சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) வெளியிடும் உலக பசி அட்டவணை (GHI – Global Hunger Index) என்பது உலக நாடுகளில் பசிக்கொடுமையால் வாடும் மக்கள், குறுகிய காலத்திற்கு ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் வாடும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் வளர்ச்சிகுன்றிய 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியவற்றை அளவீடாகக் கொண்டது. இதனடிப்படையில் 119 உலகநாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இவ்வட்டவணையில் இந்தியா தற்போது 102-வது இடத்தில் உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டில் 100வது இடத்திலும் 2018-ஆம் ஆண்டு 102-வது இடத்திலும் இருந்தது.
இந்தியா தொடர்ந்து பட்டியலில் பின் தங்கியிருப்பது மிகவும் மோசமான நிலையைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது. Child wasting என்று சொல்லப்படும் ‘குறுகிய காலத்திற்கு ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் வாடும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்’ குறியீட்டளவு 20.8%-ஆக இருக்கிறது. பட்டியலில் உள்ள மற்ற அனைத்து நாடுகளைவிடவும் இடக்குறியீட்டில் இந்தியா மோசமான நிலையில் இருக்கிறது., Child stunting என்று சொல்லப்படும் ‘ஊட்டச்சத்துக் குறைபாட்டால் வளர்ச்சிகுன்றிய 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் குறியீட்டளவு’ 37.9%-ஆகவும் இருப்பது மிகவும் அபாயகரமானதாகவும் இருக்கிறது.
பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நாடுகளாகக் கருதப்படும் பல நாடுகளைவிடவும் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் (94), வங்கதேசம் (88), இலங்கை (66), நேபாளம் (73), சீனா (25) ஆகிய இடங்களில் இருக்கின்றன.
அப்பட்டியலில் ”இந்தியா மிகவும் அபாயகரமான பசிக்கொடுமையினால் வாடுகிறது” என்றும் “தூய்மை இந்தியா போன்ற திட்டங்களைப் பற்றி இந்தியா பேசினாலும் இன்னும் இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பது என்பது இருக்கிறது” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியா திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடு என்று மோடி குறிப்பிட்ட நிலையில் உலக பசி அட்டவணையில் அதனை உடைக்கும்விதமான கருத்து வெளிவந்திருப்பது உலக அரங்கிற்கு உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.