“அரை மணி நேரம் படித்துப் பார்த்தும் உங்கள் மனுவை புரிந்து கொள்ள முடியவில்லை. பிழைகளைச் சரி செய்து விட்டு, பின்னர் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்யுங்கள்.” என்று மனுதாரருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவைச் சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது மத்திய அரசு. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. காஷ்மீர் அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காஷ்மீரில் கொந்தளிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, அப்பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் கிளம்பிய நிலையில், சிலர் ஆதரவு கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் வழக்கறிஞர் மனோகர் லால் ஷர்மா. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த மனுவில் ஏராளமான பிழைகள் உள்ளன. மனுவை அரை மணி நேரம் படித்துப் பார்த்தும் புரிந்து கொள்ள முடியவில்லை.” என கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள்.
மேலும், “குடியரசு தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் உத்தரவு என்றால் எதைக் குறிப்பிடுகிறீர்கள். அதில் உள்ள அம்சங்கள் என்ன, ஏன் அதனை ரத்து செய்யக் கோருகிறீர்கள். எந்த விவரமும் மனுவில் இல்லை. என்ன மாதிரியான வழக்கு எனப் புரிய வில்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படக்கூடியது. ஆனால் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 5 வழக்குகள் உள்ளன. பிழைகளைச் சரி செய்து வழக்கறிஞர்கள் மீண்டும் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’’ எனக் கோபமாக கூறினார் ரஞ்சன் கோகாய்.