தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசியல் தேர்தல் களத்தில் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே நடைபெறும் கருத்துப்போர் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருவது தினம் தினம் ஊடகங்களின் வழியாக பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்கள்.
இந்த இருபெரும் திராவிடக் கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள கருத்து போருக்கான காரணங்கள் தெரியாமல் திக்கித் திணறிக் கொண்டிருக்கின்றனர் என்றால் மிகையாகாதுதான்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்மீது கடுமையான விமர்சனங்களை முதலமைச்சர் எடப்பாடி பன்னீர்செல்வம் வைத்து வீதிவீதியாக பிரசாரம் செய்து ஓட்டுக் கேட்டபதும்.!
முதலமைச்சர் எடப்பாடி பன்னீர்செல்வத்தின் மீது கடுமையான விமர்சனங்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வைப்பதும் வாடிக்கையாக ஒன்றாகவே இருந்தாலும்.!
சமீபகால தேர்தல் பரப்புரைகளில் முதலமைச்சர் எடப்பாடி அவர்களின் குற்றச்சாட்டு என்பது திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் பொய் கூறி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்கள் என மீண்டும் மீண்டும் ஒரு அழுத்தமான கருத்தினை ஊடகங்கள் வழியாக தமிழக மக்களிடம் தெரிவித்துவருகிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அப்படி என்ன பொய் பிரச்சாரம் செய்கிறார் என்பதை ஆராய்ந்து பார்க்கவே இந்த அரசியல் தேர்தல் பரப்புரை கட்டுரை.
1989ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் இருந்து முதல்முறையாக அதிமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். முறையே இரண்டாவது முறையாகவும் அதே எடப்பாடி தொகுதியில் 1996ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 1998-ம் 99ம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மீண்டும் 2011ம் ஆண்டு அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட திரு பழனிச்சாமி அவர்கள் மூன்றாவதுமுறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று அன்றைய அதிமுக அமைச்சரவையில் சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சராக பொறுப்பேற்கிறார். 2016ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறையுடன் சேர்த்து ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வகித்து வந்த பொதுப்பணித்துறையும் இவருக்கு வழங்கப்படுகிறது.
அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் எதிர்பாராத மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களின் நிகழ்வுகளால், அதிமுக இரண்டாக உடைந்து ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என பிரிந்து செல்ல சசிகலா தரப்புக்கு ஆதரவாக நின்றார் நமது மதிப்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜெயலலிதா சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணக்கமாக இருந்த திரு பழனிச்சாமி அவர்கள் 14 பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதலமைச்சராக பதவியேற்று இன்றுவரை பல்வேறு இன்னல்களையும் பல்வேறு போராட்டங்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக தனது இரண்டாண்டு ஆட்சியினை செங்கோல் கொண்டு நடத்தி வரும் இவ்வேளையில். 2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தமிழக அரசியலின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் அரசியலாகவே அரசியல் விமர்சகர்களாலும் மக்களாலும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கப்படும் என்ற ஒரு வாசகம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக திமுக தலைவர் மு க ஸ்டாலின்மீது கடுமையான விமர்சனங்களை சாட்டிவரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்றைய தினம் மிகக் கடுமையான குற்றச்சாட்டாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொய்யை மட்டுமே பேசி பொய்யிலே வாழ்ந்து வருவதாக கூறியும். மேலும். கொல்லைப்புறமாக வந்து கட்சியை தக்க வைத்துக்கொண்டு அதே பாணியில் ஆட்சியைப் பிடிக்கவும் ஆர்வமாக இருக்கிறார். மு.க.ஸ்டாலின் என காட்டமான ஒரு பத்திரிகை அறிவிப்பை கொடுத்திருக்கிறார் உயர்திரு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலில் பல புரியாத புதிரான மாற்றங்களையும் போராட்டங்களையும் கண்டபோதிலும் அமைதியில் சொரூபமாகவே காட்சியளித்த பழனிச்சாமி அவர்கள் பல்வேறு சட்ட சிக்கல் போராட்டங்களையும் இன்முகத்தோடு எதிர்கொண்டபோதுகூட இவ்வளவு உக்கிரமாக வார்த்தைகளை உதிர்த்து இல்லை.
