எது நடக்ககூடாது என்று போராடினோமோ அது இப்போது நடந்து விட்டது.

ஊபா, NIA போன்ற சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் சனநாயகம் அழிந்து விடும் என்று அஞ்சியபடியே இப்போது சனநாயகத்தை சிறைப்படுத்தியுள்ளது இந்துத்துவ பாஜக அரசு. ஆம் அறிஞர் ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லாகா ஆகியோரின் கைது தான் அது.

என்ன நடக்கிறது?

‘ஊபா’என்னும் கொடுஞ்சட்டம் திருத்தப்பட்டு கடந்த 24.7.2019 அன்று நாடாளுமன்றத்திற்கு அறிமுகப்படுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்சா.

அப்போதே, “இந்த சட்டம்  ஒரு அரசு பயங்கரவாதச்சட்டம்.

இச்சட்டம்  ஊடகவியலாளர்களை சனநாயகவாதிகளை,

எழுத்தாளர்களை  பழி வாங்குகிறது. இது ஒரு சனாதனச்சட்டம். கவுரி லங்கேஷ், தபோல்கரர் போன்றோரை படுகொலை செய்தவர்களை பாதுகாக்கிறது. இந்த சட்டத்தை நான்  கடுமையாக எதிர்க்கிறேன் நடைமுறை படுத்தக்கூடாது. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும்”என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து உரையாற்றினார்.

ஆனாலும் சனாதனிகளின் பெரும்பான்மை ஆதரவால் ‘ஊபா’ சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. சனநாயக சாதிகள் அஞ்சியவாறே அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவும் கொரானா கொடுங்காலத்தில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டு

இருக்கும் அசாதரணச்சூழலில் அவசர அவசரமாக  உச்சநீதிமன்றம் ஆனந்த் டெல்டும்டே வழக்கை முடித்தது.

இதன் பின்னனி என்ன? 

வழக்கை விசாரித்து உடனடியாக அந்த அறிஞர் கைது செய்யப்பட்டு சிறைக்கு  அனுப்பப்பட்டதற்கு காரணம் என்ன?

அதுவும் புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்தநாள் ஏப்ரல் 14 அன்று அவரது உறவினரான அறிஞர் ஆனந்த டெல்டும்டே கைது செய்யப்பட்டிருக்கிறார்.

‘நகர்ப்புற நக்சல்’என்னும் முத்திரையோடு இந்த ‘ஊபா’ சட்டத்தை அறிஞர்கள்,எழுத்தாளர்கள், மனித உரிமை போராளிகள்  மீது  பாய்ச்சி இருக்கிறது இந்துத்துவ பாஜக அரசு.

ஆனந்த் டெல்டும்டே மீதான குற்றச்சாட்டு தான் என்ன?

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள பீமா கோரேகான் என்னுமிடத்தில் 2018 சனவரி 1ம் தேதி  பெரும்  வன்முறை நடைப்பெற்றது.  இந்த வன்முறையை திட்டமிட்டு  இந்துத்துவ- பா.ஜ.க. கும்பல்  நடத்தியது.  அதற்கு காரணம் பீமாகோரேகானில் பேஷ்வா  என்னும்  உயர் சாதி இந்துக்களோடு மகர்கள் என்னும்  தலித்துகள் யுத்தம் செய்து வெற்றி கொண்ட நாள்.  அந்த நாளான சனவரி 1 அன்று ஒவ்வொரு ஆண்டும் வெற்றி விழாவாக, எழுச்சி நாளாக தலித்துகள்  கொண்டாடுவது வழங்கம்.  அந்த அடிப்படையில் தான்  2018ஆம் ஆண்டு இந்த வரலாற்று நிகழ்வின் 200ஆம் ஆண்டு விழாவை கொண்டாட தலித்துகள் ஒன்று கூடினர்.  எழுச்சியை கொண்டாடினர்.  இதைப்பொறுக்க முடியாத இந்துத்துவக் கும்பல் அன்றைக்கு  வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது.

