தேர்தல் முடிவடைந்த நிலையில், தற்போது அரசியல் களமும் இன்னும் சூடுபிடித்துள்ளது. காரணம், தேசிய ஊடகங்கள் தாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பில் பாஜகதான் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் பலித்ததா? என்பதையும் தற்போது இந்த கருத்துக்கணிப்புகள் பலிக்குமா? என்பதையும் வரும் 23ஆம் தேதி வரை காத்திருந்துதான் தெரிந்துகொள்ளவேண்டும்.

கருத்துக்கணிப்பு வெளியீடு

17ஆவது மக்களவை தேர்தல் திருவிழா நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், வரும் 23ஆம் தேதி அறிவிக்க இருக்கும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் எப்படி இருக்கும் எனத் தேசிய ஊடகங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன.

பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி மத்தியில் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கும் என இந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைக்கும் எனவும், அதிமுக குறைவான இடங்களையே கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாஜக கூட்டணி 306 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 132 இடங்களையும், மற்ற கட்சிகள் 104 இடங்களையும் பிடிக்கும் என டைம்ஸ் நவ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியின் கருத்துக்கணிப்பில், பாஜக கூட்டணி 287 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களையும், மற்ற கட்சிகள் 127 இடங்களையும் பிடிக்கும் என தெரியவந்துள்ளது. பெரும்பாலான தேசிய ஊடகங்களின் கருத்துக்கணிப்பில் பாஜகதான் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கின்றன.

நியூஸ் எக்ஸ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில்:

பாஜக கூட்டணி – 242,

காங்கிரஸ் கூட்டணி – 164,

மற்றவை – 136

என்.டி.டிவி நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில்:

பாஜக கூட்டணி – 306,

காங்கிரஸ் கூட்டணி 124,

மற்றவை – 112

டுடேஸ் சாணக்யா

பாஜக கூட்டணி – 340,

காங்கிரஸ் கூட்டணி – 70,

மற்றவை – 133

சி.என்.என் நியூஸ் 18

பாஜக கூட்டணி – 336,

காங்கிரஸ் கூட்டணி – 82,

மற்றவை – 124

ஜன் கி பாத்

பாஜக கூட்டணி – 305,

காங்கிரஸ் கூட்டணி – 124,

மற்றவை – 113

சி வோடர்ஸ்

பாஜக கூட்டணி – 287,

காங்கிரஸ் கூட்டணி – 128,

மற்றவை – 127

நியூஸ் நேஷன்

பாஜக கூட்டணி – 290,

காங்கிரஸ் கூட்டணி – 126,

மற்றவை – 138

இந்தியா நியூஸ்

பாஜக கூட்டணி – 298,

காங்கிரஸ் கூட்டணி – 118,

மற்றவை – 126

ஜி நியூஸ்

பாஜக கூட்டணி – 300,

காங்கிரஸ் கூட்டணி – 128,

மற்றவை – 114

எபிபி

பாஜக கூட்டணி – 267,

காங்கிரஸ் கூட்டணி – 127,

மற்றவை – 148

சுதர்சன் நியூஸ்

பாஜக கூட்டணி – 313,

காங்கிரஸ் கூட்டணி – 121,

மற்றவை – 109

இதேபோன்று தமிழகத்தில் திமுக 30க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் எனவும், அதிமுக கூட்டணி 5 இடங்கள் பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.என்.என் நியூஸ் 18

