ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி நளினி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சுமார் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இதுதொடர்பான வழக்கில், ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று தீர்ப்பளித்திருந்தது உச்ச நீதிமன்றம். இதைதொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் ஒன்றை இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திவருகிறார்.

இந்நிலையில், சிறையில் உள்ள ஏழு பேரையும் முன் கூட்டியே விடுவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நளினி. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் அரசு கேட்க வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.

“எழுவரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்துள்ள பரிந்துரை தமிழக ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 361இன் படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது.

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனையை குறைப்பது உள்ளிட்ட மாநில அரசின் அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது. நீதிமன்றம், முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்துப் பரிசீலிக்க மட்டும் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியும். எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.” எனத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 29) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.