பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கோவை, சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக நேற்று தமிழ்நாடு காவல்துறைக்கு எச்சரிக்கையை விடுத்திருந்தது உளவுத்துறை. மேலும் அவர்கள் 6 பேரும் கோவையில் தங்கியிருப்பதாகவும் இவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என்றும் மற்றவர்கள் இலங்கை நாட்டை சேர்ந்த இஸ்லாமியர்கள் என்றும் உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

பயங்கரவாதிகள் அனைவரும் இந்துக்களைப் போன்று உருமாறி கோவையில் உலாவி வருவதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கோவையிலுள்ள ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மேலும் கோவை நகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களையும் வாகன பட்டியலையும் வெளியிட்டுள்ளது காவல் துறை. இதைதொடர்ந்து, பதிவெண்ணை வைத்து வாகனங்களைக் கண்டறியும் சோதனையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். INNOVA, SWIFT, XYLO ஆகிய வாகனங்களை அடையாளமாகக் கொண்டு காவல்துறையினர் பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், “பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை” எனக் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “6 பயங்கரவாதிகள் கோவை நோக்கி வருவதாகத் தகவல் கிடைத்தது. நகரின் முக்கிய இடங்களில் போதுமான அளவு பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளோம்.

சுமார் 2000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தகவலைக் கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கோவை மாநகர போலீசார் தரப்பிலிருந்து எவ்வித புகைப்படங்களையும் வெளியிடவில்லை. பொதுவான எச்சரிக்கைதான். அதனால், பொதுமக்கள் இதுகுறித்து கவலைப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை.” என்று தெரிவித்துள்ளார்.