ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் அதாவது வரும் 30ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த 21ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 நாட்கள் சிபிஐ காவல் அளித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ கைது செய்த பின்னர், அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் 26ஆம் தேதி (இன்று) வரை சிதம்பரத்தைக் கைது செய்யத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், ப.சிதம்பரத்தை கைது செய்ய விதித்த தடையை நாளை மதியம் வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சிபிஐக்கு எதிராக ப.சிதம்பரம் கோரிய மேல்முறையீடு முன் ஜாமீன் மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட ஐந்து நாள் காவல் இன்று முடிவடைவதால், அவர் இன்று மீண்டும் ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அப்போது, மேலும் 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 5 நாட்களாக ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் சிபிஐ தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ப.சிதம்பரத்தின் காவலை 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு கொடுத்த அனுமதி மூலம் சொத்து சேர்த்ததாக ஆதாரம் காட்டினால் வழக்கை திரும்பப்பெறத் தயார் என ப.சிதம்பரம் தரப்பில் சவால் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.