஆண்டு சந்தித்த கடுமையான பொருளாதார வீழ்ச்சியை இந்தியா எதிர்நோக்கியுள்ளதாக அச்சம் கொள்கின்றனர் பங்குச்சந்தை நிபுணர்கள்.

இந்த வைரஸ் தாக்குதலால் இந்திய பங்குச்சந்தைகளில் ஜாம்பவானாக உருவெடுத்து வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பில். சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடந்த அறுபது நாட்களில் இழப்பைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இன்னும் சிறிது காலங்களில் இதே நிலை தொடரும் பட்சத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து முதலீட்டாளர்களும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு உட்கார வேண்டிய நிலை வந்துவிடும் என்று புலம்புகின்றனர் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள்.