இந்தியாவுக்குத் தரப்பட்டு வந்த 38,000 கோடி ரூபாய் வர்த்தக சலுகைகளை வரும் ஜூன் 5 ஆம் தேதி முதல் நீக்குவதாகக் கடந்த வெள்ளியன்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியா தனது சந்தையை நியாயமான மற்றும் பாரபட்சமில்லாத முறையில் எங்களுக்கு அணுக இடம் கொடுக்கவில்லை என உறுதிப்படுத்திக் கொண்டு அதற்கேற்ப இந்தியாவிற்கான வர்த்தக சலுகைகளை நீக்குவதென முடிவெடுத்துள்ளேன், என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த சிறப்பு வரிச் சலுகைகளை பொது முன்னுரிமைகளின் அமைப்பின் (GSP) கீழ் திரும்பப்பெறுவதாக மார்ச் 5 ஆம் தேதியே அறிவிக்கப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் அமலுக்குக் கொண்டுவரப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டது. பிறகு அது மே 23 அன்று இந்தியாவில் அமையவிருக்கும் புதிய அரசுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் வில்பர் ராஸ், இந்தியாவின் முன்னாள்  வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பாபுவை கடந்த மாதம் சந்தித்து இணைய வர்த்தகம், தகவல் பாதுகாப்பு, மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்றவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஆய்வின் படி  2018 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உலகளாவிய வர்த்தக ஏற்றுமதி $ 324.7 பில்லியனாக இருந்தது, அதில் 51.4 பில்லியின் அமெரிக்க டாலர் இருந்தது. இருப்பினும், இந்தியாவிலிருந்து 6.35 பில்லியன் டாலர் ஏற்றுமதி மட்டுமே ஜிஎஸ்பி திட்டத்திலிருந்து பயனடைந்தது. இத்தகைய ஏற்றுமதிகள் 1921 அமெரிக்க கட்டண விதிகளுக்குக் கீழ் இருந்தன.

இத்தகைய காரணங்களுக்காகவே அமெரிக்க அரசு இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு இந்தியா வருத்தத்தையும் இதை பரிசீலனை செய்யுமாறும் அமெரிக்காவைக் கேட்டுள்ளது.