ஆனால். ஜெயலலிதா மரணம்பற்றி யாராவது சில விமர்சனங்களைக் கொண்டுவந்தால் மட்டும் உக்கிரமாக எழுந்து ஆத்திரத்தின் எல்லைவரை சென்று வார்த்தைப் போராளும் அதிகாரத்தோடும் அடக்கி ஆள நினைக்கின்றார். நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் அவர்கள் பொய் மட்டுமே கூறி அரசியல் செய்வதாகவும் பொய்யை மக்களிடம் பரப்பி தேர்தல்களில் வாக்கு கேட்பதாகவும் தினம் தினம் ஊடகங்களில் பேசி வரும் திரு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே.
திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் பொய் உறைப்பதாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம்.! உண்மையை மட்டுமே பேசி தமிழக அரசியலை அடுத்தக்கட்ட முன்னேற்ற நிலைக்கு எடுத்துச் சொல்லும் உங்களிடம் சில பல கேள்விகளை உங்கள் முன் வைக்கின்றோம்.
உண்மையை மட்டுமே பேசி அரசியல் செய்யும் அதிமுகவின் முதலமைச்சர் திரு பழனிச்சாமி அவர்களே.
நீங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு எண்ணற்ற பல அரசியல் சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறினாலும் தீராத பல சந்தேகங்கள் உடைய சில கேள்விகள் உள்ளது.
1. 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பிற்கு பிறகு நீங்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது உங்களது நெருங்கிய நண்பரும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்த திரு இளங்கோவன் மூலம் உங்களுடைய பணம் சுமார் 151 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கிகள் மூலம் போலியான வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு இந்தத் தொகை மாற்றப்பட்டதாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது எனவும் ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் புதிதாக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பெரும்பாலானவை போலியானவை என்று தெரியவந்திருக்கிறது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்த வேளையிலும். மேலும் கூட்டுறவு வங்கிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுபவை என்பதாலும் அதில் போலியான பெயர்களில் பெருமளவில் கருப்புப் பணத்தை முதலீடு செய்தவர்கள் தமிழக அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் என்பதாலும் இதுகுறித்து தனி விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர தமிழக ஆளுனரும், தலைமைச் செயலரும் ஆணையிட வேண்டும் என 25 டிசம்பர் 2014 ஆம் ஆண்டு பா.ம.க.வின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது அறிக்கையை வாயிலாக வலியுறுத்தினாரே அதன் உண்மைத்தன்மை என்ன என்று மக்களிடம் கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள் எங்கள் தமிழக முதல்வரே.
2.2011 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை நீங்கள் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது 2014 ஆம் ஆண்டு ஒரு டன் தார் 40361 என்ற விலையில் இருந்தபோது கொடுத்த ஒப்பந்தங்களைபோல. அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே 2015ஆம் ஆண்டு தார் விலை ஒரு டன் 30260. 2017 ஆம் ஆண்டு தார் விலை ஒரு டன் 23146 என விலை வீழ்ச்சியை கண்டபோதும் கூட உங்கள் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் ஒரு டன் தார் 2014ஆம் ஆண்டு விலையிலேயே ஒப்பந்த பணிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும். அதன் மூலம் தார் கொள்முதல் செய்ததில் ரூபாய் ஆயிரம் கோடி அளவு தமிழக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக அப்போது பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினாரே அதன் உண்மை தன்மையை மக்களாகிய எங்களுக்கு எடுத்துக் கூறுங்கள் எங்கள் சேலத்து சிங்கத் தமிழனே.
3. 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் வீட்டில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பணம் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியதே.! அந்தச் சோதனையில் யார் யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற ஒரு டைரியும் சிக்கியதே. மேலும் ராம் மோகன் ராவ் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் நிறுவனத்திற்கு தமிழக அரசு மருத்துவமனைகளில் தனியார் ஊழியர்கள் நியமிக்கப்பட்ட விவகாரம் இன்றுவரை நிலுவையிலேயே உள்ளதே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களே.முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் மீதும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நடத்திவரும் நிறுவனத்தின் மீதும் மேலும் அவர்களிடம் கைப்பற்றிய பணத்தின் வரவு குறித்தும் யார் யாருக்கெல்லாம் அவர் பணம் கொடுத்தார் என்கிற அவரது குறிப்பேடு குறித்தும் உண்மை நிலையை எங்களுக்கு இப்போது தெரிவியுங்கள் எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களே! பிறகு ஸ்டாலினிடம் கேள்வி கேட்கலாம்.