ஆனால் புனே காவல்துறை தலித்துகளை வேட்டையாடத் துவங்கியது.

குறிப்பாக, 2017 திசம்பர் 31 அன்று புனே நகரத்தில் ‘எல்கார் பரிஷத்’சார்பில் நடத்தப்பட்ட  மாநாட்டில் எழுத்தாளர்கள்,  மனித உரிமை ஆர்வலர்கள் என குவிந்தனர்.  இவர்களின் ஊக்கப்படுத்தலாலும் தூண்தலிலும் தான்  தலித்துகள் இப்படி எழுச்சி  பெறுகின்றனர்.  என்னும்குற்றச்சாட்டை முன்வைத்து காவல் துறை கைது செய்தது.

அதில் ஆனந்த்  டெல்டும்டே, கவுதம் நவ்லகா ஆகியோரையும் வழக்கில் சேர்த்தது.  இருவருக்கும் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கை  NIA என்னும்  தேசிய புலனாய்வு  அமைப்பு விசாரித்தது.

ஆனந்த் டெல்டும்டே ஒரு பேராசிரியர்,  கல்வியாளர். மார்க்சிய சித்தாந்தவாதி. 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் வரை கோவா  பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். ‘அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்’

அம்பேத்கரியர்கள் (நெருக்கடியும் சவால்களும்), ‘சாதியின் குடியரசு’‘ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்’போன்றவை அவரது குறிப்பிடத்தகுந்த நூல்கள். அவரது எழுத்துகள் மார்க்சிய பார்வையில் அம்பேத்கரியத்தையும், சாதி ஒழிப்பையும் முன்னிறுத்தி பகுப்பாய்வு செய்கின்றன.

ஆனந்த் டெல்டும்டே அவர்களின் இளைய சகோதரர் மிலிந்த் டெல்டும்டே இளம் வயதிலேயே மாவோயிஸ்ட் கொள்கையை உள்வாங்கி, ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு உழைப்பதற்காக குடும்பத்தைவிட்டு வெளியேறியவர். தற்போது இந்திய மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக உள்ளார். பீமா கோரேகான் வழக்கில் மிலிந்த் டெல்டும்டே குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை குறிவைத்து தான் ஆனந்த் டெல்டும்டேவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

செயற்பாட்டாளர்  கவுதம் நவ்லகா ‘சனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்‘ என்னும் அமைப்பின் செயலாளராக பணி புரிந்துள்ளார்.  அப்போது மாவோயிஸ்டுகள்  என்னும்  பெயரில்  அப்பாவி மக்களை காவல் துறை கைது செய்து சித்ரவதை செய்யப்படுவதை  கண்டித்து  பல உண்மை அறியும் அறிக்கைகளைவெளியிட்டு உள்ளார். ஊடகவியலாளராகவும் பொறுப்போடு செயல்பட்டுள்ளார்.

அவ்வளவு  தான்  இவர்களுடைய செயல்பாடுகள். இருவர் மீதும் தேச விரோத வழக்கு பதிவு செய்யப்படது. ஆனந்த் டெல்டும்டே தமது மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடினார்.  உச்சநீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய மறுத்தது. அப்படியானால் முன் பிணை கேட்டார். அதற்கும் மறுத்துவிட்டு,

3 வாரகாலம் சரணடைய அவகாசம் கொடுத்தது.

இப்போது  உச்சநீதிமன்றம் கொடுத்த அவகாசம் முடிந்தது.

