உடல்நிலை காரணமாக மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டாம் என்று மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதால், மத்தியில் அமைய உள்ள புதிய அமைச்சரவையில் அவர் இடம்பெறுவது சந்தேகம் என்றும், சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அருண் ஜெட்லி செல்வார் எனவும் செய்திகள் வெளியானது.

இதைதொடர்ந்து, நிதியமைச்சர் அருண் ஜெட்லி நலமாக உள்ளார் என்றும், அவரது உடல்நிலை குறித்து வெளியான தகவல் பொய்யானது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் சிதான்ஷூ கர்.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டாம் எனப் பிரதமர் மோடிக்கு அருண் ஜெட்லி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க விரும்புவதாக அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் அரசுக்கும், கட்சிக்கும் வெளியிலிருந்து அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடியிடம் ஏற்கெனவே வாய்மொழியாக இதனைத் தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார் அருண் ஜெட்லி. அந்த கடிதத்தின் நகலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அருண் ஜெட்லி.