4.கொல்லைப்புறமாக திமுகவின் தலைமைப் பதவிக்கு வந்தவர் மு.க.ஸ்டாலின் என வசைமொழிபாடும் எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அமைச்சர் அவர்களே.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக அணியில் சசிகலா தரப்பில் தாங்கள் இணைந்துகொண்டு கூவத்தூர் விடுதியில் தங்கி என்ன என்னவெல்லாம் திட்டத்தினை வகுத்து வெற்றிக்கனிகளைப் பறித்து எப்படி எல்லாம் உழைத்து இன்று முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்தீர்கள்.! என்ற ரகசியத்தை மட்டும் எங்களுக்கு தெரிவியுங்கள் முதலமைச்சர் அவர்களே.
5. தாங்கள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது தங்கள் அமைச்சரவையின் இப்போதைய இணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது வரலாற்றுப் பெருமைமிக்க ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவில் நடந்தபோது அந்தப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய, இறுதி நாளில் நடைபெற்ற அந்த வன்முறை கலவரத்தை தூண்டியது யார் என இப்போதாவது எங்களுக்குக் கூறுங்கள் எங்கள் இனமான சேலத்தார் அவர்களே.!
6.ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்திற்கான நிதி 1515 கோடியாக உயர்த்தப்பட்டு, இந்தப் பணிக்கான ஒப்பந்தம் உங்களுடைய உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டு. அதே போன்று திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்த 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சேகர்ரெட்டி நாகராஜன், பி. சுப்ரமணியம் ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்க இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வண்டலூர் முதல் வாலாஜா சாலை வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்ற 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் “எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டு திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஐந்து வருடங்களான 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ”விற்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும். மேலும் மேற்கண்ட சுமார் 4800 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் உங்களுடைய உறவினர்கள் பி. சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன் செய்யாத்துரை, சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு திமுகவின் அமைப்புச் செயலாளர் திரு ஆர் எஸ் பாரதியால் முன்வைக்கப்பட்டு சிபிஐ விசாரணை கோரப்பட இதே குற்றச்சாட்டை தினகரன் அணியினர் தங்க.தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் முன்மொழிந்தனரே.! அதன் உண்மைத்தன்மையை உலகறிய உரக்க கூறுங்கள் எங்கள் ஒப்பற்ற சே குவேராவே.
7.குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்ற அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரைக் காப்பாற்ற வேண்டிய அமைச்சர் விஜய பாஸ்கரே கொலை குற்றவாளி அமைச்சராக உள்ளார். அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். முதல்வர் இதனை செய்ய வேண்டும். ஆனால் அதை அவர் செய்ய மாட்டார். முதல்வரே முதல் குற்றவாளியாக இருக்கிறார் என மு.க.ஸ்டாலின் உங்கள்மீது காட்டமான ஒரு குற்றச்சாட்டை வைத்தாரே மேலும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் பத்திரிகையாளர்கள் முன்னும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்ததது நாடறியும். அந்த உண்மை நிலவரங்களை எங்களுக்கு எடுத்துரையுங்கள் உயர்திரு முதலமைச்சர் அவர்களே.
8. கூவத்தூரில் 122 எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து கட்டாயப்படுத்தப்பட்டதால் ஆதரவு அளித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் பக்கம் 122 எம்.எல்.ஏ.க்களும் 2,417 நிர்வாகிகளும்தான் உள்ளனர். ஆனால் எங்கள் பக்கம் தமிழக மக்கள் உள்ளனர். அ.தி.மு.க. எந்த நோக்கத்துக்கு உருவாக்கப்பட்டதோ, அந்த கொள்கைப்படி மக்களாட்சி தத்துவத்தின்படி மக்கள் இயக் கத்தின்படி, மக்கள் ஆட்சியாக தான் அ.தி.மு.க. இருக்க வேண்டும் என்பது எங்களின் அடிப்படை கொள்கை.
டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்துக்கு மட்டும் அ.தி.மு.க. சொந்தம் இல்லை. அ.தி.மு.க. எந்த ஒரு குடும்பத்தின் இரும்பு பிடியிலும் சிக்காமல், ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் என்பது தான் எங்களின் கொள்கை.
தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டது, இலாகா ரீதியான நடவடிக்கை. உண்மைத்தன்மை இருக்கிறது என்ற அடிப்படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் எடப்பாடி பழனிசாமி அரசு, அனைத்து நிலைகளிலும் ஊழல் நிறைந்ததாக இருக்கிறது. இது அவர்கள் கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர்., கட்சியை வழி நடத்திச்சென்ற ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என 2017ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி பத்திரிகை வாயிலாக ஒரு அறிக்கையை இன்றைய துணை முதல்வர் ஓபிஎஸ் பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தாரே.
உண்மையை மட்டுமே உலகிற்க்கு கூறிவரும் எங்கள் ஒப்பற்ற மாமனிதரே.
இன்றைய இணைய முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அன்று தெரிவித்த கருத்துக்கு உண்மையான காரணங்களை உரக்க கூற வாருங்கள் எங்கள் முதலமைச்சரே.
10. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்த துணை தாசில்தார் அதற்கு அனுமதி கொடுத்தது யார்.?
மீத்தேன் திட்ட எதிர்ப்பு. நீட் எதிர்ப்பு போராட்டம்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் கைப்பற்றப்பட்ட 560 கோடி ரூபாய் கன்டெய்னர் பணம். கொடநாடு எஸ்டேட்டில் மர்மமாக நடக்கும் கொலைகள், தமிழில் நடைபெற்ற தேர்வில் வடமாநிலத்தவர்கள் பெற்ற 100 சதவிகித தேர்ச்சி. என இன்னும் ஆயிரமாயிரம் அமானுஷ்யங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டே இருந்தாலும்.!
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் முந்தைய ஆட்சிகளை காட்டிலும் உங்கள் ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதே எங்கள் ஒப்பற்ற சேலத்து சிங்கமே.!
அந்த குற்றவாளிகள் மீது தங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகளை கொஞ்சம் பட்டியல் எடுத்து சொல்லுங்கள். உங்கள் அறிக்கையை படித்த பிறகாவது எதிர்வரும் காலங்களில் குற்றவாளிகள் பயந்து திருந்தட்டும்.
11.பேச்சுக்குப் பேச்சு திமுக தலைவர் பொய் கூறுகிறார் பொய் பேசி வருகிறார் என்று மேடைக்கு மேடை முழங்கிவரும் எங்கள் மாணிக்க முதல்வரே. ஜெயலலிதா மரணம் இயற்கையானது என்று சசிகலா தரப்பில் இருந்த போது கூறிய நீங்கள் என்ன நோக்கத்திற்காக ஆறுமுகம் ஆணையத்தை உருவாக்கினீர்கள்.!?
அந்த ஆறுமுகம் ஆணையத்தின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் இன்னும் நீட்டிக்கப்படும். எத்தனை பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
என்னவெல்லாம் ஆதாரங்கள் திரட்டப்பட்டிருக்கிறது. அப்போலோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகள் மற்றும் போயஸ் கார்டன் வீட்டில் சிசிடிவி காட்சிகள் மருத்துவமனையில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்த பிரமுகர்கள் மற்றும் அவரிடம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக கையெழுத்து வாங்கிய டாக்டர் பாலாஜி இவர்களிடம் என்னென்ன முறையில் விசாரணை செய்யப்பட்டு என்னமாதிரியான ஆதாரங்கள் தரப்பட்டு அந்த ஆணையம் தனது இறுதி அறிக்கையினை என்று சமர்ப்பிக்க இருக்கிறது என்று திரு மு க ஸ்டாலின் அவர்களிடம் நீங்களே கூறுங்கள் எங்கள் முதல்வர் அவர்களே.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 90 சதவீத விசாரணை முடிவடைந்துள்ளதாகவும் எந்த காரணங்களுக்காகவும் விசாரணை நிறுத்தப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ள ஆறுமுகசாமி ஆணையம். இறுதி அறிக்கை தாக்கல் செய்வதை தடுக்க அப்போலோ வழக்கு தொடர்ந்துள்ளதாக நீதிபதி ஆறுமுகசாமி ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளாரே. அதன் இறுதி நிலவரங்களை நீங்கள் எங்களுக்கு கூறினால் பிறகு ஸ்டாலின் எதற்கு பொய்யுரைக்க போகிறார்?