கொரானா தொற்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் சூழலில் சிறைபாதுகாப்பாக  இருக்காது என்று மீண்டும் ஆனந்த டெல்டும்டே உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஆனால் நீதிபதி அசோக்பூசன் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது. உடனடியாக சரண் அடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அந்த அடிப்படையில் தான் எப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் ஆனந்த் டெல்டும்டேவும் கவுதம் நவ்லாவும் சரணடைந்தனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த 18.04.2020லிருந்து ‘கஸ்டடி’ என்று சொல்லக்கூடிய விசாரணைக்காக எடுத்து விசாரித்து வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எழுதிவருகிறார், பேசிவருகிறார் என்பதைத்தவிர இருவரும் எந்த குற்றமும் செய்யவில்லை.  மக்களுடைய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களை  இப்படி கொடுஞ்சட்டத்தில்  கைது செய்து சிறைப்படுத்துவது சர்வாதிகாரத்தின்  தொடக்கம் தான்.

காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதே ஆன மஸ்ரத் சஹாரா என்னும் புகைப்பட ஊடகவியலாளர் மீது ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளது இந்திய ஆக்கிரமிப்பு அரசு. காஷ்மீரில் இந்திய அரசு நிகழ்த்தும் அத்துமீறல்களை ஆவணப்படுத்தும் மஸ்ரத் சஹாராவின் சமூகவலைதள பதிவுகள் தேசவிரோதம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டங்களின் பின்னணியில் டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ பயங்கரவாதிகள் கலவரத்தை நடத்தினர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்தக் கலவரத்தை தூண்டியதாக, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீரான் ஹைதர் மற்றும் சஃபூரா சர்ஹார் ஆகியோர் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கவரத்தை முன்னின்று நடத்திய  இந்துத்துவ பயங்கரவாதிகள் வெளியே சுதந்திரமாக உள்ள நிலையில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க போராடிய மாணவ போராளிகள் ஊபா போன்ற கருப்பு சட்டத்தால் குறிவைக்கப்படுகிறார்கள்.

ஆனந்த்  டெல்டும்டே தான் சரணடைவதற்கு முதல் நாள் எழுதிய  கடிதத்தில் இப்படி எழுதியிருப்பார்,

“எனது இந்தியா சிதைக்கப்படுவதை நான் பார்க்கும் இந்த நேரத்தில், பலவீனமான நம்பிக்கையுடன் இந்தக் கடிதத்தை நெருக்கடியான சூழலில் எழுதுகிறேன். NIA கட்டுப்பாட்டுக்குள் செல்கிறேன்.உங்களோடு மீண்டும் எப்பொழுது பேசமுடியும் என எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் முறை வருவதற்கு முன் பேசுவீர்கள் என நம்புகிறேன் என முடிக்கிறார்.”

இந்த வரிகள் ஹிட்லரின்  சர்வாதிகாரத்துக்கு எதிராக ஜெர்மனி கவிஞர் மார்ட்டின்  நிமோலார் எழுதிய கவிதை தான்  நினைவுக்கு வருகிறது.

முதலில்  கம்யூனிஸ்ட்களை

கைது செய்ய வந்தார்கள் அமைதியாக இருந்தேன் ஏனென்றால் நான்  கம்யூனிஸ்ட் இல்லை!

 

அப்புறம் தொழிற்சங்கத்தினரை

கைது செய்யவந்தார்கள்

அப்போது அமைதியாக இருந்தேன். 

ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி அல்ல!

 

பிறகு யூதர்களை கைது செய்ய வந்தார்கள்.  அப்போதும் அமைதியாகவே இருந்தேன். 

ஏனென்றால் நான் யூதனில்லை!

 

இறுதியாக என்னை கைது செய்ய வந்தார்கள்

அப்போது  எனக்காக

பேச யாருமில்லை

மோடியின் சர்வாதிகாரத்திற்கு  எதிராக குரல் கொடுப்பவர்கள். எழுதி வருபவர்களை கொடும் அடக்குமுறை கருப்பு சட்டங்களால் ஒடுக்கி வருகிறது இந்துத்துவ அரசு. இப்போது இணைந்து  நாம் குரல் கொடுக்காவிட்டால் நமக்காக பேச யாரும் இருக்க  மாட்டார்கள்.  அந்த பணியைத்தான் சர்வாதிகார மோடி அரசு  செய்து வருகிறது.

 

22.4.2020