அதிமுக கூட்டணி – 14-16

திமுக கூட்டணி – 22-24

மற்றவை – 0

இந்தியா டுடே

அதிமுக – 4

திமுக – 34

மற்றவை – 0

டைம்ஸ் நவ்

அதிமுக கூட்டணி – 9

திமுக கூட்டணி – 29

மற்றவை – 0

என்.டி.டி.வி

அதிமுக கூட்டணி – 13

திமுக கூட்டணி – 25

மற்றவை – 0

இந்தியா டிவி

அதிமுக கூட்டணி – 12

திமுக கூட்டணி – 26

மற்றவை – 0

நியூஸ் நேச்ஷன்

அதிமுக கூட்டணி – 15

திமுக கூட்டணி – 23

மற்றவை – 0

அரசியல் தலைவர்களின் கருத்துகள்

இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தையக் கணிப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையை மாற்றவோ அல்லது இயந்திரங்களை மாற்றவோதான் இந்தத் திட்டம். உறுதியாகவும், ஒற்றுமையுடன், வலிமையுடன் இருந்து இந்தப் போர்க்களத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இருந்து போரிட்டு வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசிதரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய். உலகளவில் கருத்துக் கணிப்புகள் ஏதும் உருப்படியாக இருந்ததில்லை. நாங்கள் 23 ஆம் தேதி வரை காத்திருப்போம்.” எனத் தெரிவித்திருந்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  “அதிமுக குறைவான இடங்களையே பிடிக்கும் என்பது கருத்துக்கணிப்பு இல்லை; கருத்து திணிப்பு.” எனத் தெரிவித்தார். மேலும், 2016ஆம் ஆண்டு வெளியான கருத்துக்கணிப்பைப் பொய்யாக்கினோம். அதேபோல தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போதைய கருத்துக்கணிப்பையும் பொய்யாக்குவோம். புதுச்சேரி உட்பட 39 மக்களவை தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்” எனக் கருத்து தெரிவித்தார் முதல்வர்.

தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பின் முடிவு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பதாவது, “கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை.”

“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மோசடி கணிப்புகளைப் புறந்தள்ளுவோம்; வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்துவோம்” என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவும், கருத்துக் கணிப்பு முடிவும்

இந்தியாவில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்படி இருந்தது எனவும் இந்த கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவுகளில் எந்தளவுக்கு சரியானதாக அமைந்தது என்பது குறித்து காணலாம்.

1998ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக 252 இடங்களையும் காங்கிரஸ் 166 இடங்கள் பிடிக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறியபடியே  பாஜக கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைத்தது. அப்போது வாஜ்பாய் பிரதமரானார். ஆனால் அந்த ஆட்சி 13 மாதமே நீடித்தது. பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக தனது ஆதரவை விலக்கிக்கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது.

அடுத்த ஆண்டே, அதாவது 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜக 296 இடங்களையும் காங்கிரஸ் 134 இடங்கள் பிடிக்கும் எனவும் பாஜக ஆட்சியமைக்கும் எனவும் தகவல் வெளியானது. அதன்படியே வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். அந்த சமயத்தில் பாஜகவுடன் கூட்டணியில் திமுக இருந்தது.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் பாஜக 296 இடங்களையும் காங்கிரஸ் 134 இடங்கள் பிடிக்கும் எனவும் இதனால் மீண்டும் பாஜகதான் ஆட்சியமைக்கும் என தகவல் வெளியானது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தன. பாஜக 189 இடங்களையும், காங்கிரஸ் 222 இடங்களையும் பிடித்தது. கூட்டணி கட்சிகள் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பல்வேறு, சர்ச்சைகளுக்கு பின்பு மன்மோகன் சிங் பிரதமரானார். இம்முறை கருத்துக் கணிப்பு பொய்த்துப் போனது.

2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜகவும் காங்கிரஸும் சரிசமமான தொகுதிகளை கைப்பற்றும் என்று சில ஊடகங்களும், பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று சில ஊடகங்களும் முடிவுகளை வெளியிட்டன. ஆனால் முடிவில் பாஜக 159 இடங்களையும், காங்கிரஸ் 262 இடங்களையும் பிடித்தது. இதனையடுத்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியமைத்தது. மீண்டும் மன்மோகன் சிங் பிரதமரானார்.

2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், பல ஊடகங்களும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என தெரிவித்திருந்தன. அதேபொன்று பாஜக 336 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் 59 இடங்களை கைப்பற்றி வரலாற்று தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து பாஜக தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியமைத்து நரேந்திர மோடி பிரதமரானார்.

கருத்துக் கணிப்புகளும், தேர்தல் முடிவுகளும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதற்கு கடந்த கால கருத்துக்கணிப்புகள் சான்றாக இருக்கின்றன. பலமுறை கருத்துக் கணிப்புகள் தோல்வியடைந்துள்ளன. எனவே, (2019) தற்போதும் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை கூறமுடியாது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ஆம் தேதி வரை காத்திருப்பதே சரியானதாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன.