அதிமுக-பாஜக-பாமக: வெற்றி கூட்டணியா?

2019 மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான நிலையில், பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்மரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளதால், தமிழக மக்களும் கூட்டணி குறித்து தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர்.

கட்சிகள் கூட்டணி

2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இடது சாரிகள் அடங்கிய பலமான கூட்டணி சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. திமுகவில் கூட்டணி அறிவிக்கப்பட்டாலும் இன்னும் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இதுவரை வெளியிடவில்லை.

அதிமுகவுடன் பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி அமையும் என்று தகவல் கூறப்பட்ட நிலையில், அதற்கேற்ப பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக நடந்துவந்தது. இந்நிலையில், சென்னை கிரவுன் பிளாசா ஹோட்டலில் இன்று காலை அதிமுக – பாமக இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், மாநிலங்களவையில் ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகள் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி

அதிமுக – பாமக கூட்டணி உறுதியான நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி குறித்து இன்று மதியம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக பாஜக பொறுப்பாளரும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த 14ஆம் தேதி தமிழகம் வந்திருந்தார். அப்போது, அமைச்சர் தங்கமணி அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று வருகை தந்து கூட்டணியை உறுதி செய்ய இருந்த நிலையில், அமித்ஷாவின் வருகை திடீரென ரத்தானது. இன்று மதியம் சென்னை வந்த பியூஷ் கோயல் ஹோட்டலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாஜக பொதுச்செயலாளர் முரளிதராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை இவர்களும் உடனிருந்தனர். சுமார் இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி கையெழுத்திடப்பட்டது.

பாஜகவிற்கு 5 தொகுதிகள்

செய்தியாளர்களை சந்தித்தனர் பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ். “அதிமுக – பாஜக மெகா கூட்டணி அமைத்து தமிழகம், புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க முடிவு. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிக்கும். தமிழகம், புதுச்சேரியில் நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திப்போம் ” என்று கூறினார்கள்.

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு புறப்பட்டார் பியூஷ் கோயல். கூட்டணி குறித்து விஜயகாந்துடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். அதிமுக கூட்டணியில் 9 மக்களவை தொகுதிகள் தேமுதிக சார்பில் கேட்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுயநல கூட்டணி

”அதிமுக – பாஜக – பாமக கூட்டணி பலவீனமான கூட்டணி. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளன அதிமுக. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல் போகும்” என்று விமர்சித்துள்ளார் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

”ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு எதிரான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி; சுயநல கூட்டணி; மக்கள் நலனுக்கானது கிடையாது” என்று கூறியுள்ளார் எம்எல்ஏ கருணாஸ்.