ரஃபேல் ஊழல் வழக்கு விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டிருந்ததாகப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதற்காக உச்ச நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரியுள்ளார்.

2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்து கட்ட தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் மாறிமாறி விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் எனக் கூறிவிட்டதாகத் தேர்தல் பரப்புரையின்போது பேசியிருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ராகுல் காந்தி திரித்துக் கூறியதாகக் கூறி பாஜக எம்பி மீனாட்சி லேக்கி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.

அப்போது நீதிமன்ற உத்தரவு குறித்துப் பேசியதற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார். இருந்தாலும் வருத்தம் மட்டுமே தெரிவித்ததற்கு அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், மன்னிப்பு கோரும்படி அறிவுறுத்தியிருந்தது. மேலும் ராகுல் தரப்பில் புதிதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில் ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 3 பக்கங்களை கொண்ட பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.