இறுதியாக, தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு குறைந்தபட்சம் 112 உறுப்பினர்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்கிற விதிப்படி சட்டமன்ற சபாநாயகரை தவிர்த்து தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 106 ஆக இருக்கும்போது. எந்த மெஜாரிட்டி அடிப்படையில் தங்கள் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரியாத புதிராக தமிழக மக்கள் விழி பிதுங்கி கொண்டு வியாக்கானம் பேசுகின்றனர். அதன் உறுதித்தன்மையை எங்களுக்கு விருப்பப்பட்டால் விளக்குங்கள் முதலமைச்சர் அவர்களே.!
தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அஇஅதிமுகவின் தலைமையில் பாஜக கூட்டணி கட்சியினராக போட்டியிடும் இந்த வேலையில்.
ரஃபேல் விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பதை உங்கள் மூலமாக உங்களது கூட்டணிக் கட்சியினரை கூற வையுங்கள் எங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே.
பலப் பல காரணங்களுக்காக அரசியல் நாகரீகத்தோடு திமுக அதிமுக என என்ற மாபெரும் இரு பெரும் சக்திகள் தமிழக அரசியலை கடந்த அரை நூற்றாண்டுகளாக ஆண்டு வந்த போது கூட. காழ்ப் புணர்ச்சிகள் பல இருந்தாலும் அரசியல் நாகரீகத்தோடு கருத்துப் பரிமாற்றங்களை ஊடக வாயிலாக தெரிந்து கொண்டிருந்தனர் எங்கள் முன்னோர் தலைமுறை.
எழுதுவதற்கு பேனா முனையும் பேப்பர் பக்கங்களும் இன்னும் அதிகமாக உள்ளது. ஆனால் இது ஆளுங்கட்சியை விமர்சித்தும் எதிர்க்கட்சியினை பாராட்டியும் எழுதப்பட்ட கட்டுரை என மக்கள் முகம் சுளித்து வெறுக்க வேண்டாம் என இத்தோடு நிறுத்திக் கொண்டு.
தற்போதைய தமிழக அரசியலின் இரு பெரும் துருவங்களாக விளங்கும் திமுக அதிமுக வின் அரசியல் கருத்து பரிமாற்றங்கள் பொது மக்களாகிய எங்களுக்கு முகம் சுழிக்கும் அளவிற்கு இருக்கிறது உங்களுடைய மேடைப் பேச்சுகள்.ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களை மட்டுமே திராவிட கட்சிகளில் கேட்டு வளர்ந்த நாங்கள் இப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்து உங்களை நீங்களே புழுதியில் மறைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்கிற உண்மையை இங்கே உங்களுக்கு உரக்க கூறத்தான் இந்த ஒரு சிறு பதிவு.
திரு மு க ஸ்டாலின் அவர்கள் உங்களது அரசியல் அனுபவங்களையோ அரசாங்கத்தின் வழிநடத்தல்களையோ ஆயிரமாயிரம் முறை விமர்சனங்களாகவும் அறிக்கைகளாகவும் வெளியிட்ட போதும் கூட சிங்கமாக வீற்றிருக்கும் நீங்கள். ஜெயலலிதா மரணம் பற்றி திரு மு க ஸ்டாலின் பேசும்போது மட்டும் வீறு கொண்டு எழுந்து எதிர் கருத்தினை விடுகிறீர்கள்.
ஆக ஜெயலலிதா மரணத்தின் உண்மைத் தன்மைதான் என்ன என்பதை மக்களாகிய எங்களுக்கு நீங்களே எடுத்துக் கூறுங்களேன்.ஆளும் கட்சியின் முதல்வர் மரணத்தைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடுகிறார் என்றால். ஆளுங்கட்சி நடத்தும் விசாரணை ஸ்திரத்தன்மையின் நிலைப்பாடுதான் என்ன என்பதை மக்களுக்கு ஒருமுறை புரியவையுங்கள். நாங்களும் எங்கள் சந்ததிகளும் தெரிந்துகொள்கிறோம்.
வரலாறு முக்கியம் அமைச்சரே.!